Archive for பிப்ரவரி, 2012

மாண்புடனே வாழியவே….

11/02/2012

சில நேரங்களில்  உள்ளே உணர்வூறிய ஆற்றொணாத வேதனையை, கையால் ஆகாமல் கைகளைப் பிசையும் கேவலத்தை,  எண்ணி உளம் மாயும் துன்பத்தை என்னென்று சொல்வது?  இயலாமையின் உச்சத்தில் இருக்கும், துணைவி/ மைந்தன் என்ற கடமைகள் இருக்கும் எம்போன்றோர், என்னதான் செய்ய இயலும்?

தீக்கனலே! செம்மொழியே! செந்தமிழே! என்றெல்லாம்
பாக்களினால் தமிழ்பேசி பாசாங்கு செய்தபடி
சாக்காட்டுச் சாதிமத சழக்கென்னும் கோண(ல்)அரை
வேக்காட்டு அரசியலின் வேர்கொண்ட தமிழினமே!

நந்தமிழை நாக்கூச நரகலெனும் வேதனையை,
செந்தமிழைச் செந்தணலிற் றீய்க்கின்ற தீமையினை,
சிந்தனையைத் தான்பொசுக்கிச் சீரழிக்கும் போதையினை,
எந்நாளும் எத்தர்களே ஏத்துகின்ற ஈனமதாம்

தன்னலப்பேய் வெருண்டோடத் தாரணியை வாழ்விக்கும்
அன்பென்னும் அற்புதமாம் ஆழ்கடலில் முக்குளித்து
நன்னலமாம் முத்துகளை நம்மிளையோர் பெற்றிலங்கி
மன்னவராய் ஓங்கலென மாண்புடனே வாழியவே!

Advertisements

புதுபூமி வேண்டும்….

11/02/2012

15.7.2011 காலை 9.30 மணி பாவரங்கில் கலந்து கொள்ள நான் பாடல் எழுத வேண்டுமென்று முயலும் போது, பணி சார்ந்த அழைப்பினால் தடையானது.  எனவே அன்புடன் ஒருங்குறி கூகுள் குழுமத்தின் இரண்டாம் ஆண்டுவிழாப் போட்டில், இசைக்கவிதை பிரிவில் பங்கு பற்றிய என்னுடைய கவிதையையே தந்தேன்.  இந்த வாய்ப்பிற்கு சந்தக் கவிஞர் புகாரிக்கு என் உளமார்ந்த நன்றிகள்.  இந்த கவிதை, நடுவர் இசைக்கவி இரமணன் அவர்களால் ஊக்க பரிசிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  இதன் ஒலி இழையை விரைவில் இதே இழையில் தருகிறேன்.  புது பூமி வேண்டும் என்று ஒலியெழுப்பும் மனிதரிகளிடம், பூமகள் புத்தம் புது மனிதம் வேண்டும் என்று கேட்கிறாள்.

தமிழே எழுவாய்!
(அதிகரீணி வகையிலான கலிவிருத்தம்- அமைப்பு, புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமாங்கனி புளிமா)
===========================================
கனலாய்நிதந் துயிலில்வருங் கனவாய்நம துணர்வில்
தினமும்நமை யழிக்கும்பகைச் சினமாய்நம தெதிரில்
மனிதந்தகர் நலிவாங்கொடு வழியையழித் திடவே
அனலாய்க்கலந் துறையுந்தமி ழழலேயென எழுவாய்!

புது மானுடம் வேண்டும் (ஆனந்த கும்மி)
(செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற மெட்டு)
===========================================

மின்னிடும் மின்னலை வாகெடுத்து – முடி
மேகத்தைக் கோதிடும் பூமகள்நான்!
கண்களில் அன்பெனும் பாகெடுத்து – நெடுங்
காலத்தைத் தாவிடும் நாமகள்நான்!

நானிலங் காத்திடுஞ் செங்கதிரில் – நிதம்
நன்னலம் பொங்கிடும் நங்கையும்நான்!
பூணுமப் பற்றரைத் தங்கமென – உடல்
பூரித்து விம்மிடும் மங்கையும்நான்!

