Archive for மே, 2011

தொடையிலக்கணம்-1

05/05/2011

பாக்களைப் பற்றியும், பாவினங்களைப் பற்றியும், பாட்டியலைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு முன்னர் அறிந்து கொள்ள வேண்டியவையாவன:-

1) அசை, சீர்
2) தளை
3) தொடை

அசை, சீர் இவைகளைப் பற்றியும், தளையினைப் பற்றியும் முன்னர் ஒரு சிறு விளக்கக் கட்டுரைகளை முகநூலின் குறிப்பாக தந்திருந்தேன்.  இவைகளைப் படித்தறிந்தபின், மரபுப் பாக்களை இயற்றுவதற்கு முன்னர் முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டிய இலக்கணம் “தொடை”.   சந்தப்பாக்களாக இருப்பினும், புதுப்பாக்களாக இருப்பினும், துளிப்பாக்களாக இருப்பினும், நவீனப்பாக்களாக இருப்பினும், மரபுப்பாக்களாக இருப்பினும், ஏதேனும் ஒரு தொடை விகற்பம் (அமைப்பு) இல்லாத பாக்களே இல்லையென்று அறுதியிட்டுச் சொல்லலாம்.

தொடை என்றால் என்ன? தொடு என்னும் ஏவல்வினையுடன், ”ஐ” விகுதி சேர்ந்து செயப்படுபொருள் பெயர் உருவாகும் போது, தொடை எனப்படுகிறது.  தொடை என்பது ’தொடுக்கப்படுவது.’ அதாவது தடுக்கப்படுவது தடை; மடுக்கப்படுவது மடை;  நிறுக்கப்படுவது நிறை; எடுக்கப்படுவது எடை என்பதுபோலத் தொடுக்கப்படுவதைத் தொடை என்கிறோம்.

குமரகுருபரரும், “தொடையின் பயனே நறைபழுத்த தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே,” என்று உரைப்பதால், தொடை என்பது பாடலுக்கு அழகு சேர்த்து,  நற்சுவையைக் கூட்டுவதான விஷயம் என்று அறிந்து கொள்ளுங்கள்.  என்னடா இப்படி மொக்கை போடுகிறானே என்று எண்ணுகிறீர்களா?  வேற ஒண்ணுமில்லைங்க எதுகை மோனை இதெல்லாம் இந்த தொடையிலக்கணத்தின் பகுதிதாங்க.  இப்ப தெரியுதா, எதுகை மோனை இல்லாம எந்த பாட்டு இனிக்கும்?
இப்போது தொடைகளைப் பற்றியும் அவற்றின் விகற்பங்களைப் (அமைப்புகளை/பிரிவுகளை) பற்றியும் நானறிந்த வரையில் விளக்குகிறேன்.  ஏதேனும் தவறிருந்தால், தமிழன்பர்கள் அறியத் தாருங்கள்.

தொடை என்பது

1)எதுகை,

2)மோனை,

3)இயைபு,

4)முரண்,

5)அளபெடை

என்று ஐந்தாக வகைப்படுத்தப்பட்டு, அந்த ஐந்துடன் கூடவே ஒவ்வொன்றும் கீழுள்ளபடி ஏழு விகற்பங்களை(அமைப்பு/பிரிவு) சீர்களுக்கு இடையில் ஏற்கும்.

(1)இணை (1,2 சீர்களில் வருதல்),
(2)பொழிப்பு (1,3 சீர்களில் வருதல்),
(3)ஒருஉ (1,4 சீர்களில் வருதல்),
(4)கூழை (1,2,3 சீர்களில் வருதல்),
(5)மேற்கதுவாய் (1,3,4 சீர்களில் வருதல்),
(6)கீழ்கதுவாய் (1,2,4 சீர்களில் வருதல்),
(7)முற்று (1,2,3,4 சீர்களில் வருதல்)

இதற்கு மேலும் விகற்பங்கள் இல்லாத 3 தொடைகள் உண்டு. அவை:

(1) அந்தாதித் தொடை,
(2) செந்தொடை
(3) இரட்டைத் தொடை.

இனி ஒரு கணக்கு பார்க்கலாமா?

5 தொடைகள் + (5 X 7 = 35 தொடை விகற்பங்கள்) + விகற்பமில்லாத் தொடைகள் 3.  ஆக மொத்தம் = 43.

தொடை என்பதற்கும் தொடை விகற்பத்திற்கும் உள்ள வேறுபாடு கேட்பவர்களுக்கு:-

1) தொடை பாடலில் அடிதோறும் பார்க்கிறோம்.
2) தொடை விகற்பங்கள் அடிகளுக்கிடையில் சீர்கள் தோறும் பார்க்கிறோம்.
3) தொடை செய்யுளின் மேலிருந்து கீழாகப் பார்க்கிறோம்.
4) தொடை விகற்பங்கள் இடமிருந்து வலமாகப் பார்க்கிறோம். குறிப்பு: இதற்கு விதிவிலக்கு இயைபுத் தொடை விகற்பம்; வலமிருந்து இடமாகப் பார்க்கப்படுவது.  கீழ்வரும் எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால் இது நன்கு விளங்கும்.
(தொடரும்)

எதுகை என்றால் என்ன?

05/05/2011

தமிழன்பர்களே மரபியற் பாட்டியற்றுதற்கு அடிப்படையான, அசை, சீர், தளை, தொடை இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டோம்.  இனி தொடையோத்தின் முக்கியமான  எதுகைத் தொடையினைப் பற்றி பாவலர் பேரா. பசுபதியவர்கள் சொல்லும் விளக்கங்களைப் பார்ப்போமா?  இந்த தமிழ்நெஞ்சம் கனடாவில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.  எம்போன்றவர்க்கு மரபின்பத்தை அள்ளித் தந்தப் பெருந்தகை.  யாப்பிலக்கணம் என்ற தனிப் பகுதியே கூகுள் குழுமத்தில் வைத்திருக்கிறார்.  இந்த எதுகை என்னும் சிறுபகுதி மிகவும் எளிமையாக, தமிழறிந்தவர்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளும்படி அமைந்திருப்பதாலேயே இங்கு இடுகிறேன்.  இவர்தம் “கவிதை இயற்றிக் கலக்கு” என்ற நூல் மரபியற் பாடல்களை எழுத முனையும் தமிழன்பர்க்கு மிகவும் இன்றியமையாத வழிகாட்டி நூல். நூல் வேண்டும் அன்பர்கள்: pas.pasupathy@gmail.com என்ற மின்மடல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

எதுகை – பேரா. பசுபதி.

எதுகை என்பது இருசீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றுவது எனச் சொல்லலாம்.  காட்டுகள்: கற்று-பெற்று, பாடம்-மாடம், கண்ணன்-வண்ணன்.

ஆனால் எதுகைக்கு இரண்டாம் எழுத்து ஒன்றினால் மட்டும் போதாது.  முதல் எழுத்துகளும் அளவில் ஒத்துப் போக வேண்டும். அதாவது முதல் எழுத்து குறிலானால், எதுகைச் சீரிலும் முதல் எழுத்துக் குறிலாக வேண்டும்.  நெடிலாக இருப்பின், எதுகைச் சீரிலும் நெடிலாக வேண்டு. (இது பலரும் செய்யும் தவறு).  (எ-கா)  தட்டு-பட்டு… எதுகை;  ஆனால் தட்டு-பாட்டு எதுகையல்ல.

சிலசமயம், மூன்றாம் எழுத்து ஒன்றினால்தான் ஒத்த ஓசை கிடைக்கும் (எ-கா) பண்டு- உண்ண ஓசையினிமை இல்லை. பண்டு, கண்டு, உண்டு இவை மிகச்சரியான எதுகைகள்.  அதனால் முதல் எழுத்து அளவில் ஒன்றி, முடிந்தவரை மற்ற எழுத்துகள் ஒன்றுவது சிறப்பு; குறைந்தபட்சம் இரண்டாவது எழுத்தாவது ஒன்ற வேண்டும்.

சில சிறப்பில்லா எதுகைகளும் உண்டு.   இவற்றில் முக்கியமானவை வருக்க எதுகை, இன எதுகை, ஆசிடை இட்ட எதுகை.

வருக்க எதுகை

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே!

மேலே ல-விற்கு லை-எதுகையாக வந்திருக்கிறது.  இப்படியே ல,லி,லு,லெ, லோ இவையும் வரலாம்.  ல-குறிலாதலால் குறிலாகவே வருதல் சிறப்பு. லை-நெடிலானாலும், லய் என்பது போலவே குறிலாக ஒலிக்கிறதல்லவா? ல-விற்கு அதன் வருக்க எழுத்துகளில் ஒன்று எதுகையாக வருவது வருக்க எதுகை.

