Archive for the ‘என்னில் பூத்த பாமலர்கள்’ Category

மாண்புடனே வாழியவே….

11/02/2012

சில நேரங்களில்  உள்ளே உணர்வூறிய ஆற்றொணாத வேதனையை, கையால் ஆகாமல் கைகளைப் பிசையும் கேவலத்தை,  எண்ணி உளம் மாயும் துன்பத்தை என்னென்று சொல்வது?  இயலாமையின் உச்சத்தில் இருக்கும், துணைவி/ மைந்தன் என்ற கடமைகள் இருக்கும் எம்போன்றோர், என்னதான் செய்ய இயலும்?

தீக்கனலே! செம்மொழியே! செந்தமிழே! என்றெல்லாம்
பாக்களினால் தமிழ்பேசி பாசாங்கு செய்தபடி
சாக்காட்டுச் சாதிமத சழக்கென்னும் கோண(ல்)அரை
வேக்காட்டு அரசியலின் வேர்கொண்ட தமிழினமே!

நந்தமிழை நாக்கூச நரகலெனும் வேதனையை,
செந்தமிழைச் செந்தணலிற் றீய்க்கின்ற தீமையினை,
சிந்தனையைத் தான்பொசுக்கிச் சீரழிக்கும் போதையினை,
எந்நாளும் எத்தர்களே ஏத்துகின்ற ஈனமதாம்

தன்னலப்பேய் வெருண்டோடத் தாரணியை வாழ்விக்கும்
அன்பென்னும் அற்புதமாம் ஆழ்கடலில் முக்குளித்து
நன்னலமாம் முத்துகளை நம்மிளையோர் பெற்றிலங்கி
மன்னவராய் ஓங்கலென மாண்புடனே வாழியவே!

Advertisements

புதுபூமி வேண்டும்….

11/02/2012

15.7.2011 காலை 9.30 மணி பாவரங்கில் கலந்து கொள்ள நான் பாடல் எழுத வேண்டுமென்று முயலும் போது, பணி சார்ந்த அழைப்பினால் தடையானது.  எனவே அன்புடன் ஒருங்குறி கூகுள் குழுமத்தின் இரண்டாம் ஆண்டுவிழாப் போட்டில், இசைக்கவிதை பிரிவில் பங்கு பற்றிய என்னுடைய கவிதையையே தந்தேன்.  இந்த வாய்ப்பிற்கு சந்தக் கவிஞர் புகாரிக்கு என் உளமார்ந்த நன்றிகள்.  இந்த கவிதை, நடுவர் இசைக்கவி இரமணன் அவர்களால் ஊக்க பரிசிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  இதன் ஒலி இழையை விரைவில் இதே இழையில் தருகிறேன்.  புது பூமி வேண்டும் என்று ஒலியெழுப்பும் மனிதரிகளிடம், பூமகள் புத்தம் புது மனிதம் வேண்டும் என்று கேட்கிறாள்.

தமிழே எழுவாய்!
(அதிகரீணி வகையிலான கலிவிருத்தம்- அமைப்பு, புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமாங்கனி புளிமா)
===========================================
கனலாய்நிதந் துயிலில்வருங் கனவாய்நம துணர்வில்
தினமும்நமை யழிக்கும்பகைச் சினமாய்நம தெதிரில்
மனிதந்தகர் நலிவாங்கொடு வழியையழித் திடவே
அனலாய்க்கலந் துறையுந்தமி ழழலேயென எழுவாய்!

புது மானுடம் வேண்டும் (ஆனந்த கும்மி)
(செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற மெட்டு)
===========================================

மின்னிடும் மின்னலை வாகெடுத்து – முடி
மேகத்தைக் கோதிடும் பூமகள்நான்!
கண்களில் அன்பெனும் பாகெடுத்து – நெடுங்
காலத்தைத் தாவிடும் நாமகள்நான்!

நானிலங் காத்திடுஞ் செங்கதிரில் – நிதம்
நன்னலம் பொங்கிடும் நங்கையும்நான்!
பூணுமப் பற்றரைத் தங்கமென – உடல்
பூரித்து விம்மிடும் மங்கையும்நான்!

எண்ணிலா ஊழிகள் கண்டதனால் – நிகர்
ஈடிலா ஏற்றமும் பெற்றவள்நான்!
நின்றுணர் ஆற்றலைக் கொண்டதனால் – பெரு
நீசங்கள் யாவுமே அற்றவள்நான்!

