ஒற்று மிகும் இடங்கள்

அன்புடையீர்

தமிழ்

தமிழ்

இராஜ.தியாகராஜனின் வணக்கம்.  முதலில் பொதுவாக ஒற்று மிகும் இடங்களைப் பற்றி பார்ப்போம்.

இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் ஒற்று மிகும் (உருபு = ஐ):-
(எ-கா)
இலக்கணத்தை + படித்தேன் = இலக்கணத்தைப் படித்தேன்,
இலக்கியத்தை + கண்டேன் = இலக்கியத்தைக் கண்டேன்,

நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = கு):-
(எ-கா)
தமிழுக்கு + பொன்னாள் = தமிழுக்குப் பொன்னாள்
தேர்வுக்கு + போனான் = தேர்வுக்குப் போனான்

ஏழாம் வேற்றுமை உருபையடுத்து மிகும் (உருபு = இடை):-
(எ-கா)
நல்லாரிடை + புக்கு = நல்லாரிடைப் புக்கு

ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் மட்டும் மிகும் (உருபு = அது, உடைய):-
(எ-கா)
யானை + கால் = யானைக்கால் (யானையினது கால்)

இரண்டு, மூன்று, ஐந்து, எழு ஆகிய உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைகளில் மிகும் :-
(எ-கா)
இரண்டாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மோர் + குடம் = மோர்க் குடம் (மோரை உடைய குடம்)
மூன்றாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மர + கதவு = மரக் கதவு (மரத்தால் ஆன கதவு)
ஐந்தாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மலை + கல் = மலைக் கல் (மலையினின்று வரும் கல்)
ஏழாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
நீர் + செடி = நீர்ச் செடி (நீரின் கண் உள்ள செடி)

பின்வரும் சொற்களையடுத்து வரும் வல்லெழுத்துகள் மிகும்:- அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி, அங்கு, இங்கு, எங்கு, இனி, தனி, என, மற்ற, மற்று, மற்றை, முன்னர், பின்னர், எல்லா, அவ்வகை, இவ்வகை, எவ்வகை.

(எ-கா)
அந்த + கரண்டி = அந்தக் கரண்டி. இந்த + சிற்பம் = இந்தச் சிற்பம். எந்த + பட்டம் = எந்தப் பட்டம். அப்படி + போனான் = அப்படிப் போனான்.
இப்படி + பார்த்தான் = இப்படிப் பார்த்தேன். எப்படி + கண்டான் = எப்படிக் கண்டான். அங்கு + சென்றான் = அங்குச் சென்றான்.
இங்கு + தங்கினான் = இங்குத் தங்கினான். எங்கு + கண்டாய் = எங்குக் கண்டாய். இனி + கேள் = இனிக் கேள். தனி + தமிழ் = தனித் தமிழ்.
என + சொன்னாள் = எனச் சொன்னாள். மற்று + பாடலாம் = மற்றுப் பாடலாம். மற்ற + குதிரைகள் = மற்றக் குதிரைகள். மற்றை + கனவு = மற்றைக் கனவு.
முன்னர் + கண்ட = முன்னர்க் கண்ட. பின்னர் + கேட்ட = பின்னர்க் கேட்ட. எல்லா + பெண்கள் = எல்லாப் பெண்கள். அவ்வகை + சிற்பம் = அவ்வகைச் சிற்பம். இவ்வகை + பண்பு = இவ்வகைப் பண்பு. எவ்வகை + தோற்றம் = எவ்வகைத் தோற்றம்.

பின்வரும் சொற்களையும், பொருள் தரும் தனி நெடியலையும் அடுத்து மிகும்:-
தீ, பூ, ஈ
(எ-கா)
தீ + கனல் = தீக்கனல்,
பூ + சரம் = பூச்சரம்,
ஈ + பண்டம் = ஈப்பண்டம்

ஓரெழுத்தொரு மொழி:-

பின்வரும் எழுத்துகளில் வருமொழி, பெயர்ச் சொல்லாக இருந்தால் மட்டுமே மிகும்:-
அ, இ, எ, ய், ர், ழ்
(எ-கா)
அ + பக்கம் = அப்பக்கம்,
இ + குரல் = இக்குரல்,
நாய் + பாசம் = நாய்ப்பாசம்
தமிழர் + பண்பு = தமிழர்ப் பண்பு
தமிழ் + பயன் = தமிழ்ப் பயன்