இன எதுகை

இரண்டாம் எழுத்துகள் ஒரே இனமாக இருப்பது.

(எ-கா) வல்லின எதுகை
தக்கார் தகவிலார் என்ப தவரவர்
எச்சதாற் காணப் படும் (திருக்குறள்)

அதே போல அன்பு, நண்பு மெல்லின எதுகை
வரவு,செலவு இடையின எதுகை

ஆசிடை இட்ட எதுகை

ஆசு என்றால் பற்றுக் கோடு.  எதுகையாக வரும் எழுத்துக்கு முன் ய், ர், ல், ழ் என்ற எழுத்துகள் நான்கில் ஒன்று வந்தால் ஆசிடை இட்ட எதுகை எனப்படும்.  இந்த விதியினால், வாய்மை-தீமை, மாக்கொடி-கார்க்கொடி, ஆவேறு-பால்வேறு, வாழ்கின்ற-போகின்ற என்ற சொற்கள் ஆசிடை எதுகை பெற்று விளங்குகின்றன.  இந்த எழுத்துகள் நடுவில் வந்தாலும் ஓசை கெடுவதில்லை என்பது இந்த விதியின் உட்பொருள்.  (வாய்மை-தூய்மை, மாக்கொடி-பூக்கொடி, வாழ்கின்ற-தாழ்கின்ற… இவை முதல்தரமான எதுகைகள்.  ஆனால் கருத்தைச் சொல்ல, முதல்தர எதுகைகளைப் பயன்படுத்த முடியாவிட்டால்,  ஆசிடை இட்ட எதுகை போன்ற சிறப்பில்லா எதுகைகளைப் பயன்படுத்தலாம் என்பதே இந்த விதிகளின் பொருள்.

சொற்புணர்ச்சி செய்தபின் தான் எதுகை சரியாவென்று பார்க்க வேண்டும்.  மின்னியல் பொன்தகடு எதுகை அல்ல.  ஏனென்றால் பொன்+தகடு = பொற்றகடு.

ஒரு எடுத்துக் காட்டு.
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
…..வீசும் தென்றல் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
…..கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
…..தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வளமின்றி
…..வாழும் சொர்க்கம் வேறுண்டா? (கவிமணி தே.வி. பிள்ளை)

இது அறுசீர் விருத்தம்; நாலு அடிகள் எட்டு வரிகள்.  முதல் நான்கடிகளின் முதற்சீர்களில் ஒரே எதுகை (வெய்யி, கையி, தெய்வ, வையம்)
வரிகளுக்குள்ளே மோனை (வே-வீ, கை-க, தெ-தெ, வை-வா) – இங்கு ஐ-சீரின் முதலிலும் அய் என்று குறிலாக ஒலித்து எதுகைக்குப் பயன்படுவதைப் பாருங்கள்.  பொதுவாக எதுகை மரபுக் கவிதையில் அடிகளைப் பிரிக்க உதவும்.  அடிகளுக்குள் பொதுவாக மோனை நயம் இருக்கும்.  ஓசை அழகிற்காக, படிக்காதவர்களும் எதுகையை ஆள்வதைப் பார்க்கலாம்.  எதுகை-மோனை= எகனை-மொகனை என்றாகும்.  ஆட்டம்-பாட்டு=ஆட்டம்-பாட்டம் ஆகும்.  விதையொன்று போட்டால் சுரையொன்று காய்க்குமா என்பது  வெரை ஒண்ணு போட்டா சொரை ஓண்ணு காய்க்குமா என்றாகும்.

இயைபு

அடித்தொடக்கத்தில் வருவது எதுகை.   அடியிறுதியில் ஓரெழுத்தோ, பல எழுத்துகளோ ஒன்றிவருவது இயைபு.

(எ-கா)
நந்தவ னத்திலோ ராண்டி –  அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!

இதில் ”ண்டி” என்ற எழுத்துகள் ஒன்றி வருகின்றன.  (நந்த-கொண்டு – மெல்லின எதுகை)
———————
இனி அடுத்த பகுதியில் பாவலர் பெருந்தகை பேரா. பசுபதியின் மோனை பற்றிய விளக்கத்தைத் தருகிறேன்.

பாவினங்களின் அடிக்கணக்கு.

05/05/2011

தமிழன்பர்களே!  தொல்காப்பியர் தம் நூலில் உரைக்கும் ஆறுவகையாக பாவினங்களாவன, 1) அகவற்பா எனப்படும் ஆசிரியப்பா, 2) வெண்பா, 3) கலிப்பா, 4) வஞ்சிப்பா, 5)பரிபாடல், 6) மருட்பா.  இவற்றுள் பரிபாடல் என்னும் இசைப்பாட்டைப் பாடும் பாணர்கள் அருகியதால், அவ்வகையான பாடல்கள் மறைந்துவிட்டன.  மருட்பா என்னும் பாவினமோ வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்த கலவை என்பதால், இன்று நிலைத்திருக்கும் வகையின முதல் நான்கே!  பாவினங்களைப் பற்றி அறியு முன்பு, இந்த இந்த பாடல்களை இப்படி இப்படி அடிகள் கொண்டு பாடும் ஒரு வரையறை இலக்கணத்தை முதலில் காண்போம்.  ஓரடியாய்ப் பாக்கள் அமைவதில்லை; அப்படி அமைந்துவரும் அமைப்பு நூற்பா என்று வழங்கப்படுகிறது (எ-கா – ஆத்திசூடி பாவடிகள்)

பாவினங்களில் சிற்றெல்லை:

1)அகவற்பாவின் சிற்றெல்லை: மூன்றடிகள். அதாவது மூன்றுக்கு குறைந்து, இயற்சீர் அமைந்து ஆசிரியத்தளையுடன் வரும்  பாடலை அகவற்பா என்று இனம் காணவியலாது.  அகவற்பாவின் பாவினங்கள்: இணைகுறள் அகவற்பா, நேரிசை அகவற்பா, நிலைமண்டில அகவற்பா, அடிமறிமண்டில அகவற்பா…. என விரியும்.

2)வெண்பாவின் சிற்றெல்லை:  இரண்டிகள்.  அதாவது இரண்டுக்குக் குறைந்து, வெண்டளை பொருந்த வரும் பாடலை நூற்பா என்றுதான் சொல்ல முடியும். இரண்டடி வெண்பாக்களை குறள் வெண்பா என்று அழைக்கிறோம். குறள்வெண்பாவின் இனங்களாவன; குறாட்டாழிசை, குறள்வெண்செந்துறை.. எனவிரியும். மற்றபடி நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, வெண்கலிப்பா, கலிவெண்பா…. என விரியும்.

3)கலிப்பாவின் சிற்றெல்லை: நான்கடிகளுக்குக் குறையாமல் வரும். கலிப்பாவின் பாவினங்கள்: ஒத்தாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசை, இயல்தரவிணை, வண்ணக ஒத்தாழிசை, கொச்சகம்… என்று விரியும்.

4)வஞ்சிப்பாவின் சிற்றெல்லை: வஞ்சிப்பாவின் தனிச்சொல், சுரிதகம் இவை நீக்கிக் காணில் இரண்டடியே சிற்றெல்லை. வஞ்சிப்பாவினங்கள்; குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா…. என விரியும்.  இந்த தனிச்சொல் சுரிதகம் போன்ற புரியாத சொல்லாட்சிகளை அந்தந்த பாவினத்தைப் பற்றி அறியும் போது அறியலாம்.