எத்தனை கேடினி வந்திடினும் – தமிழ்
இத்தரை மீதினில் தாழ்வதுண்டோ?
புத்திளம் மேனியே வெந்திடினும் – புவிப்
பூமகள் நானுமே வீழ்வதுண்டோ?

அன்பெனும் சோலையு மிங்கிருக்கக் – கொடு
அத்தமும் தேடியே ஓடுகின்ற
புன்னெறி யாளர்கள் வன்முறையால் – நெடும்
பூவுல காள்வதும் நீதியடி?

நீறாக என்னுடல் ஆகிவிட – எனை
ஞாட்பெனுங் குப்பைமே டாக்கிவிடும்
ஆறறி வுகொண்ட அற்பர்களே – இடம்
அற்றதென் றேவானிற் றேடுகின்றீர்!

வந்தவர் வாழ்ந்திடத் தேவையொரு – புது
மண்ணுல கென்றிடும் பாவிகளே!
என்னிடம் கேளுங்கள் நானுரைப்பேன் – அது
இன்னுல காப்புது மானிடமே!
===========================================
அத்தம் =  பாலைநிலம்
ஞாட்பு = போர்க்களம்

எதையும் தாங்கும் இதயம்….

11/02/2012

திரைப்படப் பாவலர் பூவை. செங்குட்டுவனின்  தலைமையில், கவிதை வானில் மன்றத்தில் வாசித்தளித்த இருவிகற்ப இன்னிசை வெண்பாக்கள்.
==========================

கனிச்சுவை பொங்கு மினிமை இருக்க
பனிக்குளிர் வாளியாய்ப் பாழ்ச்சொற் புனைந்திடும்
காரிருள் கனக்கும் கறுப்பா மிதயமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

நேராய்ச் சிரிக்கையில் நேயமாய் ஏத்திடும்
பாரா திருக்கையில் பொய்யுரை தூற்றிடும்
சீரிலாச் செருக்கிழிச் சிந்தனை நெஞ்சமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

பொய்யா மொழியார் புகன்றது போலவே
செய்ந்நன்றி கொன்ற கயவர்தம் பொய்மைகள்
ஆர்த்திடுங் கோண லுரைக்கு மிதயமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

தடவிப் படிக்குந் தாய்மொழி நூலின்
மடங்கிய தாளின் மடிப்பின் தடச்சொல்
வேரது வடமொழி என்பா ரிதயமே
ஈரமிலாக் கல்லதற் கொப்பு!

பெண்ணே நீயும் புறப்படு….

11/02/2012

கவிதை வானில் பாவரங்கில், புலவரேறு, தமிழ்மாமணி அரிமதி தென்னகனார் தலைமையில், நான் வாசித்தளித்த சந்தப் பாடலிது:
=======================================

பெண்

 

 

 

 

 

 

 

மண்ணில் மலரும் பூக்களாய்
மலர்ந்து மணக்கும் பெண்மையே!
மென்மை மட்டும் வாழ்க்கையில்
மேன்மை யாமோ புறப்படு!               (மண்ணில்)

பேதை என்றே இருப்பதால்
பேரும் புகழும் வந்திடுமோ?
சூது நிறைந்த உலகையே
சுட்டெ ரிக்கப் புறப்படு!                     (மண்ணில்)

உள்ள துறைகள் அனைத்திலும்
உலகப் பெண்கள் இருக்கையில்
கிள்ளுக் கீரை  இந்தியரோ?
கிளம்பிக் கலக்கப் புறப்படு!                (மண்ணில்)

நாதம் ஒலிக்கும் மணியாக
நங்காய் நீயும் புறப்படு!
பாதம் மிதிக்கும் பூமியை
பாதை ஆக்கப் புறப்படு!                     (மண்ணில்)

மரணமிலாக் கவி…(எண்சீர் விருத்தம்)

06/02/2012

அக்டோபர் 17 ஆம் நாள் கவியரசர் கண்ணதாசனின் நினைவுநாள்.  அவர்தம் நினைவாஞ்சலியாக இப்பாவலன் எழுதிய பாடலிது.

படைப்பதனால் நானுமிறை  என்றே கர்வப்
………பாட்டிசைத்துப் படைக்கின்ற கவிஞர் தாமும்
தடையின்றித் தமிழ்மொழியில் நிமிர்ந்தே நிற்க
………சந்தமணக் கவிமழையாய் பொழிந்து நின்றான்;
கடையனல்ல நானென்றும் இறப்பே இல்லா
………கடவுளடா என்றெழுத்தில் கொக்க ரித்து
மடைதிறந்த வெள்ளம்போல் எழுதித் தள்ளி
………வண்டமிழர் மனதைத்தன் வசமே கொண்டான்!