உவமைத் தொகை:-
(எ-கா)
மதி + குடை= மதிக் குடை (மதியொத்தக் குடை)

பண்புத் தொகை:-
(எ-கா)
புது+ பெண்= புதுப்பெண்(புதுமையான பெண்)

“த்து” என்று முடியும் சொற்களையடுத்து:-
(எ-கா)
பார்த்து + போனான் = பார்த்துப் போனான்
காத்து + கிடந்தான் = காத்துக் கிடந்தான்

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அடுத்து மிகும்:-
(எ-கா)
பாடா + கிளி= பாடாக் கிளி (பாடாத கிளி)
ஒடா + தேர் = ஒடாத் தேர் (ஓடாத தேர்)

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை அடுத்து மிகும்:-
(எ-கா)
சாரை + பாம்பு = சாரைப் பாம்பு
மருத்துவ + கல்வி = மருத்துவக் கல்வி

பின்வரும் சொற்கள் வினையெச்சங்களாக வந்தால் மட்டுமே ஒற்று மிகும்.
ஆக, ஆய், போய், அன்றி, இன்றி, போல்

(எ-கா)
நன்றாக + பாடினாள் = நன்றாகப் பாடினாள்.
ஓடுவதாய் + சொன்னான் = ஓடுவதாய்ச் சொன்னான்.
போய் + செய் = போய்ச் செய்.
அன்றி + சொல்லான் = அன்றிச் சொல்லான்.
இன்றி + போவான் = இன்றிப் போவான்.
போல + செய்= போலச் செய்.

இனி ஒற்று மிகா இடங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்

7 பதில்கள் to “ஒற்று மிகும் இடங்கள்”

  1. சீனா ( Cheena ) Says:

    அன்பின் தியாகராஜன்

    இலக்கணம் அறிய ஒரு அரிய இடுகை

    நல்வாழ்த்துகள்

  2. tyagas Says:

    மிக்க நன்றி சீனா அவர்களே!

  3. உஷா மதிவாணன் Says:

    அன்புள்ள தியாகராஜன் அவர்களுக்கு,

    மிக்க நன்றி!
    ஒரு பிழை திருத்தும் பணி செய்து வருகிறேன்.
    இத்தளம் நன்கு உதவுகிறது.

    தொண்டு தொடரட்டும்.
    நலம் வாழ்க!
    உஷா

  4. ஜெயபாண்டியன் கோட்டாளம் Says:

    ‘த்து’ என முடியும் சொற்களையடுத்து மிகும் என்கிறீர்கள். அதேபோல், ‘க்கு’, ‘ச்சு’, ‘ட்டு’, ‘ப்பு’, ‘ற்று’ என முடியும் சொற்களையடுத்தும் மிகுமல்லவா?எடுத்துக்காட்டுக்கள்: எடுத்துக்காட்டு, நச்சுப் புகை, தட்டுப்பாடு, பருப்புக் கூட்டு, மாற்றுச் சேலை. ‘வன்றொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து மிகும்’ என்பது பொது விதி. இப்போது எனக்கு ஓர் ஐயம். இந்த விதியில் ‘க்கு’ அடங்கியிருக்கும்போது, ‘நான்காம் வேற்றுமை உருபுக்குப் பின் மிகும்’ என்ற தனி விதி இருக்கவேண்டிய அவசியம் யாது?

    • ஜெயபாண்டியன் கோட்டாளம் Says:

      நான் முன்பு கேட்ட கேள்விக்கு இப்போது எனக்குப் பதில் தெரிந்துவிட்டது. சொல்லின் முடிவில் உள்ள எல்லா வல்லின உகரங்களும் குற்றியலுங்களல்ல. நான்காம் வேற்றுமை உருபு முற்றியலுகரம் போலும்.

  5. P.D. Thanappan Says:

    vanakkam Thiru Tiyagarajan. Ippothellam Thamizhargalukku Thamizhaip pattri kavalaiye illai. Ungal pani sirappanathu. Ithu thodarattum. Vazhthugal.

பின்னூட்டமொன்றை இடுக