பாவினங்களில் பேரெல்லை:

இவ்வளவுக்குக் குறையாது என்று வரையறுக்கும் போது, எவ்வளவுக்கு மிகாது என்ற வரையறையும் இருக்க வேண்டும் அல்லவா?  ஆனால் அவ்விதமாக அறுதியிட்டு சொல்ல இயலவில்லை என்றுதான் ஒப்புக் கொள்ள முடிகிறது. பாவலனின் மனமே எல்லை என்போம்.   ஆனால் சில சில வரைமுறைகளும் இருக்கின்றன.  (எ-கா) மூன்றடி வெண்பாவைச் சிந்தியல் வெண்பா எனவும்,  நான்கடி வெண்பாக்கள் இன்னிசை/நேரிசை வெண்பாக்கள் எனவும், ஏழடி வெண்பாக்களை பஃறொடை எனவும் அதற்கு மேல் கலிவெண்பா எனவும் கூறுகின்றனர்.  இந்த பேரெல்லையை விளக்கி, “உரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமை” என்றுரைக்கும் காரிகை கீழே:-

வெள்ளைக்கு இரண்டடி; வஞ்சிக்கு மூன்றடி; மூன்றுஅகவற்கு
எள்ளப் படாக்கலிக்கு ஈரிரண் டாகும், இழிபு; உரைப்போர்
உள்ளக் கருத்தின் அளவே பெருமை;ஒண் போதுஅலைத்த
கள்ளக் கரும்நெடும் கண்சுரி மென்குழல் காரிகையே’

இனி அடியிலக்கணம் பற்றி:

செய்யுள்/ பாக்கள் யாவும் அடிகளைக் கொண்டு விளங்குபவையே.  பாடலைச் சொல்லும் போது வரிகள் / சொற்கள் என்று கூறாமல், அடிகள், சீர்கள் என்றே விளிக்க வேண்டும்.  பொதுவாக பாவினங்களில் அடிகள் ஐந்து வகைப்படும்:

1) குறளடி:  இரண்டு சீர்கள் அமைந்த ஓரடியைக் குறளடி என்கிறோம்.

(எ-கா)  கண்ணதாசனின் திரைப்படப் பாடல்:
பார்த்தேன் சிரித்தேன்;
பக்கம்வரத் துடித்தேன்!
இங்கே ஓரடியில் இரண்டே சீர்கள்; எனவே குறளடியாகும்.

2) சிந்தடி :  மூன்று சீர்கள் அமைந்த ஓரடியைச் சிந்தடி என்கிறோம்.

(எ-கா) கண்ணதாசனின் திரைப்படப் பாடல்:
பார்த்த ஞாபகம் இல்லையோ;
பருவ நாடகம் தொல்லையோ;
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ;
மறந்ததே உன்றன் நெஞ்சமோ?
இங்கே ஓரடியில் மூன்று சீர்கள்: எனவே சிந்தடியாகும்.

3) அளவடி:  நான்கு சீர்கள் அமைந்த ஓரடியை அளவடி என்கிறோம்.

(எ-கா)  பாரதியின் பாடல்:
வீணையடி நீயெனக்கு மேவுவிரல் நானுனக்கு
பூணுவடம் நீயெனக்கு புதுவயிரம் நானுனக்கு
இங்கே ஓரடியில் நான்கு சீர்கள்: எனவே அளவடி என்கிறோம்.

4) நெடிலடி:  ஐந்து சீர்கள் அமைந்த ஓரடியை நெடிலடி என்கிறோம்.

(எ-கா)  என்னுடைய கட்டளைக் கலித்துறை பாடல்:
கன்னற் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கற்பகமாய்
அன்னை யுருவினில் அன்பைப் பொழிந்திடும் அற்புதமாய்
பின்னல் சுழற்றியே கண்கள் சிலிர்த்திடும் பெண்ணழகாய்
என்னில் உறைந்தெனை என்றும் உயர்த்திடும் என்தமிழே!

இங்கே ஒரடியில் ஐந்து சீர்கள்; எனவே இது நெடிலடி என்கிறோம்.

5) கழிநெடிலடி:  ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களை கொண்ட ஓரடியை கழிநெடிலடி என்கிறோம்.

(எ-கா)  ஒரு அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாடல்:
திருமண மக்கள் நல்ல திருவேந்திப் புகழும் ஏந்திப்
பருதியும் நிலவும் போலப் பல்லாண்டு வாழ்நாள் ஏந்திக்
கருவிலே தமிழ்ப்பண் பாடு கமழ்மக்கள் பேரர் ஏந்திப்
பெருவாழ்வு வாழ்க உற்றார் பெற்றோரும் தமிழும் வாழ்க
இங்கே ஓரடியில் ஆறு சீர்கள்; எனவே இது கழிநெடிலடி என்கிறோம்.

இனி தொடர்ந்து பாவினங்கள்:

தமிழன்பர்களே, சென்ற யாப்பிலக்கண குறிப்புகளில் அசை, சீர், தளை, தொடை, முதலியவற்றைப் பற்றி, ஆரம்ப இலக்கணம் அறிய விரும்புவோர்க்காக, நானறிந்தவரை மேம்போக்காக எடுத்துரைத்தேன். இனி பாக்களைப் பற்றியும் அவற்றின் இனங்களைப் பற்றி ஓரளவுக்குப் பார்ப்போம்.

பாக்கள் என்று வருகையில் பொதுவான வகைகளாவன: (அ) நூற்பா,  (ஆ) ஆசிரியப்பா என்ற அகவல்பா, (இ) வெண்பா, (ஈ) கலிப்பா, (உ) வஞ்சிப்பா, (ஊ) மருட்பா. செய்யுள் சூத்திரங்களை நூற்பா என்கிறோம். எந்த பாடலும் ஓரடியில் வருவதில்லை. நூற்பா மட்டுமே சிற்றெல்லையாக (குறைந்த அளவு) ஓரடி பெற்று வரும்.  அதுபோலவெ மருட்பா என்பது வெள்ளையில் தொடங்கி அகவலில் முடியும் ஒருவகைக் கலவைப் பாடல், ஆக பொதுவாக பயன்படும் வகைகள்: அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்றறிக. இவற்றைப் பற்றி அடுத்த குறிப்புகளில் தனித்தனியாகக் காண்போம். அதற்கு முன் பாவின்ங்கள் என்றால் என்னவென்று பார்க்கலாம்.

அந்தந்தப் பாவின் பொதுவிலக்கணங்களைத் தவறாமல் பெற்று வருபவை அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று அறிந்தோம். ஆனால் இவற்றுடன் அந்தந்த பாவின் இலக்கணங்களுடன், கூடவே பல மாறுதல்களும் பெற்று வரும் பாடல்களும் உண்டு.  ஆதலால் அவற்றை வகைப்படுத்துவதற்காக நம்முடைய பேரறிவு கொண்ட இலக்கண ஆசிரியர்கள் அந்தந்த பாவின் இனங்கள் என்று பொருள்படும்படி பாவினங்கள் என்று வகைப் படுத்தினர். ஒவ்வொரு பாவின் பாவினங்களும் (அ) தாழிசை, (ஆ) துறை (இ) விருத்தம் என்று மூன்று வகைப்படும். அதாவது:-

1)   அகவலின் இனம்: ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம்.

2)   வெண்பாவின் இனம்: வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம்.

3)   கலிப்பாவின் இனம்: கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம்.

4)   வஞ்சிப்பாவின் இனம்: வஞ்சித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம்.

அகவற்பாவும் வகைகளும்-2

05/05/2011

இனி அகற்பாவின் வகைகளும், இனங்களும்:

(அ) நேரிசை ஆசிரியப்பா:
ஆசிரியத்தின் அனைத்துப் பொதுவிலக்கணங்களும் பெற்று ஈற்றயலடி மட்டும் (கடைசி அடியின் முந்திய அடி) முச்சீரடியான சிந்தடியாக வரும். ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும்.

(எ-கா)
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோல் குறிச்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே (குறுந்தொகை-3)

(ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா:
ஆசிரியத்தின் அனைத்து பொது இலக்கணங்களும் அமைய முதலடியும் கடைசியடியும் அளவடிகளாகவும், இடையே அளவடிகளுடன் குறளடிகளும், சிந்தடிகளும் கலந்து வருவது இணைகுறள் ஆசிரியப்பா.

(எ-கா)
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே

(இ) நிலை மண்டில ஆசிரியப்பா:
இவ்வகை அகவற்பா, அகவலின் பொதுவிலக்கணங்களை பெற்று பாடலின் எல்லா அடிகளும் நாற்சீரடியான அளவடிகளால் வருவது.  மேலும் பாடலின் ஈற்றுச்சீர் ‘என்’ என்று முடிந்துவரும் சிறப்பும் பெறும்.

(எ-கா)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காம்மோ பெரிதே  (குறுந்-18)

(ஈ) அடிமறி மண்டில ஆசிரியப்பா:
அகவலின் பொதுவிலக்கணங்களொடு எல்லா அடிகளும் நாற்சீரடியான அளவடிகளாக வரும்.  இதன் சிறப்பென்னவென்றால், இருக்கும் எந்த அடியையும் முதல், இடை, கடையாக வைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாமல் விளங்கும் தன்மை யுடையது. கீழ்வரும் பாடலில் ஒவ்வோரடியும் தனித்தனியே பொருள் தருபவை ஆதலால், எந்த அடியையும் முன்பின்னாக மாற்றிப் போட்டாலும் பொருள் மாறுவதில்லை. அத்தனையும் அளவடிகள் என்பதால் ஓசைநயமும் பொலிகிறது.