காதற்பா தோல்விப்பா கொதித்தே கொட்டும்
………காரெனவே வெடிக்கின்ற வெற்றிப் பாக்கள்;
நோதற்பா வேதப்பா நகைக்க வைத்து
………நொந்தவர்க்கு மருந்தளிக்கும் சிரிப்புப் பாக்கள்;
சாதற்பா மோதற்பா சீறு கின்றச்
………சீயமெனப் படிப்பவர்க்கு வீரப் பாக்கள்;
நாதப்பா நீதிப்பா நெகிழ செய்து
………நலம்விளங்க ஆயிரமாய்ப் புனைந்தான் பாட்டே!

மலர்க்காவாய் மனம்விரும்பும் மழலை தன்னை
………மங்கையரை வஞ்சியரை வண்ணப் பெண்ணை
சிலிர்த்திருக்க சிந்தையள்ளும் வெள்ளு வாவை
………தித்திக்கும் தேன்பாகாய் இசைத்தான் பாட்டே!
புலர்காலை காட்சிகளை பனிப்பூ போர்த்த
………பூமியதன் புத்தமிழ்த மாட்சி மையை
அலர்ந்தழகாய் ஆடுகின்ற அல்லிப் பூவை
………அடுக்கிவைத்த செந்தமிழில் வனைந்தான் பாட்டே!

தந்தை…. (கொச்சகக் கலிப்பா)

06/02/2012

அன்னையின் அன்பென்னும் அருமருந்தே அரவணைத்து,
மன்னவனே இவரென்று மக்களையே மனமுருகி,
இன்னாளின் செல்வமென  எந்நாளும் காத்திருந்து,
தன்னலமே தான்மறந்து தாரணியில் வாழ்ந்திருக்கும்!

தாயவளின் உள்ளமது தவறுகின்ற தன்மகனின்
காயங்கள் மட்டுந்தான் காணுமன்றி வேறெங்கும்
சாயுதலே இன்மையினால் தந்தையின் பாசத்தை
நேயமுடன் நானிங்கு நெகிழ்கவிதை பாடவந்தேன்!

முழுமைபெற்ற மாந்தர்களை முற்றுபெற்ற இலக்கியத்தை
பழுதின்றித் தம்மன்பைப் பாங்காக மைந்தர்முன்
வழுவின்றி வார்த்தைகளில் மலர்ந்தருளுந் தந்தையரை
விழுந்திங்கு தேடுகிறேன்; மேதினியில் காணவில்லை!

அத்தனைப் பெருமைகளை அற்புதமாய் வாழ்த்துகளை
முத்தனைய சிரிப்பொன்றால் முகிழ்க்கின்ற பேரன்பால்
வித்தகமாய்த் தான்பெற்ற வியனுலகின் தாய்மையெனும்
பித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ?

அன்னையென்ற கட்டிடத்தின் அடித்தளமே தந்தையவர்
தன்னிருப்பால் தடையின்றித் தருகின்ற தைரியமே;
தன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்காய்
முன்னிருத்தும் தந்தையவர் முகமூடி கண்டிப்போ?

தாயவளே சிலநேரம் தாவென்று தம்மக்கள்
நேயமுடன் கேட்கின்ற நெகிழ்ம பொம்மையதை
வாயுரையால் விலக்கிவிட மாளாத துயரடையும்
சேயதனின் ஆசைதனை தீர்ப்பவரும் தந்தையன்றோ?
=============================================

கவிதைப் பட்டிமண்டபம்…

06/02/2012

சந்தவசந்தம், கூகுள் குழுவில், சமீபத்தில் நடைபெற்ற கவிதைப் பட்டிமண்டபத்தில் தமிழுக்கு இன்று வளர்ச்சியே என்ற தலைப்பில் வாய்ப்பளிக்கப்பட்டு, ஒரு பாடல் தந்தேன்.  உளமென்னவோ தளர்ச்சியின் பக்கத்தில் இருந்தாலும், வாய்ப்பு வந்தது வளர்ச்சி அணியில் வாதிட!  தீர்ப்பு, எங்கள் அணிக்கே, கூடவே ஒரு சொல்லாட்சியுடன், வெற்றிக்கனியை வென்றெடுத்தது வளர்ச்சி அணி வாதத் திறமையினால்.