எண்ணிலா ஊழிகள் கண்டதனால் – நிகர்
ஈடிலா ஏற்றமும் பெற்றவள்நான்!
நின்றுணர் ஆற்றலைக் கொண்டதனால் – பெரு
நீசங்கள் யாவுமே அற்றவள்நான்!

எத்தனை கேடினி வந்திடினும் – தமிழ்
இத்தரை மீதினில் தாழ்வதுண்டோ?
புத்திளம் மேனியே வெந்திடினும் – புவிப்
பூமகள் நானுமே வீழ்வதுண்டோ?

அன்பெனும் சோலையு மிங்கிருக்கக் – கொடு
அத்தமும் தேடியே ஓடுகின்ற
புன்னெறி யாளர்கள் வன்முறையால் – நெடும்
பூவுல காள்வதும் நீதியடி?

நீறாக என்னுடல் ஆகிவிட – எனை
ஞாட்பெனுங் குப்பைமே டாக்கிவிடும்
ஆறறி வுகொண்ட அற்பர்களே – இடம்
அற்றதென் றேவானிற் றேடுகின்றீர்!

வந்தவர் வாழ்ந்திடத் தேவையொரு – புது
மண்ணுல கென்றிடும் பாவிகளே!
என்னிடம் கேளுங்கள் நானுரைப்பேன் – அது
இன்னுல காப்புது மானிடமே!
===========================================
அத்தம் =  பாலைநிலம்
ஞாட்பு = போர்க்களம்

எதையும் தாங்கும் இதயம்….

11/02/2012

திரைப்படப் பாவலர் பூவை. செங்குட்டுவனின்  தலைமையில், கவிதை வானில் மன்றத்தில் வாசித்தளித்த இருவிகற்ப இன்னிசை வெண்பாக்கள்.
==========================

கனிச்சுவை பொங்கு மினிமை இருக்க
பனிக்குளிர் வாளியாய்ப் பாழ்ச்சொற் புனைந்திடும்
காரிருள் கனக்கும் கறுப்பா மிதயமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

நேராய்ச் சிரிக்கையில் நேயமாய் ஏத்திடும்
பாரா திருக்கையில் பொய்யுரை தூற்றிடும்
சீரிலாச் செருக்கிழிச் சிந்தனை நெஞ்சமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

பொய்யா மொழியார் புகன்றது போலவே
செய்ந்நன்றி கொன்ற கயவர்தம் பொய்மைகள்
ஆர்த்திடுங் கோண லுரைக்கு மிதயமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

தடவிப் படிக்குந் தாய்மொழி நூலின்
மடங்கிய தாளின் மடிப்பின் தடச்சொல்
வேரது வடமொழி என்பா ரிதயமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

பெண்ணே நீயும் புறப்படு….

11/02/2012

கவிதை வானில் பாவரங்கில், புலவரேறு, தமிழ்மாமணி அரிமதி தென்னகனார் தலைமையில், நான் வாசித்தளித்த சந்தப் பாடலிது:
=======================================

பெண்

 

 

 

 

 

 

 

மண்ணில் மலரும் பூக்களாய்
மலர்ந்து மணக்கும் பெண்மையே!
மென்மை மட்டும் வாழ்க்கையில்
மேன்மை யாமோ புறப்படு!               (மண்ணில்)

பேதை என்றே இருப்பதால்
பேரும் புகழும் வந்திடுமோ?
சூது நிறைந்த உலகையே
சுட்டெ ரிக்கப் புறப்படு!                     (மண்ணில்)

உள்ள துறைகள் அனைத்திலும்
உலகப் பெண்கள் இருக்கையில்
கிள்ளுக் கீரை  இந்தியரோ?
கிளம்பிக் கலக்கப் புறப்படு!                (மண்ணில்)

நாதம் ஒலிக்கும் மணியாக
நங்காய் நீயும் புறப்படு!
பாதம் மிதிக்கும் பூமியை
பாதை ஆக்கப் புறப்படு!                     (மண்ணில்)

கண்ணம்மா……

11/02/2012

ஆத்தூரு சாலையில
ஆத்தங்க ரையினிலே
அரசமரத்தடியில் – கண்ணம்மா – நீ
ஆடிவர வேணுமடி பொன்னம்மா!         (ஆடிவர)