(எ-கா)
சூரல் பம்பிய சிறுகான் யாறே;
சூரர மகளிர் ஆரணங் கினரே;
வாரலை யெனினே யானஞ் சுவலே;
சார னாட நீவர லாறே.

இனி அகவலின் இனங்களைக் பற்றிப் பார்ப்போம். அகவலின் இனங்களாவன அ) ஆசிரியத் தாழிசை ஆ) ஆசிரியத்துறை இ) ஆசிரிய விருத்தம் என மூன்று வகைப்படும்.

அ) ஆசிரியத்தாழிசை:
மூன்று அடியாக வந்து தம்முள் அளவொத்து வரும்.  ஒருபொருள் நுதலி, மும்மூன்றாக அடுக்கி வரும் (அதாவது ஒருபொருளைப் பற்றி முன்று பாடல் வரும்).  வந்த சீர்களே மீண்டும் வந்து பாடலின் அமைப்பு ஒரேபோல் இருக்கும். எனவே மூன்றாக அடுக்கி வரும் தாழிசையை ஒத்தாழிசை என்கிறோம். கீழ்வரும் பாடல் மூன்றடியாய், அடிதோறும் நான்குசீர்களுடன் அளவொத்து வருதலால் ஆசிரியத் தாழிசையாம்.

(எ-கா)
வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை
பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம் (யா.கா. உரைமேற்கோள்)

ஆ) ஆசிரியத்துறை:
நேரிசை அகவல் போல நான்கு அடிகளாய் வந்து, ஈற்றயலடி குறைந்து வரும்.  ஆனால் மாறுதலாக இடையிடை குறைந்த அடிகளும் வரும், சில அடிகள் இடை மடக்காகவும் (சில அடிகள் அடுத்த்தாக திரும்ப வருதல்) வரலாம். இந்தவகைக்கு சீரெல்லை இல்லையென்பதால் எத்தனைச் சீராலும் வரும்.  கீழ்வரும் பாடல் நான்கடியாய் வந்து, ஈற்றயலடி(கடைசி அடிக்கு முந்திய அடி) 5 சீராலும், மற்றேனைய அடிகள் 6 சீராலும் அமைந்துள்ளது.

(எ-கா)
கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதி ராயின்
அரையிருள் யாமத் தடுபுலியே றும்மஞ்சி யகன்று போக
நரையுரு மேறுநுங் கைவே லஞ்சு நும்மை
வரையர மங்கையர் வௌவுத லஞ்சுதும் வார லையே!

இ) ஆசிரிய விருத்தம்:
கழிநெடிலடி எனப்படுவது ஓரடியில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களால் கொண்டதென்ற இலக்கணம் முன்னர் பார்த்தோம்.  அது போன்ற அடிகளால் அமைந்து, நான்கு நான்காய் வருவது ஆசிரிய விருத்தம்.  பலரும் இன்றைக்கு விரும்பி இயற்றும் எண்சீர் ஆசிரிய விருத்தமாக நானியற்றிய பாடலில் ஓரடிக்கு காய்-காய்-மா-தேமா-காய்-காய்-மா.தேமா என்று வரும் நயமான அமைப்பைக் காணுங்கள்::

(எ-கா)
ஆணோடு பெண்ணவளும் வாழ்வைத் தேர்ந்து
ஆனந்த அன்புடனே உறவாய்ச் சேர்ந்து
வானோடு வாழ்ந்திருக்கும் நிலவைப் போல
வன்சுடராய் வீசுஞ்செங் கதிரைப் போல
தேனோடு கலந்ததெள் ளமுதைப் போல
தேர்ந்தொருவ ரொருத்தியென வாழும் வாழ்வில்
ஊனோடு கலந்திருக்கும் உயிரைக் கெல்லி
உறவறுக்கு முயிர்கொல்லிக் கிடமு மேது?

அகவற்பாவும் வகைகளும்-1

05/05/2011

நண்பர்களே!  பாக்களைப் பற்றியும், பாவினங்களைப் பற்றியும் நான் சொன்னவை, சொல்பவை, சொல்லப் போகின்றவை யாவுமே, நம் இலக்கண நூலாசிரியர்களும், என்னுடைய ஆசிரியர்களான, புலவர் இராமலிங்கனார், நூற்கடல் தி.வே.கோபாலய்யர், இலக்கணச்சுடர் இரா.திருமுருகனார், கலைமாமணி அரங்க. நடராசனார்,  கவிமாமணி இலந்தை சு.இராமசாமி, இலக்கிய வித்தகர் ஹரிகிருஷ்ணன், செந்தமிழ் அறிஞர் பேரா. பசுபதி, நற்றமிழ் நாவலர் பேரா. அனந்தநாராயணன் போன்ற ஆன்ற தமிழ்மக்கள் எனக்களித்த யாப்பிலணத்தின் சாரமே. சொல்லும் விதமும், பயனாகும் சொற்களும் மட்டுமே என் முயற்சி. சொன்னவற்றில் இருக்கும் தவறத்தனைக்கும் பொறுப்பு என் அறியாமையே!

அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு வகையான பாக்களில் முதலில் அகவலைப் பற்றி முதலில் காண்போம்.  நான்கு வகைகளிலும் இலக்கணக் கட்டுகள் குறைவாக அமைந்து பாவலனின் உளப்பாங்கிற்கும், வெளிபாட்டிற்கும் இடையூறு அதிகமின்றி,, நிறைய உரிமைகள் தருவது அகவற்பாவே. அகவற்பா ஆசிரியப்பா என்றும் வழங்கப்படும். அகவற்பாவின் வகைகளைப் பற்றி தெள்ளத் தெளிவாக உரைக்கிறது யாப்பருங்கலம்:

கடைஅயர் பாதம்முச் சீர்வரின் நேரிசை; காமருசீர்
இடைபல குன்றின் இணைகுறள்; எல்லா அடியுமொத்து
நடைபெறு மாயின் நிலைமண் டிலம்;நடு வாதிஅந்தத்
தடைதரு பாதத் தகவல் அடிமறி மண்டிலமே

அகவற்பாவின் பொதுவிலக்கணம்:

1)   தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்ற இயற்சீர்கள் பொதுவில் மிகுத்து வரும். கூடவே மிக அருகி பிறசீர்களும் வருதல் உண்டு.
2)   நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர்களான கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகிய சீர்கள் வரவே வராது.
3)   தளையென்று வருகையில் நேரொன்றிய ஆசிரியத் தளையும் நிரையொன்றிய ஆசிரியத் தளையும் அதிகம் வரும். அருகி பிறதளைகள் கலக்கும். ஓசை என்று வரும்போது அகவற்பாவின் ஓசை அகவலோசை.  அதுவே மூன்று வகையாகப் பிரிந்து (அ) ஏந்திசை அகவலோசை, (ஆ) தூங்கிசை அகவலோசை, (இ) ஒழுகிசை அகவலோசை எனவும் வழங்கப்படும்.

அ) ஏந்திசை அகவல் :
மாமுன்நிரை என்றமைந்த நேரொன்றிய ஆசிரியத்தளை மட்டுமே அமைந்த ஆசிரியப்பாவின் ஓசைநயம் ஏந்திசை  அகவலாகும்.

(எ-கா)
போது சாந்தம் பொற்ப ஏந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானம் துன்னு வாரே.  (யா.கா. உரைமேற்கோள்)

ஆ)தூங்கிசை அகவல்:
விளமுன்நிரை என்றமைந்த நிரையொன்றிய ஆசிரியத் தளை மட்டுமே அமைந்த ஆசிரியப்பாவின் ஓசைநயம் தூங்கிசை அகவலாகும்

(எ-கா)
அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவம்நனி பரிசறுப் பரே (யா.கா. உரைமேற்கோள்)

இ)ஒழுகிசை அகவல் :
நேரொன்றிய ஆசிரியத்தளையும், நிரையொன்றிய ஆசிரியத்தளையும் அமைந்து பிறதளைகளும் கலக்க வருவது ஒழுகிசை அகவல்.