பட்டிமண்டபத் தலைமை: பேரா. பசுபதி அவர்கள்.

பட்டிமண்டப நோக்கர்கள்: கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்கள், கவியோகி வேதம் அவர்கள்

வளர்ச்சி அணித் தலைவர்: பாவலர் நாராயணன் சுவாமிநாதன்

பாவலர்கள்: நான்,  பாவலர் சுகந்தி வெங்கடேஷ்

தளர்ச்சி அணித் தலைவர்: பாவலர் சந்தர் சுப்ரமணியன்

பாவலர்கள்: பாவலர் கார்த்திக், பாவலர் அகிலா இராமசாமி
=============================================

என்னுடைய வாதம்:
=================

கவிதைப் பட்டிமண்டபம்:4
=====================

தமிழ் வணக்கம் (எண்சீர் விருத்தம்)
=============================

மலர்க்காவாய், மனம்நாடும் மழலைத் தேனாய்,
…..வஞ்சியர்கள் நாடுகின்ற வண்ணப் பூவாய்,
புலர்காலைக் காட்சியெனும் பனிப்பூ போர்த்த,
…..பூமியதன் புத்தமிழ்த மாட்சி மையாய்,
சிலிர்த்திருக்க சிந்தையள்ளும் தென்றல் காற்றாய்,
…..தித்திக்கும் தேன்பாகாய் நாவில் ஊறி,
வலிமையுடன் வந்தெதிர்க்கும் பகைவர் தம்மை
…..வகுந்தெடுக்கும் வண்டமிழே வாழ்க நீயே!

அவை வணக்கம் (கட்டளைக் கலித்துறை)
==================================

எண்ணும் உணர்வினில் ஏற்றம் பெருகிட இப்புவியில்,
நண்ணும் நிறைவுடன் ஏந்திப் பரிவுடன் நற்றமிழைப்
பண்ணில் அழகுற மேன்மை வளர்ச்சியைப் பாடவைக்கும்
வண்ணத் தமிழெனும் சந்த வசந்தமே வாழியவே!

தமிழின் உயர்வே! (கட்டளைக் கலித்துறை)
===================================

வள்ளைக் கவியென பூவின் மணமதன் மாட்சிமையாய்
துள்ளி எழுந்திடும் காலைக் கதிரதன் சூச்சுமமாய்
தெள்ளத் தெளிவுற உங்கள் உளந்தனில் தேடிடுவீர்
கிள்ளிக் கரந்தனை கொஞ்சம் விழிப்புடன் கேட்டிடுவீர்!

விண்ணில் எழுந்தவில் ஏழு நிறங்களாய் மாந்தரவர்
கண்ணில் தெரிவதும் கானல் அதுநிசம் இல்லையன்றோ?
வெண்மை யெனுமொரு உண்மை நிறமது மெய்மையன்றோ?
எண்ணி யிதையுளம் பொங்கத் தமிழினை ஏத்திடுவீர்!

ஒண்ட மிழதுவே மக்கள் நடுவினில் ஓரழகாய்,
வெண்மை நிறமது தன்னில் உறைபல வண்ணமதாய்த்,
தன்னைப் பலமுறை மாற்றும் நிலையதால் தாரணியில்
மென்மை நிறமென பூஞ்சைத் தமிழென விள்ளுவதோ?

மாற்ற மிலாதவை என்றும் மடிவதே மாண்பதனால்
மாற்ற மெனுமுயர் பண்ப துவேநிலை யானதன்றோ?
வேற்று மொழிகளின் தாக்கம் பலமுறை மேவியதால்
ஏற்றத் தமிழ்மொழி தாழ்ந்து கடைநிலைப் ஏகிடுமோ?

சந்த ரெனுங்கவி சிந்தை மயங்கிடச் சந்தமுடன்
செந்த மிழேநிலை தாழ்ந்த தெனபல வந்தமுடன்
சந்த மவைதனில் முந்தி வரிகளில் சாற்றியதும்
சிந்தை கவர்ந்திடும் விந்தை மரபெழிற் செந்தமிழால்!

வாழும் பலமொழி காணு மிலக்கியம் மாந்தியதால்,
சூழும் பகைவரும் நாணிக் கலங்கிடத் தொல்தமிழும்,
ஆழி யலையென வேழ நடையினில் இன்றுவரை;
ஊழி யதையெதிர் ஓங்க லெனநிதம் ஓங்கியதே!