மானாம ருதையில
மாடுவிக்குஞ் சந்தையிலே
வாதமரத்தடியில் – கண்ணம்மா – நீ
வஞ்சிவர வேணுமடி பொன்னம்மா!     (வஞ்சிவர)

பச்சவயக் காட்டினிலே
பயத்தங் கருதிருக்க
பாக்குமரத்தடியில் – கண்ணம்மா – நீ
பாடிவர வேணுமடி பொன்னம்மா!        (பாடிவர)

ஏத்தமெ றைக்கயிலே
ஏரிக்கர மோட்டருகில்
எலவமரத்தடியில் – கண்ணம்மா – நீ
இருட்டிவர வேணுமடி பொன்னம்மா!  (இருட்டிவர)

பூவரசங் காட்டருகில்
பூத்திருக்கும் கொளக்கரையில்
புங்கமரத்தடியில் – கண்ணம்மா – நீ
பொழுதுவர வேணுமடி பொன்னம்மா!(பொழுதுவர)

நாட்டரசங் கோட்டையில
நாகராசன் செலையருகே
நாவமரத்தடியில் – கண்ணம்மா – நீ
நாடிவர வேணுமடி பொன்னம்மா!         (நாடிவர)

சிவகங்கச் சீமையில
சிலுசிலுக்குந் தோப்பருகே
தேக்கமரத்தடியில் – கண்ணம்மா – நீ
தேடிவர வேணுமடி பொன்னம்மா!       (தேடிவர)

புவனகிரி பூச்சரமே…..

11/02/2012

நாட்டார் பாடல்களைச் சுவைப்பதும் சுகம்;  நாட்டார் பாடல்களின் சாயலில் பாட்டெழுதுவதும் சுகம்.  இந்தப் பாடலில், ஆவல் மீதூர,  ஆண் கேட்பதும்,  நாணம் மீதூர பெண் மறுதளிப்பதுமாக பாடலை வனைந்தேன்.  இந்த வகையில் இஃது என்னுடைய இரண்டாவது பாட்டு.

ஆண்:

ஆத்துமீனு அயிரமீனே!
அத்தபெத்த ரத்தினமே!
அணைக்கர ஓரத்துல,
அஞ்சுகமே வாயேண்டி!
அருச்சலா சேத்தணைக்க….

பெண்:

மேலூரு மச்சானே!
மேலாக்கு போட்டுபுட்டேன்;
வெண்ணாத்தங் கரையோரம்
விரசாத்தான் வருவேனோ?
மாராப்புச் சேத்தணைக்க….

ஆண்:

சிவகாசி சீலகட்டி,
சிறுவாணி குளுநீராய்,
சிங்கார கருக்கல்லில்,
சின்னவளே வாயேண்டி!
செந்தூரம் சேத்தணைக்க….

பெண்:

கீழக்கரச் சந்தனமே!
கிழக்குவெளிச் சூரியனே!
கருக்கல்லில் வருவேனோ?
கண்ணாளம் கட்டாமல்,
கருவமணி சேத்தணைக்க….

ஆண்:

புவனகிரிப் பூச்சரமே!
புத்துருக்கு நெய்மணமே!
புதுசாத்தான் கேக்குறயே?
பொஞ்சாதி ஆக்கிருவேன்;
போதெல்லாம் சேத்தணைக்க….
————————————————————
அருச்சல் = அவசரம் (வட்டாரவழக்கு)
கருவமணி = கருகமணி (வட்டாரவழக்கு)
கண்ணாளம் = திருமணம் (வட்டாரவழக்கு)
செந்தூரம் = குங்குமம் (வட்டாரவழக்கு)
குளுநீர்/குளுந்தண்ணி = குளிர்ந்தநீர் (வட்டாரவழக்கு)

சில்லுக் கருப்பட்டியே…..

