Archive for மே, 2011

கனவு காணுங்கள்…

03/05/2011

பாவலர் கலாவிசு அவர்களின் ”கவிதை வானில்”  அமைப்பு நடாத்திய பாவரங்கில் நான் பாடிய கவிதை வரிகள்.

கனவு காணுங்கள் (கொச்சகக் கலிப்பா)

சிற்றலையாய் மாமலையில் தோன்றுகின்ற சிற்றாறோ
மற்றெதையும் தன்மனதில் வாங்கிடவே எண்ணாமல்
சுற்றிநிலங் காடுமலை சூழ்ந்திருக்கும் பேராழி
பற்றிடத்தான் ஓடுவதைப் பார்த்திருப்பாய் என்தோழா!

நாற்றிசையும் ஆளுகின்ற நம்பரிதிச் செம்படராய்
மேற்றிசையில் வீழ்ந்தாலும் வெம்பிழம்பாய் நானிலத்தில்
வீற்றிருந்து  நன்னலங்கள் மீட்டிடவேக் கீழ்த்திசையில்
ஆற்றலொடு மீண்டெழுமே அம்புவிக்குக் காவலென!

மண்ணுலகில் ஊழ்த்துவிட்ட மன்னுயிர்கள் அத்தனையும்
தன்வழியில் ஓர்முடிவைத் தானெடுத்து அவ்வழியே
எண்ணியதை ஓர்முகமாய் ஏற்றிங்கு வாழ்கையிலே
விண்மீனாம் மாந்தரிலே மேன்மையுற்ற இந்தியர்நாம்;

மோழையெனத் தான்மயங்கி மூலையிலே குந்திவிட்டு
சூழுகின்ற காரெனவே தோன்றுகின்ற வீண்கனவில்
வாழுகின்ற நாள்வரையில் வாழ்வதையா நம்கலாமும்
தாழ்விலாத தன்னுரையாய்த் தந்திடுவார்? இல்லையில்லை!

நீணிலத்தில் காணுகின்ற நேரறிவைத் தம்வாழ்வில்
வாணுதலின் நங்கையவர் கல்வியதைத் தம்வாழ்வில்
தேன்நிகர்த்த நந்தமிழின் மேன்மையதைத் தம்வாழ்வில்
கானகத்துக் கல்வியினைக் கற்பதையேத் தம்வாழ்வில்

எந்நாளும் ஒற்றுமையாய் இருப்பதையேத் தம்வாழ்வில்
சிந்தைகுளிர் நூல்களுறை சீரறிவைத் தம்வாழ்வில்
இந்தியர்கை ஒங்கியொரு அறிவியலால் வானகத்து
விந்தைவெளி மண்டலத்து வீரரெனத் தம்வாழ்வில்

ஓர்கனவாய் இன்றிளையர் ஏற்றிடத்தான் வேண்டுமென்றார்;
சீர்த்தியதும்  வாழ்வியலில் தேடித்தான் வந்தாலும்
ஊருனக்குத் தூற்றுதலைச் சேறெனவேத் தந்தாலும்
தேர்ந்தெடுத்த நேர்க்கனவைச் சீர்க்கனவாய்ப் போற்றுகவே!

மனிதம்….

03/05/2011

இந்த பாடல் மரத்தடி தளத்தில் வெளியான ஒன்று.  (இன்று அந்த தளமே கிடைக்கவில்லை).  பின்னர் கூடல் தளம் அதை அவர்களாகவே வெளியிட்டனர்.

மனிதம் (எண்சீர் ஆசிரிய மண்டிலம்)

ஒருநாளில் மறைந்துவிடும் குமிழாம் வாழ்வு;
…..உயிர்க்குருவிக் கூட்டைவிட்டுப் பறந்தே ஏகும்!
எரிந்துவிழும் பிணங்களையே நேரில் கண்டும்,
…..இறுமாப்பாய் இருந்திடுவேன் என்றே வாழ்ந்தாய்!
இரைந்திரைந்து பொதுநலமே வாழ்க்கை என்று,
…..இருட்டறையில் தன்னலமே பேணு கின்றாய்!
அருளொளியாய் புறம்பொலிய புதுக்கி நின்றாய்;
…..அகந்தெரிந்தால் உள்ளொளிக்கும் உண்மை நிறமே!

ஆங்கெழுந்தே ஒளிவீசும் பரிதி யொத்தாய்;
…..ஆழ்மனமோ கறுத்திருக்கும் கரியே அன்றோ?
தீங்கிழைக்கும் தீக்குண்டைக் கண்டேன் என்றாய்
…..தீய்க்குமத்தீ யிலெரிவதும் நீயே அன்றோ?
பாங்கெழிலாய் அண்டவெளிப் பாலமிட்டாய்;
…..பாய்ந்தேகும் உன்மனத்தை ஆள்வ தென்றோ?
ஓங்குமலை எல்லாமே கையி லென்றாய்;
…..உன்னுள்ளம் அடக்காத ஆசை யுண்டே!