ஊட கமொழியின் மேன்மை வளர்ச்சியை ஊசலென்று
பாட வரும்கவி மக்கள் உமதெதிர் பார்த்திடுவீர்;
நாடு கடந்துமே ஆழி கடந்துமே நம்மவையில்
கூடு தமிழ்மொழி பட்டி யரங்கமே கோலவெழில்!

எங்கே நெடுங்கதை இற்றை நிலையினில் என்பவர்க்கே;
மங்கா தொளிர்திடும் பாஞ்சா லிசபத மாகவிப்பா;
வங்கக் கடலிரை பாவேந் தரின்பெரும் வான்கவிப்பா;
சங்கத் தமிழொளி புத்தன் பிறப்பெனும் தேன்கவிப்பா!

இணைய வளர்ச்சியை நம்மின் மொழிக்கென ஏற்றிடவோ;
கணினித் துறையதன் மேன்மை தமிழ்மொழி கண்டிடுமோ;
அணியின் தலைவரே சந்தர்; குருதிசம் ஆங்கிலம்பின்
பணிவாய் உரைக்கிறேன் ஆர்க்கும் தமிழ்மொழி பங்களிப்பை!

கயலும், புலியுடன், வில்லும் வளர்த்த கனித்தமிழில்
நயமாய் புதுப்பா துளிப்பா இயைப்பா நகைதுளிப்பா
புயலாய் எதுகைப் பிணைத்தமிழ் செஸ்டினா போல்புதுமை
அயலும் இணைந்த அருந்தமிழ் இன்றைய அற்புதமே!

உடையை நமதுபண் பாட்டின் உருவம் உணர்ந்திடுவோம்;
கடையை விரித்து உடையை மொழிக்கே உடுத்துவதை;
தடமாய் நயம்பட நாவில் இனிப்பைத் தடவிடுமோர்
சடங்காய் உரைத்திடும் பொய்யும் நமக்கினி சாத்தியமோ?

பதின்ம எழுநூறு ஆண்டுகள் முன்னர் கவிமொழிதான்;
உதிக்கும் கதிரென வளர்வதால் பின்னர் உரைவழிதான்;
மதியறு ஆள்செயும் தாய்மொழி கேட்டை அறுத்திடநாம்
எதுவுமே செய்வ தியலாது வீழ்ச்சியென் றோதுவதோ?

கண்ணியம் போனகைம் பெண்ணாய் உரைத்த வரிகளைநான்
எண்ணினேன் உள்ளமே நொந்தது; அந்தோ எதற்கிதுவோ?
தண்மையாய்ச் சொல்கிறேன்; எந்தமிழ் என்றும் தமிழ்க்குமரி;
எண்ணிலா ஊறுகள் எத்தனை ஏற்றாள்; எழிற்கிழவி;

வேற்றுவர் தூற்றலும்  கூற்றுவர் சூழ்ச்சியும் வென்றிடுமோ?
போற்றுவர் போற்றலும் ஆற்றலும் ஆர்த்தலும் பொய்த்திடுமோ?
நாற்புறம் நாமினி நாளுமே சேர்ந்ததே நானிலமாம்
வேற்றுமை பார்ப்பதும் வேதனை சேர்ப்பதும் வேண்டுவதோ?

பாரதி சொன்னதை மாந்தரும் கொண்டினி பாரினிலே
தூரமும் தாண்டிநீ வேண்டிய வற்றையே மாமரமாய்
வேரதை மண்ணிலே ஆழமாய் ஊன்றியே வென்றிடுவாய்;
சேரரும் சோழரும் மீனரும் போலவே சென்றிடுவாய்!

விசித்தே அழுத தளர்வின் அணியே உணர்ந்திடுக;
புசிப்பதே பாடாய் இருப்பவர் வாழ்வினில் பூந்தமிழ்பா;
வசந்த மலர்மணம்; பாடலின் இன்பது வந்திடுமோ?
கசிந்தே உருக்கும் இலக்கியத் தென்றல் கருவுறுமோ?

பாமரன் கல்வியே இல்லாத தூமரன் பாரினிலே,
தேமதுத் தூய்மைத் தமிழையே பேசுவான் சீக்கிரமே;
ஆமவர்க் கல்வியைப் பெற்றிட நீங்களும் அன்புடனே;
வாமனர் ஓங்கிய பேருரு கொண்டு வருகையிலே!

