Archive for செப்ரெம்பர், 2009

எண்ணியுளம் தேம்பியதே!

20/09/2009

திருமுருகனார்அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.

மறைந்த முனைவர் இரா.திருமுருகனார்க்காக நான் உளமேங்கி அளித்த இன்னொரு நினைவேந்தற் பாட்டு. தன் உடலைக்கூட மருத்துவ ஆய்விற்காக உவந்தளித்த சான்றோர் அவர். உடல் பொருள் ஆவி அத்தனையும் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்மண்ணுக்கும் ஈந்த ஈகை வேந்தர் அவர். தமிழிசையையும், தமிழிலக்கணத்தையும் ஒரு சேர அறிந்திருந்தவர்கள்/ அறிந்திருப்பவர்கள் வெகுசிலரே. இவ்விரண்டிலும் ஆர்வமிருக்கும் எம்போன்றோர்க்கு அவர்தம் இழப்பு பேரிழப்பே!

திருமுருக எண்ணியுளந் தேம்பியதே!
————————————-

தீச்சொரியுஞ் சொல்லே! தெளிதமிழே! கூர்வாளே!
கூச்செரியச் செந்தமிழின் கோதுரைத்த – சூச்சுமமே!
மண்ணுதித்த நம்மினத்தின் மாமறவ! நும்மறைவை
எண்ணியுளந் தேம்பி யது!

இயல்மொழியா மெந்தமிழை ஏற்கா திளையோர்
அயல்மொழிதான் வேண்டுமென் றாடுங் – கயமையினைக்
கண்டுளமே வெம்பியதால் காற்றேறிப் போனீரோ?
எண்ணியுளந் தேம்பி யது!

சந்தயிசை காட்டுகின்ற தாளத்தைக் கற்றதனாற்
சிந்தென்னுஞ் சீர்மையினைத் தேர்ந்திசையாய்த் – தந்தவரே!
விண்ணகமே நுந்தமிழை வேண்டியதாற் சென்றீரோ?
எண்ணியுளந் தேம்பி யது!

பாவேந்தர் பாதைவழிப் பாசறையின் போர்வாளே!
மூவேந்தர் காத்துநின்ற முத்தமிழின் – மாவேந்தே!
பண்ணார் தமிழணங்கைப் பாருலகி லார்காப்பார்?
எண்ணியுளந் தேம்பி யது!

பன்னீரின் பூமழையாய்ப் பாட்டோலைக் கம்பனுக்கும்
கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டாய்ப் – பண்ணெமக்கும்
ஒண்டமிழி லீங்கினிமேல் ஓன்றாக ஆர்தருவார்?
எண்ணியுளந் தேம்பி யது!

தண்டமிழிற் றூயகலித் தாழிசையும், வானூருங்
கொண்டலென மூவண்ணங் கொட்டியநற் – பண்ணேறே!
மண்மணக்கும் முத்தமிழ்நாம் மாந்திடவே ஆரிசைப்பார்?
எண்ணியுளந் தேம்பி யது!
——————————————————-
மூவண்ணம் = குறில் வண்ணம்/ நெடில் வண்ணம்/ சித்திரவண்ணம்
கொண்டல் = மழைமேகம்
பன்னீர் மழை, பாட்டோலை கம்பனுக்கு இவை இவரெழுதிய நூல்களின் பெயர்கள்
அன்பன்
இராஜ.தியாகராஜன்
http://www.pudhucherry.com

Advertisements

மறைந்த சுடர்!

20/09/2009

திருமுருகனார்

அன்புடையீர்

எங்களூரிலிருந்து எங்கும் ஒளிவீசி தமிழ் போற்றிய இலக்கணச்சுடர், தீந்தமிழ்க் காவலர், இன்னிசை வித்தகர், சிந்துப்பாடலுக்கு முதன்முறையாக இலக்கணம் கண்ட மூத்தவர், முனைவர் இரா. திருமுருகனார் மறைவிற்காக இரங்கி நினைவேந்தலில் அளித்த பாடலிது:

நச்சரவை மாய்ப்ப தெவர்?
———————————————-

செஞ்சாந்து வண்ணமெனத் தீந்தமிழில் சொல்லெடுத்து
அஞ்சாத போர்முரசாய் ஆர்த்தீரே! – நஞ்சுமிழ்ந்தே
நந்தமிழை சாய்க்கின்ற நச்சரவை ஈங்கினிமேல்
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

விருதுகளைத் தேடும் வியனுகலில் ஊதிச்
சருகெனவே தள்ளிவிட்ட சான்றோய்! – திருமுருக;
செந்தமிழைச் சீரழிப்போர் சிந்தனையை ஈங்கினிமேல்
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

எருமையென்றே நந்தமிழர் ஈங்கிருப்பைக் கண்டே
வருந்தியதால் விட்டீரோ வாழ்வை! – திருந்தாது
சந்தப்பா வென்றே தமிழடுக்கும் வெறுமையினை
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

எம்போன்றோர் கற்றிங்கு யாக்கின்ற சொல்லடுக்கை
செம்மையுற செய்துவிட்ட செவ்வேளே! – எம்பாட்டில்
முந்திவரும் பாப்பிழையை முன்னின்(று) உமைப்போலே
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

அன்பன்
இராஜ.தியாகராஜன்
http://www.pudhucherry.com

ஒற்று மிகும் இடங்கள்

20/09/2009

அன்புடையீர்

தமிழ்

தமிழ்

இராஜ.தியாகராஜனின் வணக்கம்.  முதலில் பொதுவாக ஒற்று மிகும் இடங்களைப் பற்றி பார்ப்போம்.

இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் ஒற்று மிகும் (உருபு = ஐ):-
(எ-கா)
இலக்கணத்தை + படித்தேன் = இலக்கணத்தைப் படித்தேன்,
இலக்கியத்தை + கண்டேன் = இலக்கியத்தைக் கண்டேன்,

நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = கு):-
(எ-கா)
தமிழுக்கு + பொன்னாள் = தமிழுக்குப் பொன்னாள்
தேர்வுக்கு + போனான் = தேர்வுக்குப் போனான்

ஏழாம் வேற்றுமை உருபையடுத்து மிகும் (உருபு = இடை):-
(எ-கா)
நல்லாரிடை + புக்கு = நல்லாரிடைப் புக்கு

ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் மட்டும் மிகும் (உருபு = அது, உடைய):-
(எ-கா)
யானை + கால் = யானைக்கால் (யானையினது கால்)

இரண்டு, மூன்று, ஐந்து, எழு ஆகிய உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைகளில் மிகும் :-
(எ-கா)
இரண்டாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மோர் + குடம் = மோர்க் குடம் (மோரை உடைய குடம்)
மூன்றாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மர + கதவு = மரக் கதவு (மரத்தால் ஆன கதவு)
ஐந்தாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மலை + கல் = மலைக் கல் (மலையினின்று வரும் கல்)
ஏழாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
நீர் + செடி = நீர்ச் செடி (நீரின் கண் உள்ள செடி)

பின்வரும் சொற்களையடுத்து வரும் வல்லெழுத்துகள் மிகும்:- அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி, அங்கு, இங்கு, எங்கு, இனி, தனி, என, மற்ற, மற்று, மற்றை, முன்னர், பின்னர், எல்லா, அவ்வகை, இவ்வகை, எவ்வகை.

(எ-கா)
அந்த + கரண்டி = அந்தக் கரண்டி. இந்த + சிற்பம் = இந்தச் சிற்பம். எந்த + பட்டம் = எந்தப் பட்டம். அப்படி + போனான் = அப்படிப் போனான்.
இப்படி + பார்த்தான் = இப்படிப் பார்த்தேன். எப்படி + கண்டான் = எப்படிக் கண்டான். அங்கு + சென்றான் = அங்குச் சென்றான்.
இங்கு + தங்கினான் = இங்குத் தங்கினான். எங்கு + கண்டாய் = எங்குக் கண்டாய். இனி + கேள் = இனிக் கேள். தனி + தமிழ் = தனித் தமிழ்.
என + சொன்னாள் = எனச் சொன்னாள். மற்று + பாடலாம் = மற்றுப் பாடலாம். மற்ற + குதிரைகள் = மற்றக் குதிரைகள். மற்றை + கனவு = மற்றைக் கனவு.
முன்னர் + கண்ட = முன்னர்க் கண்ட. பின்னர் + கேட்ட = பின்னர்க் கேட்ட. எல்லா + பெண்கள் = எல்லாப் பெண்கள். அவ்வகை + சிற்பம் = அவ்வகைச் சிற்பம். இவ்வகை + பண்பு = இவ்வகைப் பண்பு. எவ்வகை + தோற்றம் = எவ்வகைத் தோற்றம்.