எத்தனைப் பாடங்கள்!

03/05/2011

(நிலைமண்டில அகற்பா)

கன்னற் சுவையாம் கனிவும் ஒருபாடம்;
என்னில்  தோன்றும் கவிதை  ஒருபாடம்;
விண்ணி தோன்றும் வில்லும் ஒருபாடம்;
மண்ணின் மேன்மை மனிதம் ஒருபாடம்;

பொங்கிடும் நந்தமிழ்ப் புத்தக மும்பாடம்;
மங்கா தொளிதேடும் விட்டில் ஒருபாடம்;
செங்கதிர் தீட்டும் சிவப்பும் ஒருபாடம்;
கங்கிருட் காட்டின் கருமை ஒருபாடம்;

அடுக்கிய சொல்லின் அசையும் ஒருபாடம்;
தடுக்க வியலாத் திரையும் ஒருபாடம்;
நடுங்க வைக்கும் நோயும் ஒருபாடம்;
நடக்க வைக்கும் கொழுப்பும் ஒருபாடம்;

அவள்  காட்டும்  அன்பும் ஒருபாடம்;
கவலை தீண்டும்  கனவும்  ஒருபாடம்;
பவள மல்லி மலரும் ஒருபாடம்;
குவளை மலராம் கண்ணும் ஒருபாடம்!

அவன் வழியில் திரள்வோம்..

03/05/2011

பட்டுக்கோட்டையாரின் பிறந்தநாள் விழாப் பாவரங்கில் நான் பாடிய பாடல்.

எண்சீர் ஆசிரிய மண்டிலம் (காய்-காய்-மா- தேமா என்ற கட்டமைப்பு)

நெறியதுவே இல்லாத மிடிமை தன்னை;
…..நேர்மைக்கே பூட்டுமிட்ட அடிமை வாழ்வை;
வறுமையினைத் தனிப்பாவில் சாடும் தீரன்;
…..வாழ்வினிலே நீதியதைத் தேடும் தீரன்!
அறத்துடனே சிறுவர்க்கும் வீரம் சொன்ன,
…..அரசிளங் குமரிப்பா ஒன்றே சான்று!
மறைந்துமுய்யும் கவிஞனவன் கவிதை உள்ளம்;
…..மலர்தோங்கும் வெண்டிரையில் அறிந்தோம் நாமே!

நாமின்று வாய்திறவாச் சிலையா என்று,
…..நாதியற்ற வர்களுக்கே நீதி கேட்டான்;
பூமலர்கள் புகழ்மொழிகள் அனைத்தை யுந்தான்
…..புழுவென்றே தள்ளிவிட்டப் பொதுமை வீட்டான்;
ஊமையென வாழ்ந்திருக்கும் தமிழர் தம்மை,
…..உயர்த்திடவே பலநூறாய்க் கவிதை செய்தான்;
ஆமையெனக் கூடடங்கி இருந்தி டாமல்
…..அவன்வழியில் அணியெனவேத் திரண்டோ மிங்கே!

தலையது குனிந்திடா பாவலன்..

03/05/2011

பாவேந்தரின் பாட்டுப் பரம்பரையில் வந்த பாவலர்களின் ஒருவரும், தாழ்த்தப்பட்ட இனம் என்பதாலேயே, தன்னுடைய ஒரு காவியத்தைத் தொலைக்க நேர்ந்தவரும்  ஆன  கவிஞர்  தமிழ்ஒளிக்கு வாழ்த்துப்பா:

வள்ளையாம் பாடலை மழையதன் துளியெனத்
தெள்ளிய தென்றலும் தெளித்திடும் மணமெனத்
துள்ளிடும் நந்தமிழ்ச் சொல்லதன் சுவையென
அள்ளியே தந்திடும் அருந்தமிழ்ப் பாவல!

அறத்தமிழ்க்  பாட்டென அருள்மகன்  புத்தனின்
பிறப்பெனும் கதையினைப் பிழையற உரைத்தனை;
துறைமுகஞ் சார்தொழில் துன்பமும், தாழ்ந்தவர்
உறுமிடர்த் துயரெனும் உண்மையும் உரைத்தனை!

உலையெரி நெருப்பெனும் உணர்வுறைப் பாக்களை,
விலையிலாப் பொதுநிலை மிளிர்த்திடப் புனைந்திடும்
தலையது குனிந்திடாத் தமிழ்ஒளிப் பாவல;
நிலைபெறுஞ் சிலையென நினைத்தினி வாழ்வமே!
…………………………………………………………………..
வள்ளைப்பாட்டு, மழைத்துளி, புத்தர் ஜனனம்,
துறைமுகத் தொழிலாளி,  அரிசனர், நிலை
பெறும் சிலை, மேதினம் ஆகியவை கவிஞர்
தமிழ் ஒளியின் படைப்புகள்.

