Archive for மே, 2011

மேலும் சில பாடங்கள்…

15/05/2011

கீழிருக்கும் பாடல்கள் நான் என்னுடைய இளமையில் எழுதி, சந்தவசந்தத்தில் பாடங்கள் என்ற தலைப்பில் பாவரங்கில் மறுபதிவு செய்தேன்.   குறிப்பாக பல இடங்களில் மோனைத் தொடை விளங்காமல் போனாலும், மற்றைய இலக்கணங்கள் பொருத்தவரை வழுவாது அமைந்துள்ளன.

காதற் பாடம்: (நேரிசை வெண்பா)

வாழையெழிற் றண்டாய் வழவழக்கும் காலுரச
தாழைமணம் வீசும் கருங்கூந்தல் – வீழ்ந்திழைய
காந்தள் மலர்க்கை வளைத்தே இதழ்பொருத்தி
தேந்துளி முத்தமீந் தாள்.

காதற் பாடம்: (இன்னிசை வெண்பா)

சோலைக் குளமேவுந் தாமரையாய்ப் பெண்ணிருக்க
சாலப் பரிகின்ற செங்கதிராய் நானிருந்தேன்;
காலக் கரையான் கரைத்தழிக்கக் காதலெனும்
கோலம் அழிந்ததுவே காண்.

உறவுப் பாடம்: (வெண்டளையான் வந்த அறுசீர் விருத்தம்)

தோய்ந்த பரிவால் கவினுறு
…..தோற்றங்கள் தாயவளேக் காட்டியதும்;
ஆய்ந்தே உலகின் அறிவதனை
…..அன்போடு தந்தையவர் ஊட்டியதும்;
பேயாய்ப் பிடித்தென்னைப் பாடெனப்
…..பீடித்த ஆசைகள் சாற்றியதும்;
தீயாம் அவற்றின் துயரமறத்
…..தெய்வம்போல் அண்ணன்கள் தேற்றியதும்;

சுற்றமெனும் உண்மை உறவுகள்
…..தோற்றிய பாடமென நானுலகில்,
கற்றது; நானுலக மேடையிலே
…..கற்றதனால் நெஞ்சினில் வேதனைகள்,
உற்றது; வீணான வேதனைகள்
…..உற்றதனால் வாழ்வினில் பட்டறிவே,
பற்றியது; பட்டறிவும் பற்றியதால்
…..பாரில் அடைந்தேன் உயர்வே!

வளர்ச்சிப் பாடம்: (கலிவெண்பா)

அறியாப் பருவ அகண்டவெளிப் பாடம்;
உறக்கத்தில் நேர்ந்த உருவெளியின் தேடல்;
சிறுவயதுச் சின்னம்; சிதைந்த சிதறல்;
வெறுமைக் கனவுகளின் வேடிக்கை உலகம்!

அறிவியலின் பாடத்தை ஆர்வமாய் விரும்ப,
செறிவான செல்வம் தகையாத சூழல்,
கறந்திட் டதனால் கனவும் கலைந்து,
பொறுப்பாய்ப்  பொருளியல் கற்கவே நேர்ந்தேன்!

வருத்தம் இருந்தாலும் வாழ்க்கை நடப்பில்,
சருகாம் வழியினிலே தாய்தந்தை தந்த
இருப்பாம் இதனையே இன்முகமாய்ப் போற்றி
இருக்கும் இயல்பே எழில்!

Advertisements

அன்பின் வள்ளல் அன்னை தெரேசா.

10/05/2011

31.10.2010அன்று புதுவை மாநில படைப்பாளிகள் கூட்டமைப்பும், இந்திய அரசு தென்னக பண்பாட்டு மையம், தஞ்சையும் இணைந்து திங்கள்தோறும் நடாத்தும் நாடக, கவிதை, பாராட்டு விழாவில், நடைபெற்ற கவிதைப் போட்டில் பரிசு வென்ற என் கவிதை. கட்டமைப்பு எண்சீர் விருத்தம்.

தாழ்ந்தவரை தம்மைந்தர் எனவே எண்ணி
…..சலிப்பின்றி உழைத்திட்டத் தொண்டின் செம்மல்!
ஏழ்மையினர் தாமுற்ற துன்பங்  கண்டே
…..எழுந்துள்ளம் உருகிவிட்ட அன்பின் வள்ளல்!
வாழ்வியலில் தாம்பெற்ற மேன்மைக் கல்வி
…..மாந்திரினம் உய்ந்திடவே தந்த செல்வி!
வீழ்ந்தவர்கள் வாழ்வதனில் விடிவைக் காண,
…..விடிவெள்ளி போலுதித்தச் சேவைக் கன்னி!

சற்றும்தன் மனந்தளரா முகில தற்கு
…..தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் பேதம் முண்டோ?,
வற்றாத கங்கையது பார தத்தின்
…..மண்மேலே பாய்ந்துநலம் தருதல் போலே
மற்றவர்கள் தொடத்தயங்கும் தொழுநோ யாலே
…..வளங்குன்றி வாடுகின்ற மனிதர் தம்மை
பெற்றெடுத்தத்  தன்குருதி மக்கள் என்றே
…..பேணுகின்ற சால்பதனை நேரில் கண்டோம்!