(எ-கா)
குன்றக் குறவன் காதல் மடமகள்
வரையர மகளிர் புரையும் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே. (ஐங்குறுநூறு-255)

அகவற்பாவின் அடியென்று வருகையில் பொதுவில் நாற்சீரடியான அளவடியே. ஆனால் நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்று அயலடி அதாவது கடைசி அடிக்கு முந்திய அடி மூச்சீரடியான சிந்தடியில் வரும். இணைகுறள் ஆசிரியப்பாவின் இடையில் குறளடிகளும் சிந்தடியும் வருவது சரியே. சிற்றெல்லை (குறைந்த அளவு) மூன்றடிகள்.  பேரில்லை (உயர் வரம்பு) புலவனின் உள்ளக் கருத்து. பொதுவாக நிலைமண்டிலம் தவிர்த்து அகவலின் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் அமைவதும், நிலைமண்டிலத்தின் ஈற்றுசீர் ‘என்’ என்று முடிவதும் சிறப்பு.  அகவற்பா நான்கு வகைப்படும்.  அவையாவன. (அ) நேரிசை ஆசிரியப்பா, (ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா, (இ) நிலைமண்டில ஆசிரியப்பா, (ஈ)  அடிமறி மண்டில ஆசிரியப்பா.

மெய்யான அன்பெனும் வெண்மை!

05/05/2011

இணையத்தில் அன்புடன் குழுவில் நடந்த முதல் கவியரங்கில் நான் பாடிய பாடல்.

எண்சீர் ஆசிரிய விருத்தம் (கட்டமைப்பு காய்+காய்+மா + தேமா)

வாழ்ந்துவரும் வாழ்க்கையிலே மூன்றாம் மேன்மை
…..வையகத்திற் காணுகின்ற வெண்மை வண்ணம்
தாழ்வெதுவு மில்லாத வாழ்க்கை யன்பு;
…..தனக்குவமை ஏதுமில்லாத் தூய  உண்மை;
ஊழ்த்துவரும் வெண்மையிலே வண்ண மெல்லாம்
…..ஊடுறுவி யிருக்கின்ற  தன்மை போல
ஆழ்ந்துமனஞ் செலுத்திவிடு மன்பின் வண்ணம்
…..அகண்டவெளித் தத்துவமாம் வெண்மை யன்றோ?

அறமின்றித் தன்னலமாய்ப் பிழைக ளையே
…..அடுக்கடுக்காய் அனுதினமும் செய்வோர் கூட;
செறிவுள்ளத் தூயவன்நான் என்றே சொல்ல
…..சீரொளிக்கும் வெள்ளுடையைக் ஏற்கும் போதில்,
குறையதறு நேர்வழியில்  நாளும் நடக்கும்
…..குவலயத்தின்  நல்லவர்கள் உள்ளம் என்றும்
சிறந்ததொரு வெண்மையெனும் உண்மை தன்னை
…..செழுமையறு வண்ணமென விலக்கு வாரோ?

உள்ளத்தே யுந்துதலால் உதித்து விட்ட
…..உணர்வுகளை வளப்பமிகு சொற்கள் கொண்டுத்
துள்ளிவருந் தேனருவி போல விங்குச்
…..செந்தமிழிற் கவிதைகளைப் படைக்கும் பேர்கள்
அள்ளிநெஞ்சைக் கொள்ளையிடும் வெள்ளு வாவை
…..அழகாக அருந்தமிழில் விளிக்கும் போதில்
வெள்ளையெனும் நிலவெழிலை இயம்பும் பாடல்
…..உரைக்கின்ற உண்மையதன் மேன்மை காண்மின்!

அரும்பிவிட்ட நம்மருமை மழலை செல்வம்
…..அடுகிநிதம் வாழ்வியலை அறியச் செல்லும்
பெரும்பான்மைப் பள்ளிகளில் திட்ட மென்றே
…..பதித்துவிட்ட சீருடையின் சட்டங் கூட
விரிந்தொளியே வீசுகின்ற மேலின் சட்டை
…..வெள்ளையெனும் தூயநிறம் கொள்ள வேண்டி
வரையறை செய்திருக்கும் முறைமை தன்னை
…..வையகத்தில் நித்தமுமே காணு கின்றோம்.

உலகிலுறை இயற்கையன்னைத் தானுங் கூட
…..உண்மைநலம் பயின்றுவரும் வெண்மை யென்னும்
உளம்வெளுக்கும் வண்ணமதை விலக்கி விட்டால்
…..ஒங்கிநிற்குங் காட்சியெல்லாம் இருட்டைக் கூட்டும்;
நிலமீதிற் றவழ்ந்துவருந் தென்றல்  காற்றின்
…..நெருடலிலே நெகிழ்ந்தாடும் மரங்கள் கூடக்
களையிழந்து போர்த்திருக்கும் பசுமை விட்டுக்
…..கண்களுக்குத் தெரியாத உருவைக் காட்டும்.

வானவரு மவுணருமே பழுதாய்ப் பாம்பை
…..மலையென்னும் பெருமத்தில் புரியாய்ச் சுற்றி
ஊன்வருந்திப் பெரும்பாடாய்க் கடைந்த போதில்
…..ஊழ்த்திட்டத் தீநஞ்சைக் கையி லேந்தித்
தேனெனவே அருந்தியதாற் சிவனின் கண்டம்
…..தெளிவான நீலவெழில் கொண்ட தைப்போல்
ஆண்மைமிகு வெண்மைநிறம்  தன்னில் சேரும்
…..அத்துணைநி  றங்களைத்தா னேற்றல் காணீர்!

நற்றமிழின் நலம்விளங்கும் நீணில மீதில்
…..நிலைத்திருக்கு மென்றேநாம் நினைக்கு மிந்த
குற்றமிலாக் குவலயத்தின் கனவும் போகும்;
…..குணங்கடந்த கயவர்தம் வாழ்வும் போகும்;
தற்பெருமைத் தேடுகின்ற நிலையும் போகும்;
…..தானென்ற அகம்பாவம்,  அழிவும் போகும்;
அற்புதமாம் மெய்யென்னும் வெண்மை ஒன்றே
…..அவனியிலே நிலைமாறா திருக்கு மிங்கே!

வெண்பாட்டும் வகைகளும்-3

03/05/2011

வெண்பாவின் இனங்கள்:

பொதுவாக பாவினம் என்கையில் அ) தாழிசை, ஆ) துறை, இ) விருத்தம் என முன்னர் பார்த்தோம்.  ஆனால் இந்த வகையில்லலாது வெண்பாவின் இனமாகக் கருதப்படுபவை 1) குறள் வெண்பாவின் இனம், 2) பிற வெண்பாக்களின் இனம் என்ற இரண்டே. என்கின்றனர் இலக்கண ஆசிரியர்கள். பிறவெண்பாவின் இனமென்னும் போதில்தான் அவை தாழிசை, துறை, விருத்தமாக விரிகின்றன.

1) குறள் வெண்பாவின் இனம்:

குறள் வெண்பாவின் இனமென்று சொல்லப்படுபவை அ) குறள் வெண் செந்துறை, ஆ) குறட்டாழிசை.

அ) குறள் வெண் செந்துறை:
இவ்வகையாக பாடல் இரண்டிரண்டு அடியாக அளவொத்து வரும். அதாவது அடிதோறும் சீரெண்ணிக்கை சமமாக அமையும். விழுமிய (சிறந்த) பொருளும் ஒழுகிய (தடையைல்லாத) ஓசையும் கொண்டது என்று யாப்பிலக்கணம் உரைக்கிறது. அதற்கு மேல் வேறு இலக்கண விளக்கங்கள் இல்லை. இது அளவொத்து தடையில்லாது செல்கின்ற அகவல் போலவும் தோன்றுகிறது. அகவலில் காய்ச்சீர் அருகி வருகிறது. அத்தகைய கட்டும் இவ்வகைப் பாட்டிற்கில்லை என்றே தோன்றுகிறது. மேலும் கீழ்வரும் பாடலைக் காண்கையில் இதில் வெண்மை என்ற பெயர் இருப்பினும் தளைகளை பார்த்தலும் இல்லை என்றாகிறது.

(எ-கா)
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை  (முதுமொழிக் காஞ்சி-1)

ஆ) குறட்டாழிசை:

இந்த வகைப் பாடல் இரண்டிரண்டு அடியாய் வரும்; ஓரடியில் நான்கிற்கும் மேற்பட்ட நெடிலடியாகவும் வரும்.  ஈற்றடி குறைந்து வரும்.  கீழ்வரும் பாடலைப் பாருங்கள்: முதலடியில் எட்டு சீர்கள்; இரண்டாமடியில் குறைத்து ஐந்து சீர்கள். இதில் வெண்பாவின் தளைகளும் பார்க்கவில்லை. என்ன எதுகை/ மோனைகள் இருக்கின்றன.

(எ-கா)
நண்ணு வார்வினை நைய நாடொறு நற்ற வர்க்கர சாய ஞானநற்
கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே.