குணம் சொல்லும் நோக்கு..

03/05/2011

குணம் சொல்லும் நோக்கு(கொச்சகக் கலிப்பா)

நீள்நோக்கு நேர்மையெனும் நெடுந்நோக்கு இவ்விரண்டும்
மீள்நோக்குக் கூரியதோர் வேல்நோக்கு மற்றிரண்டும்
தாள்நோக்கு வான்நோக்குத் சார்நோக்கு மொத்தமுமே
வாள்நோக்காம் செம்மையெனும் வண்டமிழால் வந்தகுணம்.

சீர்நோக்கு எரிக்கின்ற தீநோக்கு இவ்விரண்டும்
வேர்நோக்கு வெட்டவெளி வெறுநோக்கு மற்றிரண்டும்
பார்நோக்குச் ஊர்நோக்குப் பன்னோக்கு மொத்தமுமே
நேர்நோக்காம் நிறைவான நெடுந்தமிழால் வந்தகுணம்

வளநோக்கு வாழ்வியலின் மறுநோக்கு இவ்விரண்டும்
களநோக்குக் கருக்கிவிடும் கனல்நோக்கு மற்றிரண்டும்
துளிர்க்கின்ற துடிப்பானச் சொல்நோக்கு மொத்தமுமே
பளிச்சென்ற  பெருநோக்கும்  பைந்தமிழால் வந்தகுணம்.

வாழ்வியற் பாடங்கள்……

03/05/2011

வாழ்க்கைப் பாடம்: (கட்டளைக் கலித்துறை)

நுணலாம் மரத்திலே சிக்கிய காற்றாடி நூலெடுக்க
துணிந்து குரங்கென  ஏறி  யெடுக்க தொத்தியவனை
மணிப்பூண் மினுக்கும் மிளாரால் விளாசியத் மாமனது
பணையடி கூடப் புவியில் தகவான பாடமய்யா!

கண்ணன் முதலிக் கடைக்கு விரைந்துநீ  காற்றெனவே
எண்ணை யுடன்வா  என்றுபணம் தூக்குடன் என்றெனையே
அன்னை அனுப்பியச் சொல்மீறிக் கைச்சூதாம்  ஆட்டமெனும்
பண்சீட்டில் விட்டதாற்  பட்ட அடிகூடப் பாடமையா!

கட்டு நுடங்கிடைக் கன்னியைக் கண்ணாலே கண்டதுமேச்
சிட்டின் சிறகாய் சுழன்றா டுகின்றவென் சிந்தனையை
கட்டிலா மாமன மத்தாப்பை இல்லாளும் காதுபற்றி
குட்டிட அந்நேரம் கற்றதும் அற்புதப் பாடமைய்யா!

பள்ளிக் கழிவறைப் போந்து திருடனாய்ப் பாதகமாம்
கொள்ளி யிடும்புகைக் கேடாம் பழக்கத்தை கொன்றுவிட
பள்ளியில்  ஓங்கி  உழைத்த எமதன்பு பாலசுந்தர்
பள்ளித் தலைமைப் பிரம்பின் அடிகூடப் பாடமய்யா!

நற்றாயும்  தன்னிடை பாரம் இறக்கிய நாள்முதலாய்
பற்றிடும் தீயிலிப் பூவுடல் வெண்ணீறாய்ப் போகுவரை
உற்றிடும் துன்பங்கள் ஆயிரம் ஆனாலும் அத்துயரம்
கற்பிக்கும் கல்வியும் கோடி யதுபாடம் கற்பதுவே!

இசையரசிக்கு வாழ்த்துரை…

03/05/2011

இசையரசி திருமதி சுதா இரகுநாதன் அவர்கட்கு வாழ்த்துரைக்கும் போதில்  வாழ்த்துப் பாடலில் பல பண்களின் பெயர்களான நாமதேசி, தாமவதி, நவனீதம், நாட்டை நாமநாராயணி, நாக நந்தினி,  இராம மனோகரி,  செஞ்சுருட்டி, சுவர்ணாங்கி, சிம்மெந்திர மத்யமம், இந்தோளம் ஏமவதி, சலநாட்டை, வம்சவதி,  ஸ்ரீராகம்,  வசந்தா, அம்சவதி, ரூபவதி, கானடா, தானரூபி, மோகனம், தரங்கிணி, தாரிணி,  கலாவதி, கல்யாணி, காம்போதி, கனகாங்கி, பைரவி, தில்லானா, வராளி, தர்பார், ஆரபி, இவற்றையே பயன்படுத்தி இருக்கிறேன்.