அன்னியராய் இருந்திடினும் கருணை வெள்ளம்;
…..அன்பதனால் இந்தியரை ஆண்ட உள்ளம்!
தன்மனத்தால் தூய்மையொன்றே நினைத்த வாய்மை;
…..தன்னலமே கருத்தின்றிக் கொடுத்த தாய்மை;
முன்னின்று களமிறங்கி மற்ற வர்க்கும்
…..முன்னோடி என்றிவரும் உழைத்த தாலே,
நன்னெறிகள் பூண்டிலங்கும் தெரெசா உன்னை
…..நாடெங்கும் போற்றுகிறோம் அன்னை யென்றே!

கையில் விழுந்த கனி..

10/05/2011

இணையத்தில் மரபியலைப் போற்றும் சந்தவசந்தம் குழுவில், ”கையில் விழுந்த கனி” என்ற ஈற்றடிக்காக என்னுடைய 5 வயது மைந்தனைப்பற்றி நானெழுதிய வரிகள்!

நேரிசை வெண்பாக்கள்

கொய்யாக் கனியைக் கவிபாட வேண்டுமென்று
செய்தார் வசந்தமவை சீலத்தோர்! – நெய்தேன்பா;
வைகறைச் செல்வன்தான் வாழ்வி லெமக்கின்று
கையில் விழுந்த கனி.

ஆயிர மாண்டுகள் ஓர்ந்துளங் கூர்ந்திலங்க
தூயநற் றொண்டுகள் செய்தபலன்! – சீயமென
பைந்தமிழ் பாரதியின் பாச்சுளையாய், செல்வனெம்
கையில் விழுந்த கனி.

வீங்கிளந் தென்றலென மேவி, யினித்திடும்
மாங்குயிற் பாட்டின் மழலைக்கா – யேங்கிமனம்
நைந்தவெமக் கின்று நறுந்தமிழாய்ப் பொற்கிழியாய்க்
கையில் விழுந்த கனி.

தெவிட்டாத தீம்பாலாய்த் தெள்ளமுதாய்த் தேனாய்க்
கவினுறுகற் கண்டுக் கவியாய்ப் – புவியுதித்த
வைகறைச் செல்வன்; மலர்ந்த மலரெங்கள்
கையில் விழுந்த கனி.

கடற்கரைக்குப் போனாலும் காந்தியை விட்டே
அடமாய் இறங்கா தழுவான்! – படத்தில்
திருவள் ளுவர்கண்டால் தோ!திரு வென்பான்!
அருணென் றழைப்போம் அழகு!

பாவேந்தை, பாரதியைப் பார்த்தாலே கைகூப்பி
நாவால் வணக்கம் நவின்றிடுவான்! – தாவிமடி
தேடியவன் கேட்பதுவும் சிந்துநதிப் பாட்டினைத்தான்!
ஆடகமாய் வந்தான் அழகு!

மனம் போன போக்கில்.

05/05/2011

ஆற்றாமையால் விளைந்த  பாட்டு…

தான்போன போக்கினிலே தானாட்சி செய்தவரும்
காண்கின்ற நோக்கினிலே கானாட்சி கண்டவரும்
மாண்டபின்னே மீளெழுந்து மறுபடியும் வந்ததுண்டோ?
சீண்டுகிறார் வீணாக சீற்றமிகு சிங்கத்தை!

சீயமனை சிறுவர்களும் தீயினிலே வேகையிலே
தாயகத்தை நாடியவர் சாய்ந்தோய்து போகையிலே
தூயவழிப் பாதையிலே, துயரவொலி கேட்குதம்மா
நேயமனம் ஏங்குதம்மா; நீள்மூச்சு வாங்குதம்மா!

ஆடுமயி லற்புதங்கள் அவரிங்கே கேட்கவில்லை;
கூடுகளாய் மனிதமன கோணலையும் ஏற்கவில்லை;
நாடியவர் கேட்பதெல்லாம்! நாமிருக்கோம் என்றிங்கே
கூடியொரு நல்லவரின் குரல்வேட்டு குமுறலையே!

பாடுகின்ற பகல்வேஷ பாராட்டும் பட்டயமும்
கோடிகளாய் மாலைகளும் குரங்கெனவே தலையாட்ட
வேடிக்கை மனிதர்களும் வீரசூர பம்மாத்தும்
வாடிக்கை ஆனதென்ன! வண்டமிழால் வாழியவே!!!

கோதான கூட்டணியை, கோபுரமாய்ப் பதவிகளை
நூதனமாய்ப் பெறுவதற்கும் நோக்கின்றி வாழ்வதற்கும்
ஆதிமுதல் அடிப்படையே அரசணைதான் எனும்போது
நீதிநெறிக் குகந்தயிடம் நீறிறையும் சுடுகாடோ?

வேதனைகள் ஆங்கெதிரில் வெடித்தெழுந்து மறித்தாலும்;
சோதனைகள் பன்னூறாய் சூழ்தங்கு நெறித்தாலும்;
ஆதரவாய் நாமிருக்க அச்சத்தை விட்டொழிப்போம்;
சோதரனாய் நாமவரின் சோகத்தைச் சுட்டெரிப்போம்!

சொல்ல நினைக்கும் ஆசைகள்..