11/02/2012

கிராமிய மணம் வரிசையில் இது என்னுடைய மூன்றாவது பாட்டு.  கண்டும் காணாமல் கண் வீசிப் போகின்ற பெண்மகளை நோக்கி, அலைபாயும் காதலன் ஏங்கிப் பாடுவதாக வனைந்திருக்கிறேன்.  இதே வகையான சொல்லாட்சி கொண்ட பல பாடல்களை நாட்டுப்புறப் பாடல்களில் காண்கிறேன். அவற்றை எவரும் முயன்று அச்சிடவோ தொகுக்கவோ பெரும்பாலும் முயலவில்லை என்றே தோன்றுகிறது. அந்த வகையாக நாட்டார் பாடல்களைப் படித்தவுடன் ஏற்பட்ட தாக்கத்தால் நான் வனைந்த பாடலிது.

கருப்பு மேலாக்கும்,
காதோரம் லோலாக்கும்,
காத்துலதான் அலைபாய,
கஞ்சிச்சட்டி ஏந்தி,
கரைமேலே போறவளே!
காக்கா அலம்புறது
காதுலதான் கேக்கலியோ?
செரவிக் கூட்டமெல்லாம்
சடசடன்னு போகயில
சஞ்சலத்தால் எம்மனசு
சருகாத்தான் ஆகலியோ?
சில்லுக் கருப்பட்டியே!
சிறுவந்தா டுடுத்தவளே!
சின்னமலை சிறுபழமே!
தெனந்தெனம் ஒனக்காக
சீவன்நான் கிடக்குறனே
சிங்காரி ஒம்மனசு
சத்தே எறங்காதோ?
=====================
லோலாக்கு = காது ஜிமிக்கி (நாட்டார் வழக்கு)
அலம்புதல் = கத்துதல், கரைதல் (நாட்டார் வழக்கு)
செரவி = இரவில் சிறிதாக ஓசையெழுப்பி வயலில் நெல் திருடும் சிரவி என்கிற பறவைக் கூட்டம்.
சத்தே = சற்றே

சிவந்து சிலிர்க்கும் சிவப்பு…

06/02/2012

ஒரு பஃது நேரிசை வெண்பா அந்தாதி மாலையொன்று எழுத நினைத்தேன்.  சற்றே நினைவு  துயிலால் சறுக்கியதால், முதலில் 7 வெண்பாக்கள் விரைவில் மீதி மூன்று வெண்பாக்களும் வலையேறும்.   அடிவானப் பேரழகைக் கண்டேன், அதனால் எழுந்த நினைவுகளின் தாக்கம் இவை:

வெண்பனிப்பூத் தூவுகின்ற வேளையாம் வைகறையில்
கண்மலரும் பூத்திருக்கக் கண்டேனே! – விண்மகளும்
தண்கரத்தால் ஆதவனைத் தானெழுப்பிக் கூடுகின்ற
வண்ணமயக் காட்சியதை யே!

ஏகமனப் பெண்ணை அணைத்துக் கதிரவன்தேன்
பாகெனவே முத்தம் பதிக்கையிலே – மோகம்
கவிந்த அடிவானம் கண்கள் கிறங்கிச்
சிவந்துச் சிலிர்க்கும் சிரிப்பு!

சிரிக்கு மெழில்வானச் சித்திரத்தால் என்னில்
விரிகின்ற எண்ணங்கள் விந்தை! – சுரிதகமும்
அம்போ தரங்கமும் ஆர்க்கும் வரிகளிலே
எம்பாட் டெழுதுவனோ இன்று?

இன்றென் னுளம்பற்றி எந்தமிழின் சொல்லெடுக்க
அன்பான பாவடிவாய் ஆனவளே! –  உன்னெழில்
விண்டகணம் மின்னல் விரிந்தவரி ஆயிரமாய்
கண்டேனென் உள்ளம்க சிந்து.

சிந்தும் சிறுதீச் சிவப்பின்  துகிலெனவே
அந்திமகள் கட்டும் அடிவானம்! – சிந்தைகவர்
வானகமே  செஞ்சாந்து வண்ணமென ஆனதையே
தானிங்கு பாவடித்தேன் சற்று.

சற்றும் தளராத சாத்தானாம்  பேருருவை
பற்றிய விக்ரமன் பாடனெவே –  முற்றும்
மயக்கும் தொடுவான வஞ்சியெழில் கண்டு
முயலுமென்  பாட்டின் மொழி.