செப்புவ துண்மையே; பொய்மை கலக்காத சேதியிது;
அப்புறம் பாமரன் ”ஆப்பிள்” ”அரத்தி”யென் றழைத்திடுவான்;
தப்பிதம் இன்றியே பிஸ்கட்டை ”மாச்சில்லாய்” தந்திடுவான்;
எப்பவும் ஆங்கிலம் சேரா நறுந்தமிழ் ஏந்திடுவான்!

தக்கபடி  சஞ்சிகை – ”நாளிதழ்” என்பார் தண்டமிழில்;
அக்ரா சனரோ ”அவைமுன் னவராய்” அருந்தமிழில்;
சொக்கும் ”மனசே” ”மனதாய்”  மலர்ந்திடும் தொல்தமிழில்
முக்கிய மந்திரி இன்றோ ”முதல்வராய்” முத்தமிழில்!

ஏழைகள் பேசா மொழியதை மன்பதை ஏற்றிடுமோ?
பேழையில் பூட்டியே வைத்திடும் செல்வம் பெருகிடுமோ?
தாழ்வும் உயர்வுமே கூரதைத் தீட்டுதல் தான்பொறுத்து;
வாழ்வினில் பாமரன் பேசும் மொழியது வாழ்ந்திடுமே!

முற்படும் தீமையாம் மூடர் செயல்களை மூடிவிட்டு,
கற்றிடும் நம்மொழி பல்வகை மெய்யெனும் காட்சிகளை
முற்றிலும் தன்னுடன்  ஏற்றிடும் வாழ்வியல் முத்தமிழே;
வெற்றிகள் மட்டுமே வேட்கையாய் ஏந்திநீ வெல்லுவையே!==================================================
இணையத்தில் குருதீஷ் ஆங்கிலம் அடுத்து பெருமளவில் பயன்படுவது  நந்தமிழே! ஆப்பிள் = அரத்தி (குருதி போல் சிவந்திருப்பதால்;  The word Apple is derived from the colour of the mouth part of Ape.)  பிஸ்கட்டு = மாச்சில்லு (மாவினால் செய்த சில்லு)

குடை வானம் கூப்பிடு தூரம்..

27/07/2011

இப்பாடல், சந்தவசந்தம் குழுவில் நடந்த 34ஆம் இணையப் பாவரங்கில் பாடியளித்த பாடல்.  கூடவே இதே பாட்டினை வானம் என்ற தலைப்பில் புதுவையில் 17.7.2011 ஞாயிறன்று நடந்த முப்பெரும் விழாவிலும் பாடி அளித்தேன்.

தமிழ் வணக்கம் (எண்சீர் மண்டிலம்)

தெற்கிலந்தை தமிழுக்கே அள்ளித் தந்த
    தேன்கவியே பாச்சுவைப்போர் மனதைத் தம்மின்
தற்பெருமை இல்லாத உண்மை யன்பால்,
    தம்வயப்ப டுத்துகின்ற ஆற்றல் கொண்ட,
நற்றமிழின் நலம்யாவும் விளங்கு கின்ற,
      நறுங்கவிதை பன்னூறாய்ப் புனையு மெங்கள்,
குற்றமிலாக் கவிமணியே வளங்கள் கோடி
    கொண்டிலங்க அருளரசன் தந்தேன் வாழ்த்தே!

அவை வணக்கம் (எண்சீர் மண்டிலம்) 

விந்தைமிகும் வேய்குழலாம் பாடற் றேனில்,
    வீழ்ந்தளையும் தும்பிகளாய்க் கவியிற் றோய்ந்து,
செந்தமிழாம் நம்மொழியில் முக்கு ளித்து,
    சீறுகின்ற சிலம்பமெனும் ஆட்டம் போல,
வெந்தழலாய் வேகவைக்கும் வெம்மை போல,
      விண்ணூரும் வெண்ணிலவின் தண்மை போல,
சிந்தனையைச் சிலுப்புகின்ற பாவி சைக்கச்,
    செய்கின்ற மன்றிதற்குத் தந்தேன் வாழ்த்தே!

குடைவானம் கூப்பிடு தூரம் (கலித்தாழிசை)

பேசாமல் கேட்கின்றார், பேசியே கேட்கின்றார்;
கூசாமல் கேட்கின்றார், கூட்டாகக் கேட்கின்றார்;
காசாகக் கேட்கின்றார், காதோடும் கேட்கின்றார்;
மாசான மாந்தர்மனம் மாறுதற்கோர் வேளையிது;
…..மாசுணத்தின் நஞ்சிங்கே மாறுதற்கோர் வேளையிது!