05/05/2011

சொல்லத்தான் நினைக்குமென் ஆசைகள்
(நேரிசை அகவற்பா)

சொல்லவே யென்மனச் சிந்தனை வானில்
உள்ளதே விடைக ளில்லா ஆசையாம்!
மாநிலம் முழுதும் மலிந்த ஊழல்
காணின் பதைத்துக் கொதித்தி டாமல்
கண்கள் மூடிக்கை குவிக்கும் ஈனமே
மண்ணின் அடியிற் புதைத்து விட்டு;
உள்ளில் ஒன்றும் உதட்டில் ஒன்றும்
கள்ளம் பேசும் கோணற் கட்சியின்
சாதிகள் அரசியல் சாக்கடை புத்தியை
வீதியில் நிறுத்தி வெட்டி விட்டு;
நாட்டின் செல்வமாம் நங்கையர் பிறந்ததும்
காட்டில் விளையும் கள்ளிப் பாலதால்
கொல்லும் வீணரின் கொடும் வழக்கை
தலையற நிச்சயம் தட்டி விட்டு;
உலகில் காணும் வன்முறை விருப்பு
உலவு கின்ற தன்மொழி வெறுப்பு
ஓரினம் அழிக்கும் மதவெறி நாசம்
வீரியம் அறுக்கும் போதைப் பாசம்
எல்லா வற்றையும் ஓட்டி விட்டு
நல்லிணக் கமதுவே நம்முன் மெய்யாய்
ஒருநாள் தோன்று மென்றே
விரிவாய்ச் சொல்லிடத் தானென் னாசையே!

சொல்லத்தான் நினைக்கிறேன்.

05/05/2011

நகர நரகம்- சொல்லத்தான் நினைக்கிறேன்.
(நிலைமண்டில அகவற்பா)

எதுகை மோனை யாப்பின் வழியில்
விதமாய் உதித்து பற்பல வகையில்
வெல்லச் சொற்கள் வெடிக்க சிதறி
சொல்லத் துடிக்கும் சிந்தனை என்னில்!

தூய்மை நேசம் தாய்மை யன்பு
வாய்மை யழகு வளமை கொஞ்சுங்
கிராமிய வாசம்; கவடுக ளில்லாச்
சீராய் வாழ்வின் தெளிவை விடுத்து

பொய்மை யழகுப் புதுக்கு மூற்றாம்
இயந்திர நகரில் இன்பந் தேடி
முயன்று பலப்பல முறையி லோடி
மயக்கும் வலையாம் மதுவை நாடி

சூழுங் கவலைக் கரையா னரிக்க
வாழ்வைத் தொலைக்க மயக்க நகரம்!
ஊரின் நடுவே உயிரென நின்றே
இறைக்கச் சுரக்கும் ஊரணி யில்லை!

காற்றின் மாசினை யுறிஞ்சிக் காக்கும்
மரங்க ளில்லை; மனிதமு மில்லை!
அண்டை மக்கள் வீட்டில் நிகழும்
சண்டை, சேர்க்கை, சகல நடப்பின்

ஆசா பாசம்  அனைத்தும் வலிந்தே
உசாவி யறியுங் கரிசன மில்லை!
உணர்வில் பிரிவை ஒழுக்கக் கேட்டை
முனைந்தே ஊரார் முறையாய்த் தம்முள்

ஒன்றாய் நின்றே அன்பாய்க் கூடி
நன்றாய்ப் தீர்க்கும் மன்ற மில்லை!
குடும்பங் கூடி கூட்டாய் உண்ணும்
கடமை யதுவே காற்றில் பறக்க,

காட்சிப் பெட்டிக் கட்டி யழுதிடும்
நாடகப் பேத்தல்; நசுங்கிய வாழ்வில்
காரது வழங்கும் கொடையே பொய்க்க
நீருக் கலையும் நிலைமை எதனால்?

வண்டிப் புகையை புழுதிப் பெருக்கை
கண்டும் காணாக் கசப்பு வாழ்க்கை;
இகமதி லின்று மனிதன் தேடும்
நகர நரக போதை யிதுவோ?

உண்மை அன்பு உறவின் அண்மை
கனிந்தே துடித்துக் கடுகி யுதவ
மனித நேயம் மலையாய் எழும்ப
சுனாமி அலையாய் இழப்பா வேண்டும்?

மோனை எனும் நயம்-2

05/05/2011

இனி மோனைத் தொடையோத்தினைப் பற்றிய சில பிற்சேர்க்கைகள்:

பேரா. பசுபதி

பிற்சேர்க்கை – 1

கேள்வி:  மோனை பற்றிய ஒரு ஐயம்.  (V. சுப்ரமணியன்)

இன்று சுந்தரர் தேவாரப் பதிகங்கள் சில கேட்டுக் கொண்டிருந்தேன்.  அவற்றுள் ஒன்று கட்டளைக் கலித்துறை என நினைக்கிறேன்.  அந்தப் பதிகத்திலிருந்து ஒரு பாடலைக் கீழே இடுகிறேன்.  இதில் சீர் சீராகப் பார்த்தால் மோனை அதிகம் தெரிவத்இல்லை.  ஆனால், பதம் பிரித்துப் பாடினால் வரிகளின் நடுவில் மோனை தெரிகிறது.

சுந்தரர் தேவாரம் – 7.97.9 திருநனிப்பள்ளி

ஏன மருப்பி னொடுமெழி லாமையும் பூண்டுகந்து
வான மதிளர ணம்மலை யேசிலை யாய்வளைந்தான்
ஊனமில் காழிதன் னுள்ளுயர் ஞானசம் பந்தர்க்கன்று
ஞான மருள்புரிந் தான்நண்ணு மூர்நனி பள்ளியதே!