மொழியும் தமிழில் முனையும்  வரியில்
பொழிலின் கவிதை புனைந்தேன் –  எழிலார்
இயற்கை விரிக்கின்ற இன்பஞ்சேர் காட்சி
நயமொன்றில் நானும்  நயித்து.

புரட்சிவீரன் எர்னஸ்ட் சே குவாரா..

06/02/2012

எண்சீர் விருத்தம்.

நேர்மையினைப் பூட்டுகின்ற அடிமை வாழ்வை
……….நீதியினை வாட்டுகின்ற நாட்டின் தாழ்வை
பார்த்தகணம் வீறுகொண்டே கண்ணில் காணும்
……….பாதகத்தை வேரறுக்க முன்னே  நின்றான்!
சீர்த்திகளை செல்வத்தைத் தேடு வோரில்
……….தீமைகளால் நாதியற்ற வர்கள் தேடும்
தீர்ப்பிற்கே அன்றெழுந்த சேகு வேரா;
……….செந்தீயாய் செலுத்துமென்றன் வணக்கம் ஈதே!

நாமின்று வாய்திறவாச் சிலையா என்று,
……….நசுக்கப்பட் டவர்களுக்கே நீதி கேட்டு,
பூமலர்கள் புகழ்மொழிகள் எதுவும் இன்றி
……….புரட்சியொன்றே வாழ்க்கையென்று மண்ணில் வாழ்ந்தான்!
ஊமையென்றே வாய்களின்றி வாழ்ந்த மக்கள்
……….உயர்ந்திடவே அயர்வின்றி உழைத்த உன்னை
பாமலரால் ஏத்துகின்றேன் ஈகை மன்னன்;
……….பாரெங்கும் மணக்குமுன்றன் புரட்சிப் பூவே!

மரணமிலாக் கவி…(எண்சீர் விருத்தம்)

06/02/2012

அக்டோபர் 17 ஆம் நாள் கவியரசர் கண்ணதாசனின் நினைவுநாள்.  அவர்தம் நினைவாஞ்சலியாக இப்பாவலன் எழுதிய பாடலிது.

படைப்பதனால் நானுமிறை  என்றே கர்வப்
………பாட்டிசைத்துப் படைக்கின்ற கவிஞர் தாமும்
தடையின்றித் தமிழ்மொழியில் நிமிர்ந்தே நிற்க
………சந்தமணக் கவிமழையாய் பொழிந்து நின்றான்;
கடையனல்ல நானென்றும் இறப்பே இல்லா
………கடவுளடா என்றெழுத்தில் கொக்க ரித்து
மடைதிறந்த வெள்ளம்போல் எழுதித் தள்ளி
………வண்டமிழர் மனதைத்தன் வசமே கொண்டான்!

காதற்பா தோல்விப்பா கொதித்தே கொட்டும்
………காரெனவே வெடிக்கின்ற வெற்றிப் பாக்கள்;
நோதற்பா வேதப்பா நகைக்க வைத்து
………நொந்தவர்க்கு மருந்தளிக்கும் சிரிப்புப் பாக்கள்;
சாதற்பா மோதற்பா சீறு கின்றச்
………சீயமெனப் படிப்பவர்க்கு வீரப் பாக்கள்;
நாதப்பா நீதிப்பா நெகிழ செய்து
………நலம்விளங்க ஆயிரமாய்ப் புனைந்தான் பாட்டே!

மலர்க்காவாய் மனம்விரும்பும் மழலை தன்னை
………மங்கையரை வஞ்சியரை வண்ணப் பெண்ணை
சிலிர்த்திருக்க சிந்தையள்ளும் வெள்ளு வாவை
………தித்திக்கும் தேன்பாகாய் இசைத்தான் பாட்டே!
புலர்காலை காட்சிகளை பனிப்பூ போர்த்த
………பூமியதன் புத்தமிழ்த மாட்சி மையை
அலர்ந்தழகாய் ஆடுகின்ற அல்லிப் பூவை
………அடுக்கிவைத்த செந்தமிழில் வனைந்தான் பாட்டே!