என்ன நண்பர்களே இப்போது மக்கள் எழுதுகின்ற, புதுக்கவிதை, வசனக் கவிதை போல இருக்கின்றதா இந்த குறள்வெண் செந்துறையும், குறட்டாழிசையும்?  வெண்பாவில் முக்கியமான ஒன்றான தளை பார்த்தல் இல்லாத இவ்வகைப் பாக்களை ஏன் குறள்வெண்பாவின் இனமாக்கினார்கள் என்று என்னைக் கேட்காதீர்கள். நானறியேன்.

2) பிற வெண்பாக்களின் இனம்:

குறள் வெண்பா தவிர்த்து, பிற வெண்பாக்களின் இனமான பாடல்கள் அனத்தும் அ) வெண்டுறை, ஆ) வெண்டாழிசை, இ) வெளிவிருத்தம் என்று பெயர்பெருகின்றன.

அ) வெண்டுறை:
வெண்டுறைப் பாட்டு மூன்றடிக்குக் குறையாமல் வருமென்றும், ஏழடிக்கும் மிகாமல் அமையும் என்றும் சொல்லப்படுகின்றது. நான்கு, ஐந்து, ஆறு அடிகளால் அமையலாம். பின்னால் வரும் அடிகளின் சீர்கள் குறைந்தும் வரும். பின்வரும் பாடல் மூன்றடியால் அமைந்து, முதலடி ஆறு சீர்களுடனும், மற்றேனைய அடிகள் நான்கு நான்கு சீர்களால் அமைந்து வருகின்றன. பெரும்பான்மை காய்ச்சீர்களும் மற்றவை இயற்சீர்களும் வருகின்றன. எனவே இது வெண்டுறையாகக் கருதப்படுகின்றது.

(எ-கா)
தாளாள ரல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம் என்னாம்
ஆளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோல் சாய்த்துவிழும் பிளிற்றி யாங்கே.

ஆ) வெண்டாழிசை:
இவ்வகைப் பாடல்கள் மூன்றடியாக வந்து, கடைசி அடி முச்சீரடியான சிந்தடியாக அமையப்பெறும். முதலிரண்டு அடிகள் நாற்சீரடியான அளவடியான் அமையும்.  கீழ்வரும் பாட்டினைப் பாருங்கள்; பார்ப்பதற்கு சிந்தியல் வெண்பாவைப் போலிருந்தாலும் சீர்களுக்கிடையில் பெரும்பான்மை வெண்டதளை பயின்று வராமை தெளிவாகத் தெரிகிறது. பாருங்கள் நம் மரபுக்கடை எவ்வளவு பெரியதென்று. அதுபோல் இது ஆனால் அதுவல்ல இது என்ற சிறந்த கொள்கை.

(எ-கா)
நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யார்
அன்பு வேண்டு பவர.

இ) வெளி விருத்தம் அல்லது  வெள்ளை விருத்தம்:
இவ்வகைப் பாடல்கள் மூன்று அல்லது நான்கு அளவொத்த அடிகளைக் கொண்டு வரும். ஒவ்வொரு அடியும் நாற்சீரடியான அளவடியாய் வந்து கூடவே அடிகள்தோறும் ஒரே தனிச்சொல் பெற்று வரும். அதாவது தனிச்சொல் ஐந்தாவது சீராய் வரும். கீழ்வரும் பாடலைக் காணுங்கள் அளவொத்த அடிகளாய் (தேமா, தேமா, கூவிளம், தேமா – புளிமாங்காய்) வருதலால், ஆசிரிய விருத்தம் போலத் தோற்றமளிக்கிறது. வெண்பாவின் முக்கிய இலக்கணமான வெண்டளையைப் பாடல் முழுதும் காணவில்லை.

(எ-கா)
ஆவா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் – ஒருசாரார்
கூகூ வென்றே கூவிளி கொண்டார் – ஒருசாரார்
மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தார் – ஒருசாரார்
ஏகீர் நாய்கீர் என்செய்து மென்றார் – ஒருசாரார்

வெண்பாட்டினைப் பற்றி இயன்றவரைச் சொல்லியிருக்கிறேன். இனி இதனை விரித்து, தேனைத் தேடும் தேனீயென தமிழன்பர்கள் தமிழைத் தேடியடைய வேண்டுகிறேன்.  கலிப்பா பற்றி முன்னரே சிறு விளக்கமாக ஒரு குறிப்பினை எழுதியிருக்கிறேன்.  இதனை எழுத பல இலக்கண நூல்களும், தஞ்சை இணைய பல்கலைக் கழகத்தின் தளத்திலிருக்கும் விவரங்களும்  இன்னும் பல தளங்களும் எனக்கு உதவின.  எனினும், பற்பல இலக்கண நூல்களை கூர்ந்தாய்து, ஒத்து நோக்கி இன்னும் பல விவரங்களைக் கண்டதனால், மீண்டும் அடுத்த குறிப்பில் கலிப்பாவினைப் பற்றி சற்று விரித்துரைக்கிறேன்.

வெண்பாட்டும் வகைகளும்-2

03/05/2011

வெண்பாவில் எதுகை விகற்பங்கள்:

நண்பர்களே இந்த எதுகைத் தொடையிலக்கணம் பற்றி முன்னரே பார்த்தோம். இங்கு சுருக்கமாக, அடியெதுகை என்பது ஒரடியின் முதற்சீரும், அடுத்த அடியின் முதற்சீரும் முதல் எழுத்து ஒரினமாக (ஒன்று குறில் அல்லது நெடிலாக) அமைந்து இரண்டாம் எழுத்து ஒன்றி வருதலாகும்.  வெண்பாவில் எதுகை விகற்பமென்பது ஒரு விகற்பமாகவும், இரு விகற்பமாகவும், மூன்று விகற்பமாகவும் வரலாம். இன்னிசை வெண்பா ஒரெதுகை விகற்பம் என பொதுவில் அறிக.  நேரிசை வெண்பா இரு விகற்ப எதுகை கொண்ட வெண்பா என்றும் நினைவிற் கொள்ளுங்கள் நண்பர்களே.  இதனை நன்கறிந்த பின்னர் நீங்களே இதனை விரிவாக தேடி அறிவீர்கள்.  வெண்பாக்களின் வகைகளை அறியும் போதில் அவற்றின் கீழேவரும் எடுத்துக் காட்டுகளில் இந்த விகற்பங்களை கண்டு கொள்ளுங்கள்.

வெண்பாக்களின் வகைகள்:

வெண்பா என்னும் போதில் அவை அ) குறள்வெண்பா, ஆ) சிந்தியல் வெண்பா, இ) நேரிசை வெண்பா, ஈ) இன்னிசை வெண்பா, உ) பஃறொடை வெண்பா அல்லது கலிவெண்பா என்பதாக அமைகின்றன. வெண்பாவிலக்கனம் பொருந்த வரும் நான்கடிக்கும் அதிகமான பாடலை வெண்பாவாக் கருதுகையில் அது பஃறொடை வெண்பா எனவும் கலியின் வகையாகக் கருதுகையில் அது கலிவெண்பா எனவும் அழைக்கப்படுகின்றன. இதனை கலிப்பா விளக்கங்களை அறியும் போதில் அறியலாம். இந்த பஃறொடை வெண்பா/கலிவெண்பா/வெண்கலிப்பா பற்றிய சர்ச்சைகள் இன்றுமுண்டு.

அ) குறள் வெண்பா:

வெண்பாவின் பொதுவிலக்கணம் அனைத்தும் பெற்று இரண்டடியாக எழுதப்பட்டு, முதலடி நாற்சீரடியான அளவடியுடனும், இரண்டாமடி முச்சீரடியான சிந்தடியுடனும் வருவது குறள் வெண்பாவாகும். சிறந்த எடுத்துக்காட்டு உலகப் பொதுமறையாம் நம் திருக்குறளே. ஒரு விகற்பமாகவும், இரு விகற்பமாகவும் வரும்.

(எ-கா)
ஒரு விகற்ப எதுகைக் குறள் (ஈன்ற-சான்று):
ஈன்ற  பொழுதின்  பெரிதுவக்கும்  தன்மகனைச்
சான்றோன்  எனக்கேட்ட  தாய்.  (திருக்குறள் – 69)

(எ-கா)
இரு விகற்ப எதுகைக் குறள் (பிறப்பு – செய்):
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

ஆ) நேரிசை வெண்பா:

வெண்பாவின் பொதுவிலக்கணங்கள் பயின்று, நாற்சீரடியான அளவடிகள் மூன்றும், முச்சீரடியான சிந்தடி ஒன்று ஈற்றடியாக யாக்கப்படுவதுடன், எதுகைத் தொடை ஒருவிகற்பமாக அல்லது இரு விகற்பமாக அமைந்து, இரண்டாமடியின் நான்காம் சீர் தனிசொல்லாக எதுகை பெற்று வருவதே நேரிசை வெண்பா எனப்படுகிறது. கீழ்வரும் எடுத்துக் காட்டை பார்த்தால் நான் சொன்ன ஜிலேபி விளக்கம் சுலபமாக புரிந்துவிடும்.