1.  ஏன-எழில், 2. வான-மதிள்-மலையே-வளைத்தான், 3.  ஊனம்-உயிர், 4.  ஞானம்-நண்ணும்-நனிபள்ளி .
தமிழிலக்கணப்படி இவை சீரின் முதலில் வராததால் மோனை  என்று கருதப்படுவதில்லையா?  அப்படிப் பார்த்தால் இந்தப்  பாடலில் மோனை இல்லையா?

இனி பதம் பிரித்து:

ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டு உகந்து
வான மதிள் அரணம் மலையே சிலையாய் வளைத்தான்
ஊனம் இல் காழி தன்னுள் உயர் ஞான சம்பந்தர்க்கு அன்று
ஞானம் அருள் புரிந்தான் நண்ணும் ஊர் நனி பள்ளியதே!

(தற்செயலாக நான் கொடுத்துள்ள பாடலில் மூன்றாம் சீரில் நான்கு அசைகள் உள்ளன (சம்பந்தர்க்கன்று) கட்டளைக் கலித்துறை பற்றிய வெறு மடல்களில் பேசப்பட்ட விஷயம் இது!)
அன்புடன்
*V. சுப்ரமணியன்*

பதில்: பேரா. பசுபதி

இன்னும் பல பாடல்களிலும் இப்படி வரும்.  பல சந்தப் பாடல்களிலும், வகையுளியைத் தவிர்க்க முடியாததால் இப்படி எழுத்துச் சீரின் உள்ளே வரும்.

கந்தரனுபூதியில் ஒருகாட்டு:
நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருக (நெ, நெ)

கம்பனில் இரு காட்டுகள்:
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் (உ, உ)
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே (த, ச)

இலக்கணப்படி சீரின் முதலில் மோனை எழுத்து இல்லையென்றாலும், இப்பாடல்களில் மோனையால் வரும் ஓசை குறைவதில்லை.  சீருக்குள் மறைந்திருக்கும் மோனை எழுத்து இந்த ஓசைக் குறையை நிறைவு செய்து, ஒரு ஜாலத்தைச் செய்கிறது.  இதனையும் ஒரு வகை மோனையாகக் கருதலாம்.  இதைக் கள்ளமோனை என்பார் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள். சீரின் உள்ளே வருவதால் உள்ளடங்கு மோனை என்று சொல்வர் முனைவர் இரா.திருமுருகன்.  இம்மாதிரிப் பாடல்களை, மோனை தெரியும்படி, கனகல்லு நெகிழ்ந்துருக, தாம் உள, அன்னவர்க்கே சரண் என்று மோனை எழுத்துகளை அழுத்திப் படித்து ஓசையைக் கூட்டவேண்டும்.  இத்தகைய மோனைச் சீர்க்குள் நெடிலை அடுத்தோ, குற்றொற்றை அடுத்தோ வருதலே பெரும்பான்மை.  குறிலை அடுத்து வரினும் – குறிலை விட்டிசைத்து மோனை புலப்பட ஒலித்தலே ஏற்புடைத்து – என்பார் வித்வான் தி.வே. கோபாலய்யர்.

பிற்சேர்க்கை – 2

பேரா. பசுபதி.

கேள்வி: மோனை பாடல்களில் எங்கே வரவேண்டும்?

பதில்: பொதுவாகச் சொன்னால், நான்கு சீர் அடிகளில் 1-3  மோனை சிறப்பு.  ஐந்து சீர் அடிகளில் 1-5 சிறப்பு;  1-3-5 இன்னும் சிறக்கும்.  ஆசிரிய விருத்தங்களில், அந்தந்த விருத்தத்திற்குரிய சீர் வாய்பாடினைப் பொறுத்து வரும்.   விவரமாக அறிய பாடல் படிவங்கள் கட்டுரைகளையும், அவற்றில் உள்ள காட்டுகளையும் பார்க்கவும்.  முன்னோரின் இலக்கிய உதாரணங்களே நல்ல வழிகாட்டிகள்.

பேரா. பசுபதியின் இந்த எதுகை மோனை பற்றிய விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சிறிது ஐயமிருக்காது!  இனி பாடல் அடிகளைப் பற்றியும், பாவினங்களைப் பற்றியும், அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!

மோனை எனும் நயம்-1

05/05/2011

தொடையோத்தின் ஒரு பகுதியான மோனைத் தொடை என்பது.  ஒரு கவிதைக்கு அழகினைத் தரும்
அணிகலன் ஆகும்.  இதனால் ஓசைநயம் கூடி, கவிதை கவிதையாக மிளிர்கிறது.  ஆதாலால் தான்
இதை மோனை என்னும் நயம் என்று சொன்னேன்.  மோனை இல்லாத பாடல்கள் பல இருக்கலாம்.
ஆயினும் அது இருக்கும் பாட்டின் அழகே தனி!  பாவலர் பெருந்தகை, பேரா. பசுபதி
அவர்களின் மோனை பற்றிய விளக்கம் கீழே!

மோனை – பேரா.பசுபதி

மோனை:  ஒரு சொல்லுக்கும்
இன்னொரு சொல்லுக்கும் முதலில் உள்ள எழுத்துகள் ஒத்த ஓசையுடன் இருப்பது மோனை.

(கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாயே!  என்ற சொற்றொடரில் க-க-கா)

உயிரெழுத்தில் மோனை

அ,ஆ, ஐ, ஔ – ஓரினம்

இ, ஈ, எ, ஏ – ஓரினம்

உ,ஊ,ஒ,ஓ – ஓரினம்

காட்டுகள்:

அகல உழுவதை ஆழ உழு (1-3 சீர்கள் பொழிப்புமோனை)

இருதலைக் கொள்ளி எறும்பு போல (1-3)

ஓட்டைச் சங்கால் ஊத முடியுமா? (1-3)

உயிர்மெய்யில் மோனை

க,கா, கை, கௌ – ஒரே இனம்

கி,கீ, கெ, கே – ஒரே இனம்

கு,கூ, கொ, கோ – ஒரே இனம்

ப,பா, பை,பௌ – ஒரே இனம்

…. இப்படியே

சில விசேஷ இனங்கள்:

ச-த ஒரே இனம்.  (எ.கா) தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் (தொ-சு -மோனை)

ம-வ ஒரே இனம். (எ-கா) வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது (வ-மா- மோனை)

ந-ஞ ஒரே இனம்.(எ-கா) நலிந்தோர்க்கில்லை ஞாயிறும் திங்களும் (ந-ஞா- மோனை)

பழம் நூல்களில் யா-விற்கு – இ, ஈ, எ, ஏ மோனை என்பர்.

தற்காலத்தில் – யாவிற்கு அ, ஆ, ஐ, ஔ-வும் சொல்லலாம்.

ஜ-ச, த – ஓரினம்;  ர-ல — இ, ஈ, எ, ஏ மோனை இனம்.

ஒரு பழம் வெண்பா மோனை வாய்பாடினை நினைவுறுத்த:

அகரமொடு ஆகாரம் ஐகாரம் ஔகான்

இகரமொடு ஈகாரம் எஏ – உகரமொ(டு)

ஊகாரம் ஒஓ; ஞந, மவ தச்சகரம்

ஆகாத அல்ல அநு.

கோல மலருக் குள்ளே மணமுண்டு! (மோனையா?) – பார்த்தால் கோ-கு மோனை போல
இருக்கிறது.  ஆனால் இது மோனை இல்லை.  ஏனென்றால், அங்கே இருக்கும் சொல் – உள்ளே:
ஆதலால் கோ-உ மோனை இல்லை.

நாலு நீர் அடிகளில் 1-3 சீர்களில் பொழிப்பு மோனை இருப்பது சிறப்பு.

மேற்கூறியவற்றிலிருந்து தொகுத்த மோனை
அட்டவணை:

அ,ஆ,ஐ, ஔ, யா (தற்காலம்)

க,கா, கை, கௌ

ச,சா, சை, சௌ, த,தா, தை, தௌ, ஜ, ஜா

ந, நா, நை, நௌ, ஞ, ஞா

ப,பா, பை, பௌ

ம,மா, மை, மௌ, வ, வா, வை, வௌ

இ, ஈ, எ, ஏ, ர, ல (யா, பழம் நூல்களின் படி)

கி, கீ, கெ, கே

சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே, ஜி, ஜீ, ஜெ, ஜே

நி, நீ, நெ, நே, ஞி, ஞீ, ஞெ, ஞே

பி, பீ, பெ, பே

மி, மீ, மெ, மே, வி, வீ, வெ, வே

உ, ஊ, ஒ, ஓ

கு, கூ, கொ, கோ,

சு, சூ, சொ, சோ, து, தூ, தொ, தோ, ஜு, ஜூ, ஜொ, ஜோ

நு, நூ, நொ, நோ

பு, பூ, பொ, போ

மு, மூ, மொ, மோ

இக்காலத்தில் இப்படியும் வரலாம் (யயாதி..)

மற்றவையும் அப்படியே லாடம், இத்யாதி.

தடையில்லாத் தளை.

05/05/2011

பாக்களில் இருக்கும் சீர்களின் (சொற்களின்) இடையில் அமைகின்ற ஒரு பிணைப்பு (அ) புணர்ச்சியே தளையென்று அறியப்படுகிறது. நம்முடைய தமிழ் யாப்பிலக்கணத்தின்படி நின்றசீரின் ஈற்றசையோடு வந்த சீரின் முதலசை தளைந்து நிற்க இவ்விரண்டு சீர்களால் உருவாவதே தளை என்கிறோம். இத்தளையினால் எண்ண ஓட்டம் தடைபடுகிறது; கைகளுக்கும் இரும்பாய் தளை போடப்படுகிறது என பேசும் புதுப்பாட்டியற்றும் அன்பர்களுக்குச் சொல்லிக் கொள்வது யாதெனில், முதற்சீரின் ஈற்றசையும் வரும்சீரின் முதலசையும் உரசும் போது ஏற்படும் ஓசைநயம், இசைநயம், ஒலிநடை, இசைக்கோலமே தளை என்பேன். இந்த இரண்டு அசைகளில் ஏற்படும் மாற்றம் தளைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த தளையே பாடல்களின் உயிர்நாடி. தாம் அறியாமலேயே, தளையின்பம் தெரியாமலேயே இயற்றப்பட்ட புதுப்பாடல்களிலும் இனிமைகூடி இருக்கக்காரணம், அதிலும் தளை தானாகப் பயின்று வருவதே. இனி தளைகள் பற்றி பார்ப்போம்.  தளைகளைப் பற்றி அறியும் முன்பு, ஒரு சில விளங்கங்களை அறிந்து கொண்டால் பின்னர் தளைகளின் அழகு நன்கு விளங்கும். மரபுப்பாடல்களில் பயின்று வரும் சீர் வகைகளான இயற்சீரையும், காய்சீரையும், கனிச்சீரையும் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.  அத்துடன் பூச்சீர், நிழற்சீர் என்ற வகைகளும் உண்டு. இந்தப் பூச்சீர், நிழற்சீர் பற்றி நானிங்கு ஏன் சொல்கிறேன் என்றால் இந்த சீர்களை அறியும் போதில்தான் அவற்றிற் கிடையிலான தளையினையும் விளங்கிக் கொள்ள இயலும். பூச்சீர்களும் நிழற் சீர்களும் வஞ்சிப்பாக்களில்தான் பயிலும்.  கீழ்வரும் விவரங்களைப் பாருங்கள்.