(கொச்சகக் கலிப்பா)

நாமதேசி தாமவதி நவனீதம் நாட்டையுடன்
நாமநா ராயணியும் நாகமென்ற நந்தினியும்
ராமம னோகரியை ரசனையுடன் பண்ணிசைக்கும்
தேமதுரத் தேனிசையே! சீரணங்கே! வாழியவே!

செஞ்சுருட்டி சுவர்ணாங்கி சிம்மேந்த்ர மத்யமமும்
இந்தோளம் ஏமவதி இனிக்கின்ற சலநாட்டை
வம்சவதி ஸ்ரீராகம் வசந்தாவைப் பண்ணிசைக்கும்
அம்சவதி ரூபவதி ஆர்த்துலகில் வாழியவே!

கானடாவில் அலைபாயும் கலையெழிலை காட்டுகின்ற
தானரூப மோகனமே! தரங்கிணியே! தாரிணியே!
கானமெனும் கலாவதிநீ! காலமெலாம் ஒளிவீசும்
வானகத்து விண்மீனாய் மண்ணுலகில் வாழியவே!

கல்யாணி காம்போதி கனகாங்கி பைரவியும்
தில்லானா வராளியும் சிலுசிலுக்க தர்பாரும்
அல்லிப்பூ வெள்ளையென ஆரபியைப் பண்ணிசைக்கும்
மல்லிகையே மங்கைநீ மணம்பரப்பி வாழியவே!

சேல்விழியால் சுடுவதென்ன?

03/05/2011

சேல்விழியால் சுடுவதென்ன… (கொச்சகக் கலிப்பா)

அள்ளிமனம் கொள்ளையிடும் அழகுநிலா நீயிருக்க
வெள்ளிநிற வெறுநிலவை வீணாக பாடுவனோ?
துள்ளிவரும் மயில்விழிநீ தோகையென வீற்றிருக்கக்
கள்ளனெனத் தோன்றுகின்ற கருநிலவை பாடுவனோ?

சில்லென்றே வீசுகின்ற தென்றலது தொடுவதுபோல்
சொல்லத்தான் எண்ணியே தோன்றிட்ட யென்கவிதை
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகத் தரவந்தேன்;
நில்லென்றே நீயுன்றன் நீள்விழியால் சுடுவதென்ன?

தாவிமனம் நாடுகின்ற தண்டமிழில் வெள்ளன்னத்
தூவியென நெஞ்சத்தைத் தொட்டிசைக்கும் பாட்டெழுதி
நாவினிக்கும் நாயகியே நானுனக்கு சொல்கையிலே
தேவிமுகம் பாராதுன் சேல்விழியால் சுடுவதென்ன?

கன்னதலன் சாற்றுடனே கற்கண்டைத் தான்சேர்த்து
என்னுள்ளே நான்கலந்து என்காதல் தேனமுதை
நன்னணங்குன் கைகளிலே நற்கவியாய் தரவந்தேன்
புன்சிரித்தே பாராதுன் பூவியால் சுடுவதென்ன?

முகமூடிகள்…

03/05/2011

முதலில் இதற்கு வேஷங்கள் என்றுதான் தலைப்பிட்டு, முகநூல் அன்பர்களுடன் பகிர்ந்திருந்தேன்.  மீள்பார்வையில்  கவிஞர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் வேடங்கள் என்று தமிழ்படுத்தி இருக்கலாமே என்று நவம்பர் 2010இல் கருத்துரைத்ததை மே திங்கள் 2011இல்  கண்டேன்.   வேஷம் என்பது தமிழல்லாத போது திசைச் சொல்லான வேடம் என்பதும் வேண்டாமென, முகமூடிகள் என்று தலைப்பிட்டு விட்டேன்.

மூகமூடிகள்…  (இன்னிசை வெண்பாக்கள்)

கோடிமலர் பூத்திடுமே கோலமெனக் காவதனில்
ஆடுகின்ற பூக்களிலே அத்தனையும் ஆண்டவனை
நாடிமணம் சிந்திடத்தான் நாளுமின்று நேர்ந்திடுமோ,
தேடியவன் தாள்மீதிற் சேர்ந்து.

முழைநறு பூக்குவையில் மீந்தசில பூக்கள்
குழையர் குழலேறும் கொண்டவனின் கையால்
பிழைத்திட்டக் கூர்முகையில் பேரற்ற பூக்கள்,
விழைவற்று காலடியில் வீண்.

பாடுகுயில் ஆடுமயில்  பாசமலர் கோடியெனில்
தேடுமனக் கோணலதால் தேடுவதும் நேர்கையிலே
ஆடிவரும் ஆசையதால் ஆனமனம் வீழ்கையிலே
மூடியெனப் போகும் முகம்