(எ-கா) இரு விகற்ப நேரிசை வெண்பா:
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்! –  ஆங்கவற்றில்
மின்னேர் தனியாழி வெங்கதிர்ரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.   (தண்டியலங்காரம்)

இங்கே ஓங்க-ஏங்க-ஆங்க ஓரெதுகை விகற்பங்கள்.  ஆங்க என்பது தனிச்சொல். மின் – தன் என்பவை இரண்டாம் எதுகை விகற்பம்.  தமிழ் என்பது மலர் என்ற ஈற்று வாய்பாடுச் சொல்.  மோனை எனும் போது, ஓங்க-உயர், ஏங்கு-இருள், மின் – வெங், தன்னே – தமிழ் இவைகளில் பொழிப்பு மோனைத் தொடை பயில்வதைக் காணுங்கள்.

இ) இன்னிசை வெண்பா:

வெண்பாவின் பொதுவிலக்கணங்கள் யாவும் பெற்று நாற்சீரடியான அடிவடிகள் நான்கினைப் பெற்று, பெரும்பாலும் ஒரெதுகை விகற்பங்களால் அமைந்து தடையின்றி ஓசைநயத்துடன் தொடர்ந்து வரும் வெண்பாவாதலால், இன்னிசை வெண்பா எனப்பட்டது.  இதில் ஈரெதுகை விகற்பமும் வருதல் உண்டு.  ஆரம்ப யாப்பிலக்கணத்திற்கு நான் சொன்னது சரியாக இருக்கும்.  கீழ்வரும் பாடலில் துக, பக, அக, சக என்று ஓரெதுகை விகற்பம் அமைகிறது. எங்கும் நில்லாமல் தொடர்ந்து ஈற்றுச்சீரில் பொருள் முடிவடைகிறது.

(எ-கா) ஒருவிகற்க இன்னிசை வெண்பா:
துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும் (நாலடியார் -2)

ஈ) பஃறொடை வெண்பா:

பெயரிலேயே இதன் அமைப்பை அறியலாம். பஃறொடை = பல் தொடை. ஒரு தொடை என்றால் இரண்டு அடியெதுகைத் தொடைகள். பல் தொடைகள் பல எதுகைத் தொடைகள். அதாவது வெண்பாவின் பொதுவிலக்கணங்கள் யாவும் பயில, நான்கடிகளுக்கும் அதிகமாக, ஒன்று அல்லது பல விகற்பங்களைக் கொண்டு வரும் வெண்பாக்களை பஃறொடை வெண்பா என்றழைக்கிறார்கள். கலிவெண்பாட்டும் இதுவும் ஒன்றே. என்ன காக்கைப் பாடினியாரின் சொல்படி. கலிவெண்பா ஒருபொருள் நுதலியது (ஒரு பொருள் பற்றியது- ஒரு கதையைப் போன்றது) என்பது மட்டுமே மாறுதல். கலியின் வகையாக காண்கையில் அது கலிவெண்பா. வெண்பாட்டாக கண்டால் பஃறொடை வெண்பா. ஆயினும் தற்போது ஒரு சார் புலவர் பெருமக்கள் பதினோரு அடிவரையில் அமைந்த வெண்பாக்களை பஃறொடை என்றும் அதற்கு மேலமைந்தவற்றை கலிவெண்பாவாகவும் கருதுகின்றனர்.

(எ-கா)ஆறடியான் வந்த பல்விகற்ப பஃறொடை வெண்பா:

பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்
என்னோடு நின்றார் இருவர் ; அவருள்ளும்
பொன்னோடை நன்றென்றாள் நல்லளே;
பொன்னோடைக் கியானைநன் றென்றாளும் அந்நிலையள்;
யானை எருத்தத் திருந்த இலங்கிலைவேல்
தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன்  (யா.கா. உரைமேற்கோள்)

உ) சிந்தியல் வெண்பா:

வெண்பாவிலக்கணக்கங்கள் யாவும் அமைந்து, மூன்று அடிகளாய் அமைந்து, முதல் இரண்டடிகள் நாற்சீரடியான அளவடியாலும், ஈற்றடியான மூன்றாமடி முச்சீரடியான சிந்தடியாலும் அமைந்து, ஒன்று அல்லது இருவிகற்ப எதுகை பெற்று வருவது சிந்தியல் வெண்பா. இதில் இன்னிசை சிந்தியலும் உண்டு.  நேரிசைச் சிந்தியலும் உண்டு.

(எ-கா) நேரிசை சிந்தியல் வெண்பா:
அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வன் உரைப்ப – செறிந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு. (யா.கா. உரைமேற்கோள்)

(எ-கா)இன்னிசை சிந்தியல் வெண்பா:
சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை. (யா.கா. உரைமேற்கோள்)

குறிப்புரை:

பலருக்கும் குழப்பம் தருவது குறளடி/ குறள் வெண்பா, சிந்தடி/ சிந்தியல் வெண்பா இவையே.  இதனை தெளிவிக்கு முகமாக கீழ்வரும் விளக்கத்தைக் காணுங்கள். குறளடி என்றால் இரண்டு சீர்களால் அமைந்த ஓரடி.  குறள்வெண்பா என்றால் இரண்டு அடிகளால் ஆன வெண்பா.  சிந்தடி என்றால் மூன்று சீர்களால் ஆன ஓரடி.  சிந்தியல் வெண்பா என்பது மூன்று அடிகாளால் ஆன வெண்பா.  வெண்பாக்களின் வகைகள் என்பவற்றுடன், வெண்பாவிலக்கணம் அமைந்த அவற்றின் இனமான பாடல்களும் உண்டு. அவற்றை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

வெண்பாட்டும் வகைகளும்-1

03/05/2011

அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா எனப்படும் பாடல்களில் ஓசைநயம், ஒழுங்கமைப்பு, கட்டுறுதியும் கொண்டு இலங்குவது வெள்ளைப்பாட்டு அல்லது வெண்பாட்டு அல்லது வெண்பா எனப்படும் செய்யுள் வகையே.  வெண்பாக்களுக்கு உரிய தளைகளோ, சீர்களோ அல்லாமல் வேறு சீர்களும், தளைகளும் வர முடியாது.  வந்தாலும் அது வெண்பாவாகக் கொள்ள இயலாது. இலக்கியத்தில் திருக்குறள், நாலடியார், நளவெண்பா, கவி காளமேகத்தின் பாடல்கள், இன்னும் சில தனிப்பாடல் திரட்டுகள், இவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

மரபியற் பாடலை கற்கத் தொடங்கும் தமிழன்பர்க்கு வெண்பாவின் இலக்கணக் கட்டுகள் சற்று கடினமானதாகவே தோன்றக் கூடும். இனி வெண்பாக்களின் பொதுவிலக்கணங்களான, அடி/ சீர்/ தளை/ தொடை/ ஓசை/ ஈறு இவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

வெண்பாவிற்குரிய அடியும் சீரும்:

குறளடி (ஓரடிக்கு இருசீர்கள்), சிந்தடி(ஓரடிக்கு மூச்சீர்கள்), அளவடி (ஓரடிக்கு நாற்சீர்கள்), நெடிலடி (ஓரடிக்கு ஐந்துசீர்கள்), கழிநெடிலடி (ஓரடிக்கு ஆறு சீரும் அதற்கு மேலும்) என்பதாக முன்னர் பார்த்தோம்.  இதில் வெண்பாவிற்கு உரித்தானது நாற்சீரடியான அளவடியே.  எல்லா அடிகளும் அளவடியாக வந்தாலும், ஈற்றடி மட்டும் முச்சீரடியான சிந்தடியாக வரும். வெண்பாவின் சிற்றெல்லை இரண்டடி அஃதாவது குறள் வெண்பா. அதற்குக் குறைந்து வருவதில்லை. பேரெல்லை என்பதில் பல கருத்துகள் இருப்பினும், பொதுவாக பேரெல்லை பாடும் புலவனின் உள்ளக் கருத்தே.