(1) ஈரசையான இயற்சீர் நான்கு(தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்)- இவை ஆசிரிய உரிச்சீர்கள் எனப்படும். பெரும்பான்மை அகவற்பாவிலும், வெண்பாவிலும் பயின்று வரும். தேமா/புளிமா தவிர்த்து விளச்சீர்கள் சிலநேரம் கலிப்பாவிலும் பயின்று வரும்.
(2) மூவசையான காய்ச்சீர் நான்கு (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) இவை வெண்பா உரிச்சீர்கள் எனப்படும். இவை வெண்பாவில் அதிகம் பயின்று வரும்.
(3) மூவசையான கனிச்சீர் நான்கு (தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி) இவை வஞ்சி உரிச்சீர்கள் எனப்படும். இவை வஞ்சிப்பாக்களில் அதிகம் பயின்றுவரும்.
(4) நான்கசையான பூச்சீர் எட்டு (தேமாதண்பூ, புளிமாதண்பூ, கூவிளந்தண்பூ, கருவிளந்தண்பூ, தேமாந்நறும்பூ, புளிமாந்நறும்பூ, கூவிளந்நறும்பூ, கருவிளந்நறும்பூ)
(5) நான்கசையான நிழற்சீர் எட்டு (தேமாந்தண்ணிழல், புளிமாந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல், தேமாந்நறுநிழல், புளிமாந்நறுநிழல், கூவிளந்நறுநிழல், கருவிளந்நறுநிழல்)

இனி தளைகளைப் பற்றி பார்ப்போம். தளைகள் மொத்தம் ஏழு வகைப்படும். அவையாவன: (1) நேரொன்றிய ஆசிரியத் தளை, (2) நிரையொன்றிய ஆசிரியத் தளை, (3) இயற்சீர் வெண்டளை, (4) வெண்சீர் வெண்டளை, (5) கலித்தளை, (6) ஒன்றிய வஞ்சித்தளை, (7) ஒன்றாத வஞ்சித்தளை. ஒவ்வொரு தளையினைப் பற்றி விளக்கங்களைக் கீழே வரிசையாகத் தந்திருக்கிறேன்.

1) நேரொன்றாசிரியத் தளை : (மா முன் நேர்) அதாவது தேமா, புளிமா அமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நேரசை ஒன்றி வருவதாகும்.

(எ-கா) எடுத்துக்காட்டாக முழுவதும் தேமாச்சீர் வரும்படி நான் இயற்றிய நிலைமண்டில ஆசிரியப்பா கீழே:-
தங்கத் தட்டும் சங்காய் மின்னும்
மங்காப் பட்டும் மங்கை நல்லாள்
கன்னம் என்னும் காந்தம் முன்னே
என்றும் நேரோ சொல்வீ ரிங்கே!

2)நிரையொன்றாசிரியத் தளை : (விள முன் நிரை) அதாவது கருவிளம், கூவிளம் அமைந்த முதற்சீரின் ஈற்று நிரையசை இரண்டாவது சீரின் முதலான நிரையசையுடன் ஒன்றி வருவதாகும்

(எ-கா) எடுத்துக்காட்டாக முழுவதும் கருவிளச்சீர் வரும்படி நான் இயற்றிய நிலைமண்டில ஆசிரியப்பா கீழே:-
மதுநிகர் கவிதையை மயக்கிடும் வகையிலே
செதுக்கிடும் சிலையென சிறப்புடன் வனைந்திடும்
புதுமையின் கவிஞரே! புதுக்கவி புனைந்திடும்
புதுவையின் கவிஞனை புலவனாய் உணர்கவே!

3) இயற்சீர்வெண்டளை : (மா முன் நிரை – விள முன் நேர்) அதாவது தேமா, கூவிளம் அமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நிரையுடன் ஒன்றுவதும், கூவிளம், கருவிளம் அமைந்த முதற்சீரின் ஈற்று நிரையசை இரண்டாவது சீரின் முதலான நேரசையும் ஒன்றுவதும் இயற்சீர் வெண்டளை எனப்படும்.

(எ-கா) எடுத்தக் காட்டாக ஒரு குறள்வெண்பா கீழே:-
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

4) வெண்சீர் வெண்டளை : (காய் முன் நேர்) அதாவது காய்ச்சீர் அல்லது பூச்சீர் இவைகளில் ஒன்றமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நேரசையுடன் ஒன்றுவது. இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டியது பூச்சீர் எட்டும் அவைகளின் ஈற்று நேரசையால் காயெனக் கொள்ளபடுதல் வேண்டும்.