நீறாகப் போகும் நிலையில்லா வாழ்வினிலே,
கூறாத கொள்ளையராய் கூசாத கையூட்டில்,
பேறாக செல்வங்கள், பீடுகளை யாள்பவர்கள்,
மாறாரெ னத்தழைந்து வாழ்வதற்கோர் சாவுமணி;
…..வாய்மூடி மூங்கையென வாழ்வதற்கோர் சாவுமணி!

சாவென்னும் சந்திப்பை சத்தியமென் றெண்ணாமல்,
கூவுகின்ற கும்மிகளால், கூடிநிற்கும் கோடிமன
தேவையெனும் தேடுதலால், செந்தழலாய் நெஞ்செரிய
ஆவல்கள் ஆர்ப்பரிக்கும் ஆடலுக்கோர் சாவுமணி;
…..அவலமிகு ஊழலெனும் ஆடலுக்கோர் சாவுமணி!

ஆழியதன் பேரலையால் ஆடுகின்ற அண்டம்போல்,
சூழுகின்ற கூட்டமாம் தூங்கியெழும் மக்கள்முன்,
ஊழலிலே உன்னித்த ஊத்தையாம் உட்கார்கள்,
வீழுதலும் சத்தியமே; வெற்றுச்சொல் இல்லையடி;
…..மிதிபடுவார் நிச்சயமே; வெற்றுச்சொல் இல்லையடி!

கவிந்த குடைபோல கண்களுக்குத் தோன்றும்,
சிவந்த வெளிர்நீலச் சித்திரநீள் வானம்,
செவிதனில் கேட்கும் சிறுதொலைவே என்றால்,
அவியாக் கிழங்கனைய ஆசுகளா வேகாது?
…..அணிதிரண்ட மக்கள்முன் ஆசுகளா வேகாது?

வலையகத்தால் தூரங்கள் மாடெனவே ஆகும்;
தொலைதூர எண்ணங்கள் தொட்டுவிட ஏலும்;
மலைமுகடாம் மாப்புதிர்கள் மங்குலென மாறும்;
நிலையில்லா வாழ்வினிலே நேர்மையதும் ஓங்கும்;
…..நீதிநெறி காட்டுகின்ற நேர்மையதும் ஓங்கும்!

தெற்கிலந்தை அள்ளித் தந்த = பாவரங்கத் தலைவர் கவிமாமணி சு. இராமசாமி அவர்கள் இலந்தையெனும் ஊரில் பிறந்தவர். நீறாக = சாம்பலாக, பீடுகளை = பெருமைகளை, மாசுணத்தின் = பெரும் பாம்பின், மூங்கையென = ஊமையென, உன்னித்த = எழுந்த/நிமிர்ந்த, ஊத்தை = அழுக்கு, உட்கார்கள் = பகைவர்கள், ஆசுகளா = குற்றங்களா, மாடென = பக்கமென, ஏலும் = இயலும், மங்குலென = முகிலென

மேலும் சில பாடங்கள்…

15/05/2011

கீழிருக்கும் பாடல்கள் நான் என்னுடைய இளமையில் எழுதி, சந்தவசந்தத்தில் பாடங்கள் என்ற தலைப்பில் பாவரங்கில் மறுபதிவு செய்தேன்.   குறிப்பாக பல இடங்களில் மோனைத் தொடை விளங்காமல் போனாலும், மற்றைய இலக்கணங்கள் பொருத்தவரை வழுவாது அமைந்துள்ளன.

காதற் பாடம்: (நேரிசை வெண்பா)

வாழையெழிற் றண்டாய் வழவழக்கும் காலுரச
தாழைமணம் வீசும் கருங்கூந்தல் – வீழ்ந்திழைய
காந்தள் மலர்க்கை வளைத்தே இதழ்பொருத்தி
தேந்துளி முத்தமீந் தாள்.

காதற் பாடம்: (இன்னிசை வெண்பா)

சோலைக் குளமேவுந் தாமரையாய்ப் பெண்ணிருக்க
சாலப் பரிகின்ற செங்கதிராய் நானிருந்தேன்;
காலக் கரையான் கரைத்தழிக்கக் காதலெனும்
கோலம் அழிந்ததுவே காண்.