சீரென்று வருகையில் வெண்பாக்களில், வெண்பாவுரிச்சீர்/மூவசைச்சீர் என்று வழங்கும் காய்ச்சீர்களும் (தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்), அகவற்சீர்/ஈரசைச்சீர் என்று வழங்கும் இயற்சீர்களும் (தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்), ஈற்றுச் சீராக ஓரசைச்சீர்களும் (காசு, நாள், பிறப்பு, மலர்- என்ற வாய்பாடு) மட்டுமே பயின்று வரும். வேறெந்த சீர்களும் வெண்பாவில் வராது.

வெண்பாவின் ஈற்றுச்சீர் வாய்பாடு:

இது ஆரம்ப யாப்பிலக்கணம் என்பதால், பொதுவாக வெண்பாவில் மட்டுமே ஓரசைச்சீர் அதுவும் ஈற்றுச் சீராக வரும் என்பதை நினைவிற் கொள்ளல் வேண்டும். பாடல்களை நன்குணர்ந்தபின் வேறெங்கு வரும் என்பதை நீங்களாகவே அறிந்து கொள்வீர்கள்.  இந்த ஓரசை ஈற்றுச் சீருக்கான வாய்பாடு – மலர், நாள்.  மேலும் உகரத்துடன் முடியும் காசு, பிறப்பு என்ற மாச்சீர்களும் வெண்பாவில் ஈற்றுச் சீராக வரும்.  இந்த சொற்களே தன்னமைப்பாக உங்களுக்கு ஒரு ஒழுங்கினை உணர்த்தும். அதாவது நேர்பு, நேர், நிரைபு, நிரை என்பதாக மனதில் கொள்ளுங்கள். நேர் நிரை என்ற ஓரசைகள் தெரியும். இதென்ன நேர்பு, நிரைபு?  வெண்பாவின் இலக்கணத்தில் ஈற்றுச்சீர் இப்படித்தால் முடிய வேண்டும் என்ற ஒரு வரையறை உண்டு.  கீழிருக்கும் விளக்கத்தைக் காணுங்கள்:

நேரசை = குறில், குறில்+ஒற்று, நெடில், நெடில்+ஒற்று
(எ-கா) க, கல், கா, கால் என்ற ஓரசைகள்

நேர்பு = நேரசை உகரத்துடன் முடிவது.
காசு, தீண்டு, உண்டு  என்றமைந்த மாச்சீர்கள்.

நிரையசை = இருகுறில், இருகுறில்+ஒற்று, குறில்நெடில், குறில்நெடில்+ஒற்று.
(எ-கா) கன, கனல், படா, படார் என்ற ஓரசைகள்

நிரைபு = நிரையசை உகரத்துடன் முடிவது.
(எ-கா) நிலவு, உணர்வு, உலாவு  என்றமைந்த மாச்சீர்கள்.

வெண்பாவில் தளையும் ஓசைநயமும்:

வெள்ளை என்பதே தூய்மை என்று பொருள்படுவதால், வெண்பாக்களில் இயற்சீர் வெண்டளை (மாமுன்நிரை, விளமுன்னேர்), வெண்சீர் வெண்டளை (காய்முன்நேர்) மட்டுமே பயிலும். வேற்றுத் தளைகளான கலித்தளையோ, வஞ்சித்தளையோ வரவே வராது. அப்படி வருங்கால், தளை தட்டுகிறது என்று சொல்லி பாவானந்தத்தில் சேர்த்துவிடுவர். பாவானந்தம் என்றால் பாடற்குற்றம் என்று பொருள்.

இனி வெண்பாவின் ஓசைநயத்தினைப் பற்றி பார்ப்போம். வெண்பாவிற்குரிய ஓசை செப்பலோசை. செப்பல் = வினாவிற்கு விடை கூறுதல். அஃதாவது வினாவிற்கு விடைகூறுதல் போன்ற ஓசை அமைப்பு.  இந்தச் செப்பலோசையும் அ) ஏந்திசைச் செப்பலோசை, ஆ) தூங்கிசைச் செப்பலோசை, இ) ஒழுகிசைச் செப்பலோசை என்று மூன்றாக வழங்கப்படும்.

(அ) ஏந்திசைச் செப்பல்:
ஒரு வெண்பா முழுதுமே வெண்சீர் வெண்டளை (காய்முன்நேர்) மட்டுமே பயின்றுவந்தால், அந்த வெண்பாவின் ஓசைநயம் ஏந்திசைச் செப்பலோசை அமைந்தது என்று கொள்ளலாம். ஈற்றுச்சீர் தவிர மற்ற சீர்களில், ஒரு காய்ச்சீரை அடுத்து நேரில் தொடங்கும் மற்றொரு காய்ச்சீர் வருவதைக் காண்க. எனவே ஏந்திசைச் செப்பல் என்றால், தேமாங்காய், கூவிளங்காய் மட்டுமே பயின்றுவரும் என அறியலாம்.

(எ-கா)
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. (திருக்குறள்-397)

(ஆ) தூங்கிசைச் செப்பல்:
ஒரு வெண்பா முழுவதுமே இயற்சீர் வெண்டளை (மாமுன்நிரை, விளமுன்நேர்) மட்டுமே பயின்று வந்தால், அதன் ஓசைநயம் தூங்கிசைச் செப்பல் எனப்படுகிறது. ஈற்றுச்சீர் தவிர, மற்றசீர்களில் தளை தட்டாமல், தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்பதாக மாற்றிமாற்றி வருதல் இந்த ஓசைநயமாகும். கீழ்வரும் பாடலில் வருபவை யாவுமே அகவற்சீர்களாகிய இயற்சீர்களே; ஆனால் மாமுன்நிரை, விளமுன்நேர் என்ற இயற்சீர்கள் வெண்டளை பிறழாது வருகின்றன.

(எ-கா)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (திருக்குறள் – 391)

(இ) ஒழுகிசைச் செப்பல்:

ஒர் வெண்பாவில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை இரண்டுமே பயின்று வரும் போதில் வரும் ஓசைநயமே ஒழுகிசைச் செப்பல். கீழ்வரும் நேரிசை வெண்பா அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

(எ-கா)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலதுனக்கு நான்தருவேன்! – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.  (ஔவையார்)

என்று மடியும் இம்மோகம்?

03/05/2011

இந்தபாடல் ஒரு பரிசினைப் பெற்றுத் தந்தது எனக்கு.

என்று மடியும் இந்த அடிமையின் மோகம்.
———————————————————-

(வெண்டளையான் வந்த அறுசீர் ஆசிரிய விருத்தம்  (தேமா, புளிமா, கருவிளங்காய் என்ற அமைப்பு அரையடிக்கு)

வையக் கவிஞன் வளமுடனே
…..வேய்ந்த கவியிற் புதைந்திருந்தேன்;
நெய்த சரிகை வனப்பனைய
…..நேர்த்தி யழகில் நனைந்திருந்தேன்!
மையா மிருளைக் கிழித்திடுமோர்
…..மாத்தீ  யொளியின் வடிவெனவே
மெய்யே சிலிர்க்க எழுந்தவனின்
…..வீர முகத்தை வியந்துநின்றேன்!

எண்ண யினிக்கும் நறுந்தமிழின்
…..இந்நா ளழகை வினவுகையில்
கண்கள் சிவக்க வெடித்தகவி
…..காராய்ப் பொழிந்த உரையிதுவே,
“எண்ணி லடங்காப் புதுமையெழில்
…..பொங்கி வழியப் பொலிந்திடுதே!
விண்ணைக் கடந்த அறிவியலின்
…..விந்தை பலவும் அருமையெனில்…

சொத்தை யெனவே தமிழ்மொழியைத்
…..தூக்கி யெறியும் தமிழினத்தோர்;
எத்திப் பிடுங்கும் வழிகளையே
…..ஏற்று  பிழைக்கும் அடிமனத்தோர்;
சித்தஞ் சிலுப்பு மறிவியலால்,
…..சிந்தை கலங்குஞ் சிறப்பிதுவோ?
வித்தை பலவு மளித்திடுமோர்
…..மேன்மை யறிவின் அழகிதுவோ?

பாக்க ளதில்நம் மனங்கவர்ந்த
…..பார  தியவன் உரையுறுத்த
தூக்கங் கலைந்தே எழுந்திருந்தேன்;
…..சொப்ப னமேயீ தெனவுணர்ந்தேன்!
ஏக்கம் நினைவை அரித்தெடுக்க,
…..என்னில் முகிழ்ந்த வினாவிதுவே;
நோக்கின் றியேநாம் நடத்துகின்ற
…..நொண்டிப் பயணம் முடிவதெந்நாள்?