என்று மடியும் இம்மோகம்?

இந்தபாடல் ஒரு பரிசினைப் பெற்றுத் தந்தது எனக்கு.

என்று மடியும் இந்த அடிமையின் மோகம்.
———————————————————-

(வெண்டளையான் வந்த அறுசீர் ஆசிரிய விருத்தம்  (தேமா, புளிமா, கருவிளங்காய் என்ற அமைப்பு அரையடிக்கு)

வையக் கவிஞன் வளமுடனே
…..வேய்ந்த கவியிற் புதைந்திருந்தேன்;
நெய்த சரிகை வனப்பனைய
…..நேர்த்தி யழகில் நனைந்திருந்தேன்!
மையா மிருளைக் கிழித்திடுமோர்
…..மாத்தீ  யொளியின் வடிவெனவே
மெய்யே சிலிர்க்க எழுந்தவனின்
…..வீர முகத்தை வியந்துநின்றேன்!

எண்ண யினிக்கும் நறுந்தமிழின்
…..இந்நா ளழகை வினவுகையில்
கண்கள் சிவக்க வெடித்தகவி
…..காராய்ப் பொழிந்த உரையிதுவே,
“எண்ணி லடங்காப் புதுமையெழில்
…..பொங்கி வழியப் பொலிந்திடுதே!
விண்ணைக் கடந்த அறிவியலின்
…..விந்தை பலவும் அருமையெனில்…

சொத்தை யெனவே தமிழ்மொழியைத்
…..தூக்கி யெறியும் தமிழினத்தோர்;
எத்திப் பிடுங்கும் வழிகளையே
…..ஏற்று  பிழைக்கும் அடிமனத்தோர்;
சித்தஞ் சிலுப்பு மறிவியலால்,
…..சிந்தை கலங்குஞ் சிறப்பிதுவோ?
வித்தை பலவு மளித்திடுமோர்
…..மேன்மை யறிவின் அழகிதுவோ?

பாக்க ளதில்நம் மனங்கவர்ந்த
…..பார  தியவன் உரையுறுத்த
தூக்கங் கலைந்தே எழுந்திருந்தேன்;
…..சொப்ப னமேயீ தெனவுணர்ந்தேன்!
ஏக்கம் நினைவை அரித்தெடுக்க,
…..என்னில் முகிழ்ந்த வினாவிதுவே;
நோக்கின் றியேநாம் நடத்துகின்ற
…..நொண்டிப் பயணம் முடிவதெந்நாள்?

பின்னூட்டமொன்றை இடுக