பின்வரும் சொற்களையும், பொருள் தரும் தனி நெடியலையும் அடுத்து மிகும்:-
தீ, பூ, ஈ
(எ-கா)
தீ + கனல் = தீக்கனல்,
பூ + சரம் = பூச்சரம்,
ஈ + பண்டம் = ஈப்பண்டம்

ஓரெழுத்தொரு மொழி:-

பின்வரும் எழுத்துகளில் வருமொழி, பெயர்ச் சொல்லாக இருந்தால் மட்டுமே மிகும்:-
அ, இ, எ, ய், ர், ழ்
(எ-கா)
அ + பக்கம் = அப்பக்கம்,
இ + குரல் = இக்குரல்,
நாய் + பாசம் = நாய்ப்பாசம்
தமிழர் + பண்பு = தமிழர்ப் பண்பு
தமிழ் + பயன் = தமிழ்ப் பயன்

உவமைத் தொகை:-
(எ-கா)
மதி + குடை= மதிக் குடை (மதியொத்தக் குடை)

பண்புத் தொகை:-
(எ-கா)
புது+ பெண்= புதுப்பெண்(புதுமையான பெண்)

“த்து” என்று முடியும் சொற்களையடுத்து:-
(எ-கா)
பார்த்து + போனான் = பார்த்துப் போனான்
காத்து + கிடந்தான் = காத்துக் கிடந்தான்

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அடுத்து மிகும்:-
(எ-கா)
பாடா + கிளி= பாடாக் கிளி (பாடாத கிளி)
ஒடா + தேர் = ஒடாத் தேர் (ஓடாத தேர்)

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை அடுத்து மிகும்:-
(எ-கா)
சாரை + பாம்பு = சாரைப் பாம்பு
மருத்துவ + கல்வி = மருத்துவக் கல்வி

பின்வரும் சொற்கள் வினையெச்சங்களாக வந்தால் மட்டுமே ஒற்று மிகும்.
ஆக, ஆய், போய், அன்றி, இன்றி, போல்

(எ-கா)
நன்றாக + பாடினாள் = நன்றாகப் பாடினாள்.
ஓடுவதாய் + சொன்னான் = ஓடுவதாய்ச் சொன்னான்.
போய் + செய் = போய்ச் செய்.
அன்றி + சொல்லான் = அன்றிச் சொல்லான்.
இன்றி + போவான் = இன்றிப் போவான்.
போல + செய்= போலச் செய்.

இனி ஒற்று மிகா இடங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்

ஒற்றுமிகா இடங்கள்

20/09/2009

அன்புடையீர்,

இராஜ.தியாகராஜனின் வணக்கம்.

தமிழ்

தமிழ்

போன பதிவில் ஒற்றுமிகும் இடங்களைக் கோடிட்டுக்  காட்டினேன்.  இப்போது ஒற்றுமிகா இடங்களைப் பற்றி கூறுகிறேன்.

பொதுவான விதிகள் (ஒற்று மிகா இடங்கள்):
—————————————————————-

அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அவை, அது, இவை, இது, எவை, எது, யாவை, ஏது – இந்த சொற்களுக்குப் பின் ஒற்று மிகுவதில்லை.
(எ-கா)
அத்தனை + பெரியது = அத்தனை பெரியது.
இத்தனை + சிறியது = இத்தனை சிறியது.
எத்தனை + தூரம் = எத்தனை தூரம்?
அவ்வளவு + கருணை = அவ்வளவு கருணை.
இவ்வளவு + கோபம் = இவ்வளவு கோபம்.
எவ்வளவு + தூரம் = எவ்வளவு தூரம்?
அவை + பெரியவை = அவை பெரியவை.
அது + பெரியது = அது பெரியது.
இவை + சிறியவை = இவை சிறியவை.
இது + சிறியது = இது சிறியது.
எவை + தந்தன = எவை தந்தன?
எது + தந்தது = எது தந்தது?
யாவை + பெரியவை = யாவை பெரியவை?
ஏது + கடல் = ஏது கடல்?