(எ-கா) எடுத்துக் காட்டாக ஒரு குறள்வெண்பா கீழே:-
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

5) கலித்தளை : (காய் முன் நிரை) அதாவது காய்ச்சீர் அல்லது பூச்சீர் ஒன்றமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நிரையும் ஒன்றுவது. இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டியது பூச்சீர் எட்டும் அவைகளின் ஈற்று நேரசையால் காயெனக் கொள்ளபடுதல் வேண்டும்.

(எ-கா) எடுத்துக் காட்டாக வெண்கலிப்பா ஒன்று கீழே:-
ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தன்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்தியவென்
தார் வரை அகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்
சீர்மலி கொடியிடை சிறந்து

6) ஒன்றிய வஞ்சித்தளை : (கனி முன் நிரை) அதாவது கனிச்சீர் அல்லது நிழற்சீர் ஒன்றமைந்த முதற்சீரின் ஈற்று நிரையசை இரண்டாம் சீரின் முதலான நிரையசையுடன் ஒன்றுவது. இங்கு நினைவிற் கொள்ளப்பட வேண்டியது நிழற்சீர் எட்டும் அவைகளின் ஈற்று நிரையசையால் கனியெனக் கொள்ளபடுதல் வேண்டும்.

7) ஒன்றாத வஞ்சித்தளை : (கனி முன் நேர்) அதாவது கனிச்சீர் அல்லது நிழற்சீர் ஒன்றமைந்த முதற்சீரின் ஈற்று நிரையசை இரண்டாம் சீரின் முதலான நேரசையுடன் ஒன்றுவது. இங்கும் நினைவிற் கொள்ளப்பட வேண்டியத்உ நிழற்சீர் எட்டும் அவைகளின் ஈற்று நிரையசையால் கனியெனக் கொள்ளபடுதல் வேஎண்டும்.

(எ-கா)ஒன்றிய/ ஒன்றாத வஞ்சித் தளைகளுக்கு எடுத்துக்காட்டாக குறளடி வஞ்சிப்பா ஒன்று கீழே:
மந்தாநிலம் வந்தசைப்ப (ஒன்றாத வஞ்சித்தளை – கனி முன் நேர்)
வெண்சாமரை புடைபெயர்தரச் (ஒன்றிய வஞ்சித்தளை -கனி முன் நிரை)
செந்தாமரை தாள்மலர்மிசை (ஒன்றாத வஞ்சிதளை – கனி முன் நேர்)
எனவாங்கு (தனிச்சொல்)
இனிதிருந் தோங்கிய இறைவனை (ஆசிரிய சுரிதகம்)
மனமொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே! (ஆசிரிய சுரிதகம்)

இனிமேல் அடுத்த கட்டுரையில்  தொடைகளின்  வகைகளைப் பற்றி பார்ப்போம் நண்பர்களே!

தொடையிலக்கணம்-2

05/05/2011

தொடை விகற்பங்கள்:  5 தொடைகளுக்கான விகற்பங்கள் அத்தனைக்கும் எடுத்துக் காட்டுகளை கீழே தந்திருக்கிறேன். இவை எதுவுமே என்னுடைய கருத்துகள் இல்லை. நான் ஒரு கருவி மட்டுமே. மேலும் எடுத்துக் காட்டு பாடல்களை செய்யுள்களாகவே தந்திருக்கிறேன், ஒரு விவரங்களுக்காக.

1) எதுகைத் தொடை: பொதுவாக அடியெதுகை என்று முதலடியின் முதலெழுத்து ஓரினமாய் அமைய, இரண்டாம் எழுத்து  ஒன்றுவது அடியெதுகை என்றாகி,  கூடவே மேலே சொன்ன ஏழுவகை விகற்பங்கள் பெற்று வரும்.

(எ-கா) எல்லாமும் அமைந்த ஒரு பழம்பாடல் கீழே: (பொன்-பன், மின்-நன், என் – அன், மயி-அயி இவை அடியெதுகைகள் என்றாகின்றன – முதலெழுத்து ஓரினமான குறிலாகி, இரண்டாமெழுத்து ஒன்றிவருகின்றன)

பொன்னின் அன்ன பொறிசுணங்கு ஏந்திப் (பொன், அன் = இணைஎதுகை)
பன்னருங் கோங்கின் நன்னலம் கவற்றி (பன், நன் = பொழிப்பெதுகை)
மின்னவிர் ஒளிவடம் தாங்கி மன்னிய (மின், மன் = ஒருஉஎதுகை)
நன்னிற மென்முலை மின்னிடை வருந்தி (நன், மென், மின் = கூழையெதுகை)
என்னையும் இடுக்கண் துன்னுவித்து இன்னடை (என், துன், இன் = மேற்கதுவாய் எதுகை)
அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் (அன், மென், பன் = கீழ்கதுவாய் எதுகை)
கன்னியம் புன்னை இன்னிழல் துன்னிய (கன், புன், இன், துன் = முற்றெதுகை)
மயிலேய் சாயலவ் வாணுதல்
அயில்வேல் உண்கண்எம் அறிவுதொலைத் தனவே

2) மோனைத் தொடை: இன்றைய காலகட்டத்தில் பொழிப்பு மோனை  பொதுவாக சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. மோனை  என்பது ஒரு பாடலின் முதற்சீரின் முதலெழுத்து, மூன்றாம் சீரின் முதலெழுத்துடன் ஒன்றி வருவது.