உறவுப் பாடம்: (வெண்டளையான் வந்த அறுசீர் விருத்தம்)

தோய்ந்த பரிவால் கவினுறு
…..தோற்றங்கள் தாயவளேக் காட்டியதும்;
ஆய்ந்தே உலகின் அறிவதனை
…..அன்போடு தந்தையவர் ஊட்டியதும்;
பேயாய்ப் பிடித்தென்னைப் பாடெனப்
…..பீடித்த ஆசைகள் சாற்றியதும்;
தீயாம் அவற்றின் துயரமறத்
…..தெய்வம்போல் அண்ணன்கள் தேற்றியதும்;

சுற்றமெனும் உண்மை உறவுகள்
…..தோற்றிய பாடமென நானுலகில்,
கற்றது; நானுலக மேடையிலே
…..கற்றதனால் நெஞ்சினில் வேதனைகள்,
உற்றது; வீணான வேதனைகள்
…..உற்றதனால் வாழ்வினில் பட்டறிவே,
பற்றியது; பட்டறிவும் பற்றியதால்
…..பாரில் அடைந்தேன் உயர்வே!

வளர்ச்சிப் பாடம்: (கலிவெண்பா)

அறியாப் பருவ அகண்டவெளிப் பாடம்;
உறக்கத்தில் நேர்ந்த உருவெளியின் தேடல்;
சிறுவயதுச் சின்னம்; சிதைந்த சிதறல்;
வெறுமைக் கனவுகளின் வேடிக்கை உலகம்!

அறிவியலின் பாடத்தை ஆர்வமாய் விரும்ப,
செறிவான செல்வம் தகையாத சூழல்,
கறந்திட் டதனால் கனவும் கலைந்து,
பொறுப்பாய்ப்  பொருளியல் கற்கவே நேர்ந்தேன்!

வருத்தம் இருந்தாலும் வாழ்க்கை நடப்பில்,
சருகாம் வழியினிலே தாய்தந்தை தந்த
இருப்பாம் இதனையே இன்முகமாய்ப் போற்றி
இருக்கும் இயல்பே எழில்!

அன்பின் வள்ளல் அன்னை தெரேசா.

10/05/2011

31.10.2010அன்று புதுவை மாநில படைப்பாளிகள் கூட்டமைப்பும், இந்திய அரசு தென்னக பண்பாட்டு மையம், தஞ்சையும் இணைந்து திங்கள்தோறும் நடாத்தும் நாடக, கவிதை, பாராட்டு விழாவில், நடைபெற்ற கவிதைப் போட்டில் பரிசு வென்ற என் கவிதை. கட்டமைப்பு எண்சீர் விருத்தம்.

தாழ்ந்தவரை தம்மைந்தர் எனவே எண்ணி
…..சலிப்பின்றி உழைத்திட்டத் தொண்டின் செம்மல்!
ஏழ்மையினர் தாமுற்ற துன்பங்  கண்டே
…..எழுந்துள்ளம் உருகிவிட்ட அன்பின் வள்ளல்!
வாழ்வியலில் தாம்பெற்ற மேன்மைக் கல்வி
…..மாந்திரினம் உய்ந்திடவே தந்த செல்வி!
வீழ்ந்தவர்கள் வாழ்வதனில் விடிவைக் காண,
…..விடிவெள்ளி போலுதித்தச் சேவைக் கன்னி!

சற்றும்தன் மனந்தளரா முகில தற்கு
…..தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் பேதம் முண்டோ?,
வற்றாத கங்கையது பார தத்தின்
…..மண்மேலே பாய்ந்துநலம் தருதல் போலே
மற்றவர்கள் தொடத்தயங்கும் தொழுநோ யாலே
…..வளங்குன்றி வாடுகின்ற மனிதர் தம்மை
பெற்றெடுத்தத்  தன்குருதி மக்கள் என்றே
…..பேணுகின்ற சால்பதனை நேரில் கண்டோம்!

அன்னியராய் இருந்திடினும் கருணை வெள்ளம்;
…..அன்பதனால் இந்தியரை ஆண்ட உள்ளம்!
தன்மனத்தால் தூய்மையொன்றே நினைத்த வாய்மை;
…..தன்னலமே கருத்தின்றிக் கொடுத்த தாய்மை;
முன்னின்று களமிறங்கி மற்ற வர்க்கும்
…..முன்னோடி என்றிவரும் உழைத்த தாலே,
நன்னெறிகள் பூண்டிலங்கும் தெரெசா உன்னை
…..நாடெங்கும் போற்றுகிறோம் அன்னை யென்றே!