எழுவாய்த் தொடர்களில் (முதல் வேற்றுமை), ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து பிற பெயரெச்சங்களில், வினைத்தொகைகளில், உம்மைத்தொகைகளில், “த்த”, “ந்து” என முடியும் சொற்களையடுத்து ஒற்று மிகாது.
எடுத்துக்காட்டுகள் கீழே:-

எழுவாய்த் தொடர் (முதல் வேற்றுமை):-
(எ-கா)
அவர் + படித்தார் = அவர் படித்தார்,
கனிமொழி + சிரித்தாள் = கனிமொழி சிரித்தாள்,

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர பிற பெயரெச்சங்கள்:-
(எ-கா)
நல்ல + பாம்பு = நல்ல பாம்பு
அடித்த + புயல் = அடித்த புயல்

வினைத் தொகைகள்:-
(எ-கா)
ஊறு + காய் = ஊறுகாய்
வளர் + பிறை =வளர்பிறை

உம்மைத் தொகைகள்:-
(எ-கா)
இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்) சேர +சோழ + பாண்டியர் = சேர சோழ பாண்டியர் (சேரரும், சோழரும், பாண்டியரும்)

“த்த, ந்து” என முடியும் சொற்கள்:-
(எ-கா)
பார்த்த + பெண் = பார்த்த பெண்
வந்து + சென்றாள் = வந்து சென்றாள்

தமிழ்மொழியில் ஒற்றுப் பிழைகள்!

20/09/2009
தமிழ்

தமிழ்

சொல்-அச்சு
தளத்தில் என்னுடைய முதல் வலைப்பூ இது.   தமிழுக்கும் அமுதென்று பேர்.  கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் மூத்தமொழி எங்கள்மொழி என்றெல்லாம் சொல்வோம்.  ஆனால் பயன்படுத்துகையில் இலக்கணப் பிழைகளை தவிர்க்க பெரும்பாலோர் முயற்சிப்பதே இல்லை.  கரணீயங்கள்:

  1. தவறை உணராமல் சரியென்றே நிச்சயமாக எண்ணிக்கொண்டு பயன்படுத்துதல்.
  2. தவறு என்று அறியாமல் பிழையாகவே பயன்படுத்துதல்.
  3. தவறை இலக்கணப்படி தவறென்று அறிந்தாலும்,  இன்றைய காலகட்டத்துக்கு இதுவே சரி என்று பயன்படுத்துதல்.

இப்படி பலர் உண்டு.   ஆனால் ஆங்கிலத்தில் “a”, “an”, “the” பயன்பாட்டை மட்டில் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று 100க்கு 99 விழுக்காடு ஆங்கிலம் அறிந்த தமிழன்பர்கள் எல்லோருமே சொல்வார்கள்.  நான் சொல்ல வருவது, ஆங்கிலத்தில் தவறு செய்ய வேண்டும் என்பதல்ல.  தமிழிலும் இலக்கணப் பிழையற எழுத  முயற்சிக்க வேண்டுமென்பதே!

தமிழில் “ஒரு”, “ஓர்” பயன்பாடு
———————————————
முதலில் ஒரு / ஓர் பற்றிய இலக்கண விதிக்குச் சான்றாக இருப்பது கீழிருக்கும் தொல்காப்பிய நூற்பா:-

முதலீர் எண்ணின்முன் உயிர்வருகாலைத்
தவலென மொழிப உகரக்கிளவி
முதனிலை நீடல் ஆவயினான  (தொல். எழுத்து 455)

இந்த நூற்பாவின் விளக்கம்:  அடுத்து உயிரெழுத்து வந்தால்ஒரு இரு என்ற முதலிரண்டுஎண்களின் இறுதியிலுள்ள உகரம் கெடும் என்பதும், முதலிலுள்ள குறில் நீண்டு நெடிலாகும் என்பதும், தெளிவு.  ஒரு இரு என்பவற்றின்முதலிலுள்ள குறில்கள், அடுத்து உயிர்வந்தால் நெடிலாகும் என்றால், அடுத்து மெய்வந்தால் இருந்தபடியே இருக்கும்.