(எ-கா) கீழ்வரும் பாடலைப் பார்த்தால் இந்த மோனையின் சிறப்பினை அறியலாம்:
அணிமலர் அசோகின் தளிர்நலம் கவற்றி (அணி,அசோ = இணை)
அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி (அரி, அர = பொழிப்பு)
அம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் அகற்றி (அம், அக = ஒருஉ)
அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் (அக,அல்,அந் = கூழை)
அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள் (அரு,அவ்,அமை=மேற்கதுவாய்)
அவிர்மதி அனைய திருநுதல் அரிவை (அவி,அனை, அரி = கீழ்க்கதுவாய்)
அயில்வேல் அனுக்கி அம்பலைத்து அமர்ந்த (அயி,அனு,அம்,அம = முற்று)
கருங்கயல் நெடுங்கண் நோக்கம்என்
திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே”

3)இயைபுத் தொடை: இயைபென்பது முதலடியின் கடைச்சீரின் கடைசி எழுத்தானது அடுத்த அடியின் கடைச்சீரின் கடைசி எழுத்துடன் ஒன்றிவருது.

(எ-கா) இங்கே அன்பர்கள் நந்தவனத்திலோர் ஆண்டி என்ற  பாடலை நினைவிற்கொள்ளலாம் (ஆண்டி, வேண்டி, தோண்டி, தாண்டி என்று இயைபுத் தொடை அமைந்திருக்கும்).  இனி எல்லாமும் இணைந்த ஒரு இயைபுத் தொடை பாடல் (”லே” என்ற ஏகாரம் இயைபு):-

மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே (பொழிலே, முகிலே = இணை)
மற்றதன் அயலே முத்துறழ் மணலே (மணலே, அயலே = பொழிப்பு)
நிழலே இனியதன் அயலது கடலே (கடலே, நிழலே = ஒருஉ)
மாதர் நகிலே வல்லே இயலே (இயலே, வல்லே,நகிலே = கூழை)
வில்லே நுதலே வேற்கண் இயலே (இயலே,நுதலே, வில்லே=மேற்கதுவாய்)
பல்லே தவளம் பாலே சொல்லே (சொல்லே, பாலே,பல்லே =கீழ்க்கதுவாய்)
புயலே குழலே மயிலே இயலே (இயலே, மயிலே, குழலே, புயலே=முற்று)
அதனால்
இவ்வயின் இவ்வுரு இயங்கலின்
எவ்வயி னோரும் இழப்பர்தம் நிறையே”

4) முரண் தொடை: ஒருச்சீருக்கு முரணாய்  மற்றொரு சீர் அமைவது முரண் தொடை எனப்படும்.

(எ-கா) சீறடி அதாவது சிற்றடிக்கு முரண் பேரகல் அதாவது பெரியகல். எல்லா முரண் தொடை விகற்பங்களும் அமைந்த பாடல் கீழே:-
சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு (சீறடி, பேரகல்=இணை)
சுருங்கிய நுசுப்பின் பெருகுவடந் தாங்கிக் (சுரு,பெரு = பொழிப்பு)
குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து (குவி, விரி = ஒருஉ)
சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைகள் (சிறிய பெரிய நிகர் = கூழை)
வெள்வளைத் தோளும் சேயரிக் கருங்கணும் (வெள்,சேய்,கரு =மேற்கதுவாய்)
இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும் (இரு,நிலை,இயக்க =கீழ்க்கதுவாய்)
துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்தெனை முனியாய் (துவர்,தீஞ்,உவந்,முனி=முற்று)
என்றும் இன்னணம் ஆகுமதி
பொன்திகழ் நெடுவேல் போர்வல் லோயே”

5) அளபெடைத் தொடை : அடியளபெடைத் தொடை செய்யுளில் வருவது. முதலடியின் முதற்சீரின் கடைசியில் வரும் அளபெடை அடுத்தடியின் முதற்சீரில் வரும் அளபெடையுடன் ஒத்துப் போதல் அளபெடைத் தொடை எனப்படும்.

(எ-கா) எல்லா அளபெடை விகற்பங்களும் அமைந்த பாடல் கீழே:-
தாஅள் தாஅ மரைமலர் உழக்கிப் (தாஅள், தாஅ = இணை)
பூஉக் குவளைப் போஒது அருந்திக் (பூஉக் போஒ = பொழிப்பு)
காஅய்ச் செந்நெல் கறித்துப் போஒய் (காஅய், போஒய்=ஒரு உ)
மாஅத் தாஅள் மோஒட் டெருமைத் (மாஅத்,தாஅள்,மோஒ = கூழை)
தேஎம் புனல்இடை சோஒர் பாஅல் (தேஎம், சோஒர்,பாஅல்=மேற்கதுவாய்)
மீஇன் ஆஅர்ந்து உகளும் சீஇர் (மீஇன்,ஆஅர்ந்து,சீஇர் = கீழ்க்கதுவாய்)
ஆஅ னாஅ நீஇள் நீஇர் (ஆஅ,னாஅ,நீஇள்,நீஇர் =முற்று)
ஊரன் செய்த கேண்மை
ஆய்வளைத் தோளிக்கு அலரா னாவே”