அடுத்து நன்னூலின் நூற்பா:  (பொதுவானது) :

‘ஒன்றன் புள்ளி ரகரமாக இரண்டன் ஒற்றுயிர் ஏகஉவ் வருமே’ – இஃது பொதுவான தென்றாலும், இதன் உரையாசிரியர் இதற்கு விளக்கமாக, “’ரகரமெய் உகரம் பெறுவது வருமொழி முதலில் மெய்வரின் எனவும் உயிர் வரின் உகரம் பெறாது எனவும் கொள்க”  என்கிறார்.   (ஆனால் இதனை கட்டாயம் என்று நன்னூலும் கூறவில்லை!).  ஆகவே தொல்காப்பியமே தமிழிலக்கண முதல் என்பதால்,  அதனை பின்பற்றியே இந்த கட்டுரை!

தொல்காப்பிய நூற்பாவை பின்பற்றி, எப்போது “ஒரு”  என்ற சொல்லையும், “ஓர்” என்ற சொல்லையும் பயன்படுத்த வேண்டுமென்று இங்கே கூறப் போகிறேன்.   இது ஆங்கிலத்தில் “ a” , “an”   என்ற பயன்பாட்டுக்குக்கு நேர்.

ஒரு வருமொழிக்கு முன் (சொல்லுக்கு முன்) “ஓர்”  என்ற சொல்லைப் பெய்து பயன்படுத்த வேண்டுமெனில்,  அந்த வருமொழிச் சொல்  உயிரெழுத்தால் தொடங்குதல் வேண்டும். (எ-கா)

ஒர் அளவு, ஓர் ஆடை,  ஓர் இட்டலி, ஓர் ஈட்டி, ஓர் உலகம், ஓர் ஊஞ்சல், ஓர் எலி, ஓர் ஏணி, ஓர் ஐயம், ஓர் ஒட்டகம், ஓர் ஓடம், ஓர் ஔடதம்.

அதுபோல அந்த வருமொழி  ஏதேனும் உயிர்மெய் எழுத்தால் தொடங்கினால் “ஒரு” என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.  (எ-கா)

ஒரு மனம் (அவளுக்கென்றோர் மனம் – என்ற திரைப்படம் இசகுபிசகாக உங்களுக்கு இப்போது நினைவிற்கு வந்திருக்குமே(!))

இதில் விதிவிலக்கு பாவலர்க்கு மட்டுமே!  ஓசை நயங்கருதி  குறைந்த அளவில் மாறிப்  பயனான பாடலகள் நிறைய  உண்டு.

ஒற்றுப் பிழைகள் (அ)  சந்திப் பிழைகள்:

———————————————————

இதற்கு அடுத்து எல்லோர் காலையும் வாரிவிடுவது இலக்கணத்தில் ஒற்றுப்பிழை என்று சொல்லப்படும் சந்திப்பிழைகள்.  எங்கே “க்” போடவேண்டும், எங்கே போடக்கூடாது என்பதறியாமலேயே, பலரும் பட்டறிவால் ஓரளவுக்குச் சரியாகவே போட்டுவிடுகிறோம்.   எனினும் போடக்கூடாத இடத்தில் பெய்து பயன்படுத்துவதும், போட வேண்டிய இடத்தில் போடாமல் போவதும் நிறையபேர் இன்னமும் செய்கிறார்கள்.

அடுத்து வரும் பதிவுகளில் வரும் எடுத்துக்காட்டுகளின் படி  இரு சொற்கள் சேரும் போது, இரண்டாவது சொல்லின் முதலெழுத்து க், ச், த், ப், முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் – க, கா, ச, சா, த, தா, ப, பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேரும். இதனையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே.   சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பாலான பிழைகளை நீக்கிவிடலாம்.  முதலில் ஒற்று மிகும் இடங்களைப்பற்றி கூறுகிறேன்.

இவண் அன்பன்

இராஜ.தியாகராஜன்

www.pudhucherry.com
http://www.tyagas.blogspot.com